Published:Updated:

அவள் பதில்கள்! - 18 - காலை உணவுக்கு ஓட்ஸும் கார்ன் ஃப்ளேக்ஸும் ஓகேவா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

சாஹா

ஹெபடைட்டிஸ் பி தொற்று உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- விஜய் @விகடன் இணையத்தில்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலி

ஹெபடைட்டிஸ் பி இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது என்று சொல்லப்படுவதில்லை. ஹெபடைட்டிஸ் பி தொற்றானது சிகிச்சையில் இருப்ப தால் சிலருக்கும், சிகிச்சையே இல்லாமல் சிலருக்கும் கட்டுப்பாட்டில் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் எந்தத் தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் பேருக்கு இந்தத் தொற்று தீவிரமாகி, கல்லீரலை பாதித்து, மஞ்சள் காமாலை, ரத்தம் உறைவதில் சிக்கல், கல்லீரல் செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம். அவர்களும் தடுப்பூசி போடக் கூடாது என அறிவுறுத்தப்படுவதில்லை. அவர்கள் தங் களுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவரின் ஆலோசனை பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

அவள் பதில்கள்! - 18 - காலை உணவுக்கு ஓட்ஸும் கார்ன் ஃப்ளேக்ஸும் ஓகேவா?

வசதி, நேரமின்மை போன்ற காரணங்களுக்காக மேற்கத்திய பாணியில் காலை உணவுக்கு ஓட்ஸ், பிரெட், கார்ன் ஃப்ளேக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடுவது ஆரோக்கியமானது தானா?

- மல்லிகா அன்பழகன், சென்னை-78

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச் சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி

மேற்கத்திய நாடுகளில் இவையெல்லாம் அவர்களின் வழக்கமான உணவுகள் என்பதால் அதிகளவில் பதப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான மேற்கத்திய உணவுகள் அதிகளவில் பதப்படுத்தப்பட்டவையாக இருக் கின்றன. எனவே அத்தகைய உணவுகளை வாங்கும்போது, அவற்றில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளன என லேபிளைப் படிக்கவும். அப்படிச் சேர்க்கப்படுகிற ப்ரிசர் வேட்டிவ்ஸ் நம் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும். உடல் இளைக்க உதவும் என்கிற மாதிரியான கவர்ச்சியான விளம்பரங்களோடு வரும் உணவுகளை அவசியம் தவிர்த்து விடவும். பெரும்பாலான இன்ஸ்டன்ட் உணவுகளில் அதிக சர்க்கரை, அதிக உப்பு அல்லது கொழுப்பு சேர்த்துத் தயாரிக்கப் பட்டிருக்கும். லேபிளைப் பார்த்து அதை உறுதிசெய்து கொள்ளலாம்.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ் போன்றவற்றை சாப்பிடும்போது ஆரோக்கியமான சில விஷயங்களைப் பின்பற்றலாம். உதாரணத் துக்கு ரோல்டு ஓட்ஸ் அல்லது இன்ஸ்டன்ட் ஓட்ஸுக்குப் பதில் ஸ்டீல் கட் ஓட்ஸ் பயன் படுத்தலாம். அதில் நார்ச்சத்து அதிகம். அதிகமாக பதப்படுத்தப்பட்டிருக்காது. ஓட்ஸை வெறும் கஞ்சியாகச் செய்து சாப்பிடு வதற்கு பதில் அதில் நிறைய காய்கறிகள் சேர்த்து உப்புமாவாகவோ, கடலை மாவு, காய்கறிகள் சேர்த்த தோசை, இட்லி, கட்லெட்டாகவோ ஆரோக்கியமான வெர்ஷ னுக்கு மாற்றி சாப்பிடலாம்.

ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கன் எனும் ஒருவகையான நார்ச்சத்து, ரத்தச்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, எடைக்குறைப்புக்கும் உதவும். ஓட்ஸில் க்ளூட்டன் உள்ளது, இல்லாதது என இரண்டும் கிடைக்கின்றன. எனவே க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இதையும் செக் செய்து வாங்கிப் பயன் படுத்தலாம்.

பிரெட்டில் பிரதானமாகச் சேர்க்கப்படுவது மைதா. ஆனால், இன்று ஆரோக்கியமான பிரெட் வகைகள் நிறைய கிடைக்கின்றன. வீட்டிலேயேகூட ஆரோக்கியமான பிரெட் தயாரித்துச் சாப்பிடலாம். சிறுதானியங் களில்கூட பிரெட் செய்ய முடியும். பிரெட்தான் சாப்பிடுவது என முடிவெடுத்துவிட்டால் அதையும் ஆரோக்கியமானதாகப் பார்த்து தேர்வு செய்யவும்.

கார்ன்ஃப்ளேக்ஸும் பதப்படுத்தப்பட்டு, செறிவூட்டப்பட்ட சத்துகள் சேர்க்கப்பட்டே விற்பனைக்கு வருகிறது. இதையும் லேபிளைப் படித்துப் பார்த்து தேர்வு செய்யவும். கார்ன் ஃப்ளேக்ஸுக்கு பதில் ராகி அவல், நெல் பொரி, சிறுதானிய அவல் போன்றவற்றை பால், பழங்கள், டிரை ஃப்ரூட்ஸ் போன்றவை சேர்த்துச் சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப் பட்டு, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் கூடுகிறது.

எனவே, என்ன சாப்பிடுகிறீர்களோ... அதை ஆரோக்கியமாக மாற்றிச் சாப்பிடவும். நாகரிகம் என்ற பெயரில், உங்களுக்கு ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து, நம்முடைய பாரம்பர்ய தானியங் களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவது ஆரோக்கியமானது.

அவள் பதில்கள்! - 18 - காலை உணவுக்கு ஓட்ஸும் கார்ன் ஃப்ளேக்ஸும் ஓகேவா?

நான் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டேன். இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாக எனக்கு உடலில் கடுமையான அரிப்பு இருக்கிறது. இது தடுப்பூசி ஏற்படுத்திய அலர்ஜியாக இருக்குமா? என்ன தீர்வு?

- யாஸ்மின், திருச்சி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

நீங்கள் குறிப்பிட்டிருக்கிற அரிப்புக்கும் போட்டுக்கொண்ட தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களுக்கு ஏற்கெனவே ஏதேனும் அலர்ஜி இருந்திருக்கலாம். `அர்ட்டிகேரியா’ என்ற அலர்ஜி பாதிப்பிலும்கூட இப்படி அரிப்பு ஏற்படலாம். குறிப்பிட்ட சில உணவுகள்கூட உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அந்த ஒவ்வாமை இப்போதுதான் உங்களுக்குத் தெரிய வந்திருக்கலாம்.

மற்றபடி கோவிட் தடுப்பூசி யாருக்கும் இத்தகைய பாதிப்பைத் தருவதில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் இது போன்ற அரிப்போ, அலர்ஜியோ இல்லை, தடுப்பூசிக்குப் பிறகுதான் ஏற்பட்டிருக்கிறது என நினைத்தால் சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். அலர்ஜியின் தீவிரத் தைப் பார்த்து அவர்கள் உங்களுக்கு ஆன்டி அலர்ஜிக்கான மாத்திரைகளையோ அல்லது க்ரீம்களையோ பரிந்துரைப்பார்கள். அதிலேயே சரியாகிவிடும். பயம் வேண்டாம்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.