Published:Updated:

அவள் பதில்கள் 31 - முதியவர்களுக்கு ஏற்படும் சளித் தொந்தரவுக்கு எளிய தீர்வுகள் உண்டா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

- சாஹா

அவள் பதில்கள் 31 - முதியவர்களுக்கு ஏற்படும் சளித் தொந்தரவுக்கு எளிய தீர்வுகள் உண்டா?

- சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

வருடத்துக்கு இரண்டு முறை கொலஸ்ட்ரால் டெஸ்ட் எடுத்துப் பார்ப்பது வழக்கம். கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே எனக்கு நல்ல கொழுப்பு குறைவாகவும் கெட்ட கொழுப்பு அதிகமாக வும் இருக்கிறது. நல்ல கொழுப்பை அதிகரிக்க உணவில் என்ன மாதிரியான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்?

கற்பகம்
கற்பகம்

- கே. அனிதா, கோவை

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, டயட்டீஷியன் கற்பகம்

இந்தப் பிரச்னைக்கான முதல் காரணமாக உங்கள் உணவுப் பழக்கம், உடலியக்கம் உள்ளிட்ட லைஃப்ஸ்டைலை முதலில் ஆராய வேண்டும். கூடவே உங்கள் மன அழுத்த அளவும் பார்க்கப்பட வேண்டும். உங்கள் உணவில் நார்ச்சத்து பிரதானமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நிறைய காய்கறிகள், கீரைகள் இடம்பெற வேண்டியது அவசியம். பழங்களை ஜூஸாக குடிக்காமல், முழுப் பழமாக சாப்பிடப் பழகுங்கள். காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் (Complex Carbohydrates) வகையில் வரும் முழு தானியங்களையும், சிறுதானியங்களையும் சாப்பிடுங்கள். பருப்பு வகைகள், நட்ஸ், சீட்ஸ் போன்றவற்றை உணவுப்பழக்கத்தில் முறையாக்குங்கள். செக்கு எண்ணெய்க்கு மாறுவது சிறந்தது.

எந்த எண்ணெயாக இருந்தாலும் ஒருநாளைக்கு அதிக பட்சமாக ஐந்து டீஸ்பூனுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ட்ரான்ஸ்ஃபேட் (Trans Fat) எனப்படும் கெட்ட கொழுப்புள்ள உணவுகள் கூடவே கூடாது. அதாவது உபயோகித்த எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதன் மூலமும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதன் மூலமும் ட்ரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். வெள்ளைச் சர்க்கரை, மைதா, இனிப்புகள், ரீஃபைண்டு ஆயில் போன்றவையும் தவிர்க்கப்பட வேண்டும்.

சரியான நேரத்துக்குத் தூங்கி, சரியான நேரத்துக்கு விழிப்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. மன அழுத்தம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் முதல் எதிரி. எனவே அதைக் குறைக்கும் முயற்சிகளை உடனே ஆரம்பிக்கவும். தினமும் 45 நிமிடங்கள் ஏதேனும் ஓர் உடற்பயிற்சியைச் செய்வதும் முக்கியம். இவற்றைச் செய்தாலே மெள்ள மெள்ள உங்கள் உடலின் கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.

நானும் என் கணவரும் 75 வயதைத் தாண்டியவர்கள். இருவரும் தனியே இருக்கிறோம். குளிர்காலம் வந்தாலே எங்கள் இருவருக்கும் சளித்தொந்தரவு படுத்த ஆரம்பிக்கும். கொரோனா காலம் என்பதால் மருத்துவமனை செல்லக்கூட பயமாக இருக் கிறது. எங்களைப் போன்ற முதியவர்களுக்கு ஏற்படும் சளித் தொந்தரவுக்கு வீட்டிலேயே பின்பற்றக்கூடிய எளிய வைத்திய முறைகள் இருந்தால் சொல்லுங்கள்...

வரலட்சுமி
வரலட்சுமி

- மோகனலட்சுமி சங்கரன், சென்னை - 24

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

இந்தப் பிரச்னையை மூன்று விதங்களில் அணுகலாம். சிலருக்கு சாதாரண சளி, இருமல் இருக்கும். நெஞ்சில் சளி கட்டியிருக்கும். அந்தச் சளி வெளியேறினாலே நிம்மதியாக உணர்வார்கள். மிளகு, சீரகம், ஓமம் மூன்றை யும் தலா ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து சுத்தமான துணியில் கட்டி முடிச்சிட்டு தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். அதை வடிகட்டி, அந்த நீரை நாள் முழுவதும் குடிநீராகப் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் சிறிது துளசியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆடாதோடா இலைகள், துளசி இலைகள், தூதுவளை இலைகள், சிறிது திப்பிலி சேர்த்துக் கொதிக்கவைத்த நீரை, கஷாயமாக வாரம் இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருவேளை குடிக்கலாம். திப்பிலியை வெறும் கடாயில் லேசாக வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். அதை சிறி தளவு தேனில் குழைத்து தினம் சிறிது சாப்பிடலாம். வீசிங் இல்லை.... நெஞ்சில் உள்ள சளி வெளியேறினால் போதும் என்பவர்கள் இதைச் செய்யலாம்.

இன்னும் சிலருக்கு காய்ச்சல் இருக்காது. ஆனால் கடுமையான மூக்கடைப்பு, சளி இருக்கும். அவர்கள் ஆடாதோடா சூரணம், முசுமுசுக்கை, திப்பிலி போன்ற வற்றை கஷாயமாகச் செய்து குடித்தால், நெஞ்சை அடைத்திருக்கும் சளி வெளியேறிவிடும்.

சிலருக்கு சளி இருக்காது. ஆனால் அடிவயிற்றி லிருந்து இருமல் மட்டும் தொந்தரவு செய்யும். அவர்கள் அதிமதுரம், சித்தரத்தை சேர்த்த கஷாயம் குடிக்கலாம்.

சளித் தொந்தரவு உள்ளவர்களுக் கான பொதுவான ஆலோசனைகள்... குளிர்ச்சியான, மந்தத்தை ஏற்படுத்துகிற எந்த உணவையும் சாப்பிடக் கூடாது. சளி என்பது நெஞ்சுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. வயிற்றில் மந்தம் உண்டானாலும் சளி வரும். கோவிட் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்படு வோருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் வருவதையும், ஒன்றிரண்டு நாள்களில் காய்ச்சல் போனாலும் சளி மட்டும் நீடிப்பதையும் பார்க்கலாம். அதனால்தான் வயிற்றை கவன மாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இரவு தூங்கும்போது திக்கான பால் குடிப்பது, இரவில் தாமதமாகச் சாப்பிடுவது போன்றவை கூடாது. சளி அதிகமாக இருக்கும்போது செரிமானம் சரியாக இருக்காது. எனவே இரவு 7 மணிக்குள் சாப்பிட வேண்டும். பிறகு துளசி, மஞ்சள்தூள் சேர்த்த வெந்நீரைக் குடிக்கலாம்.

பால் குடித்தே ஆக வேண்டும் என்பவர்கள், மஞ்சள் தூள், மிளகு, திப்பிலித்தூள் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். ஆனால், மாலையில் குடிப்பதுதான் சிறந்தது. பால் சேர்க்காத சுக்கு காபி, அதிமதுரம், தேன் கலந்த வெந்நீர் குடிக்கலாம். குளிர்ச்சியான இடங்களில் வாக்கிங் செல்வது, அமர்ந்திருப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

அவள் பதில்கள் 31 - முதியவர்களுக்கு ஏற்படும் சளித் தொந்தரவுக்கு எளிய தீர்வுகள் உண்டா?

இஞ்சி சேர்த்த டீ, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்த துவையல் சாப்பிடலாம். ஓமத்தை வறுத்துப் பொடித்து, சிறிய துணியில் வைத்துக் கட்டி, அவ்வப்போது மூக்கின் அருகில் வைத்து இழுக்கலாம். இது மூக்கடைப்பை சரிசெய்து, சுவாசத்தை சீராக்கும். துளசி இலைச்சாறு அல்லது தும்பை இலைச்சாற்றில் இரண்டு சொட்டு எடுத்து மூக்கினுள் விட்டாலும் மூக்கடைப்பு சரியாகும். மஞ்சளைச் சுட்டு மூக்கின் வழியே புகையை இழுப்பதும்கூட நிவாரணம் தரும்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism