Published:Updated:

அவள் பதில்கள்- 32 - எழுதாத உயில், வாய்வழி விருப்பம்... சட்டப்படி செல்லுமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

சாஹா

அவள் பதில்கள்- 32 - எழுதாத உயில், வாய்வழி விருப்பம்... சட்டப்படி செல்லுமா?

சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்
அ.முகமது சலீம்.
அ.முகமது சலீம்.

பிரபலங்கள், குறிப்பாக திரை நட்சத்திரங்கள் (சமீபத்தில் நடிகை ஜோதிகா உட்பட) பலரும் ஆயுர்வேத சிகிச்சைக்காக அடிக்கடி கேரளா போவதாகக் கேள்விப்படுகிறோம். அதில் புத்துணர்வு கிடைப்பதாகச் சொல்கிறார்களே... ஆயுர்வேத சிகிச்சையில் அப்படி என்ன ஸ்பெஷல்? அதில் என்ன பலன்கள் கிடைக்கும்? யார் வேண்டுமானாலும் இந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாமா?

- சி.ராகினி, சென்னை-28

பதில் சொல்கிறார், கடையநல்லூரைச் சேர்ந்த தலைமை ஆயுர்வேத மருத்துவர் அ.முகமது சலீம்.

என்றுமே இளமையாக இருப்பதற்கு ஆயுர்வேதத்தில் ரகசிய சிகிச்சை ஒன்று உள்ளது. இளமையை மீட்டெடுத்து, அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் அந்த ரகசிய சிகிச்சைக்கு ரசாயனம் மற்றும் வாஜீகரண சிகிச்சை என்று பெயர். ஆயுர்வேதத்தின் எட்டு முக்கிய பிரிவுகளில் இந்த ரசாயன சிகிச்சை மிக முக்கியமான ஒன்று. 4,000 வருடங்களுக்கு முன்பே தனது சரக சம்ஹிதை புத்தகத்தில் சரகர் இந்த ரசாயன வாஜீகரண சிகிச்சை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மூப்பு, பிணி, சாக்காடு மூன்றையும் அண்ட விடாத ரகசியங்களும் உடலைத் தூய்மைசெய்யும் பஞ்சகர்ம சிகிச்சைகளும் இந்த ரசாயன வாஜீகரண சிகிச்சையில் அடக்கம். ஆனால் ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் வெறும் ரிலாக்சேஷன் மசாஜ் போன்றவையே பல இடங்களில் செய்யப்படுகின்றன.

ஆயுர்வேத சிகிச்சைகள் உடலுக்குப் புத்துணர்வு கொடுப்பது மட்டுமன்றி, மனம், உயிர், ஆன்மா அனைத்தையும் புதுப்பிக்கும். ஆயுர்வேத ரசாயன வாஜீகரண சிகிச்சையில் அனுபவம் மிக்க ஆயுர்வேத மருத்துவர்களால் செய்யப்படும் போது மட்டுமே அதன் முழுமையான பலன் கிடைக்கும். அதியமானுக்கு ஔவையார் கொடுத்த நெல்லிக்கனி முதல் தேகம் தகதகவென மின்ன, எம்.ஜி.ஆர் சாப்பிட தங்கபஸ்பம் வரை இதில் பல வகை மருந்துகளும் உண்டு. உள் மருந்துகளைப் போலவே வெளிப்புற சிகிச்சைகளும், மருந்தில்லா சிகிச்சைகளும் ஆயுர்வேதத்தில் உள்ளன.

டயட் தெரபியும் இதில் முக்கியத்துவம் வாய்ந்தது. யானை மாதிரி நிறைய விந்துவையும், குதிரை மாதிரி வேகத்தையும், சிட்டுக்குருவி மாதிரி அடிக்கடி சிற்றின்பம் பெற வைக்கவும் வாஜீகரண சிகிச்சைகள் பலன் தரும் என்று சரக சம்ஹிதை நூல் சத்தியம் செய்கிறது. இந்தச் சிகிச்சைகளைப் பெறத் தேவையான தகுதிகளையும் வரைமுறைகளையும் ஆயுர்வேத மருத்துவரை அணுகித் தெரிந்துகொள்ளலாம். பலரும் குறிப்பிடும் கேரள புத்துணர்வு சிகிச்சையைப் பெற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பணமும் நேரமும் இருப்பவர்கள் அதைச் செய்து கொள்ளலாம். ஆனால் அந்தச் சிகிச்சைகளை ஆயுர் வேதம் என்று சொல்வதை ஏற்க முடியாது.

அவள் பதில்கள்- 32 - எழுதாத உயில், வாய்வழி விருப்பம்... சட்டப்படி செல்லுமா?

என் வயது 58. எங்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகன்கள் எங்களைச் சரியாக கவனித்துக்கொண்டதில்லை. அவரவர் குடும்பம் என ஒதுங்கிவிட்ட நிலையில், மகள்தான் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். இதனால் என் கணவர் தன் சொத்தில் பெரும்பங்கை மகளுக்கும், மீதியை இரு மகன்களுக்கும் கொடுக்க லாம் என அடிக்கடி என்னிடம் சொல்வார். அதை அவர் எழுத்துபூர்வமாகவோ, உயிலாகவோ பதிவு செய்யவில்லை. இந்நிலையில் என் கணவர் திடீரென இறந்துவிட்டார். அவர் வாய்வழியாக என்னிடம் பகிர்ந்துகொண்டதை வைத்து அதே அடிப்படையில் அவரின் சொத்துகளை மகன்களுக்கும் மகளுக்கும் பிரித்துக்கொடுக்க முடியுமா?

- பி.பரிமளா, திருச்சி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முனைவர் குமார் ராஜேந்திரன்.

உங்கள் கணவர் வாய்வழியாக உங்களிடம் பகிர்ந்து கொண்ட அந்தத் தகவல் செல்லும். ஆனால், அதற்கு இருவர் சாட்சியாக இருக்க வேண்டும். அதையும் தாண்டி அந்த விஷயத்தை நீதிமன்றத்தில் நிரூபிப்பது மிகவும் சிரமமானது. உங்கள் கணவர் பகிர்ந்துகொண்டதற்கு வேறு சாட்சிகள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. இல்லாதபட்சத்தில் உங்கள் கணவரின் சொத்துகள் உங்களுக்கு, உங்கள் மூன்று பிள்ளைகளுக்கு என சம மாகவே பிரிக்கப்பட வேண்டும். இதில் உடன்பாடில்லை என்றால் நீங்கள் உங்களுடைய பங்கில் பாதியை மகளுக் குக் கொடுக்கலாம். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.

குமார் ராஜேந்திரன்
குமார் ராஜேந்திரன்

இறந்த நபருக்குப் பூர்வீகச் சொத்துகள் இருக்கலாம். உதாரணத்துக்கு, இறந்தவரின் அப்பாவின் சொத்துகள் இருக்கும்பட்சத்தில், இறந்தவரின் அப்பா உயில் ஏதும் எழுதிவைத்திருந்தால் அதன்படியே அந்தச் சொத்து பாகம் பிரிக்கப்படும். உயில் எழுதப்படாத பட்சத்தில் அது அந்த நபரின் வாரிசுகளுக்குப் போகும். அந்தவகையில் இறந்தவருக்கு வந்த பங்கானது முன்னரே சொன்னதுபோல அவரின் அத்தனை வாரிசுகளுக்கும் சம பங்காகவே பிரிக்கப்படும்.

*****

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism