தினமும் தலைக்கு எண்ணெய் தடவ வேண்டுமா? தேங்காய் எண்ணெய் போதுமானதா? கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதாகச் சொல்லி விற்கப்படும் எண்ணெய்களை நம்பி உபயோகிக்கலாமா?
- சி.தீபிகா, சென்னை-11
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

தினமும் தலைக்கு எண்ணெய் தடவ வேண்டிய அவசியமே இல்லை. இயற்கையாகவே நம் மண்டைப் பகுதியிலுள்ள சருமமானது சீபம் என்ற எண்ணெயைச் சுரக்கிறது. அந்த சீபம் என்ற எண்ணெயே நம் மண்டைப் பகுதி வறண்டுவிடாமல் பாதுகாக்கும். அது குறைவாகச் சுரந்தால் மண்டைப்பகுதி வறண்டு, பொடுகுத் தொல்லை போன்றவை வரும். அது அதிகம் சுரந்தால் அதிக எண்ணெய் வழிவது போலத் தெரியும். முகத்தில் பருக்கள் வரும். சொரியாசிஸ் போன்ற தொற்று வரவும் அது காரணமாகும். அதற்காக தலைக்கு எண்ணெய் தடவுவதே தேவையில்லை என்று அர்த்தமல்ல. எண்ணெய் தடவி ஒன்றிரண்டு மணி நேரம் வைத்திருந்து விட்டு, கூந்தலை அலசிவிடுவது நல்லது. எண்ணெய் தடவிக்கொண்டு வெளியே செல்வது சூழல் மாசுள்ள இந்தக் காலத்துக்கு ஏற்றதல்ல.
தேங்காய் எண்ணெயில் இயல்பிலேயே ஈரப்பதம் அதிகமிருக்கும். தலையின் வறட்சியைப் போக்கும். ஆனால், பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு தேங்காய் எண்ணெய் அந்தப் பிரச்னையைத் தீவிரப் படுத்தும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண் ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகெண்ணெய் ஆகிய ஐந்தையும் சம அளவு கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்துக் குளிப்பதுதான் சரி. முடி வளர்ச்சிக்கு உதவும் என்று விற்கப்படுகிற எண்ணெய் எல்லாமே ஏமாற்றுவேலைதான்.
கூந்தல் வளர்ச்சி என்பது எண்ணெயால் ஏற்படுவ தில்லை. நம் ரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய இரண்டும்தான் கூந்தல் வளர்ச்சியைத் தீர்மானிப்பவை. கூந்தல் வளர்ச்சி என்பது பரம்பரைத் தன்மையைப் பொறுத்தது. நம் மரபணுக்கள்தான் கூந்தலின் நீளத்தையும் அடர்த்தியையும் நிர்ணயிப்பவை.
மண்டைப்பகுதி காயாமலும், முடி வறண்டு போகாமலிருக்கவும் உதவுவதுதான் எண்ணெயின் வேலை. கூந்தல் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் விஷயங்களை சரிசெய்யவே எண்ணெய் உதவும். குறிப்பிட்ட ஓர் எண்ணெயால் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டிவிட முடியும், அடர்த்தியை அதிகரிக்கச் செய்ய முடியும் என்பது உண்மையானால் நம்மூரில் வழுக்கைத் தலையுடன் ஒருவரையும் பார்க்க முடியாதே...
கூந்தலின் வேர்க்கால்களைக் காப்பாற்ற முடியுமே தவிர, புதிதாகப் படைக்க முடியாது. அதற்கு எந்த எண்ணெயும் உதவாது.

என் 10 வயது மகனுக்கு சோயா உணவுகள் மிகவும் பிடிக்கும். பெரும்பாலும் எல்லா உணவுகளிலும் சோயா சங்க்ஸ் சேர்த்துதான் சமைத்துக்கொடுப்பேன். ஆண் பிள்ளைகளுக்கு சோயா உணவுகள் அதிகம் கொடுத்தால் பெண்களைப் போல மார்பக வளர்ச்சி வரும் என்று எங்கேயோ படித்தேன். இது உண்மையா... சோயா நல்லதா... ஒரு நாளைக்கு எவ்வளவு கொடுக்கலாம்?
- பவித்ரா சேகர், சின்னமனூர்
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன்
சோயா சங்க்ஸ் என்பவை பதப்படுத்தப்பட்டவை என்பதால் அவை நல்லதல்ல. கூடியவரையில் அதைக் குறைத்துவிடுங்கள். சைனீஸ் மக்களைப் பொறுத்தவரை சோயாவை `டோஃபு' (Tofu) எனப்படும் சோயா பனீர் அல்லது `டெம்ப்பே' (Tempeh) எனப்படும் புளிக்கவைத்த சோயா - இந்த வடிவங்களில்தான் எடுத்துக்கொள்வார்கள்.
சோயா சங்க்ஸுக்கு பதில் ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் சோயா பீன்ஸை வாங்கிப் பயன்படுத்தலாம். இப்போது சோயா பீன்ஸ் சீசனும்கூட. பச்சைப்பட்டாணி போல உரித்துப் பயன்படுத்தும் வகையில் ஃப்ரெஷ் சோயா பீன்ஸ் கிடைக்கிறது. உரித்தால் உள்ளே சிவப்பு நிறத்தில் சோயா இருக்கும்.

கேழ்வரகில் செய்யப்பட்ட பல உணவுப்பொருள்கள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதற்கும், ஃப்ரெஷ்ஷாக கேழ்வரகுக் கூழ் தயாரித்துக் குடிப்பதற்குமான வித்தியாசத்தைப் போன்றதுதான் இதுவும்.
முழு கேழ்வரகை வாங்கி, முளைகட்டச் செய்து, வெயிலில் உலர்த்தி அரைத்துப் பயன்படுத்துவோம். அந்த மாவில் முதல்நாளே காய்ச்சி, புளிக்கவைத்த கேழ்வரகுக் கூழ் தைராய்டு பாதிப்பை ஏற்படுத்தாது.
உங்கள் குழந்தைக்கு சோயா சங்க்ஸ் மிகவும் பிடிக்கும் என்று சொல்வதால் வாரத்துக்கு அதிகபட்சமாக இரண்டு நாள்களுக்கு 50 கிராமுக்கு மிகாமல் கொடுக்க லாம். அந்த அளவைத் தாண்ட வேண்டாம். வெறும் சோயாவை மட்டும் கொடுக்காமல் உங்கள் குழந்தைக்கு ராஜ்மா, காராமணி, டபுள் பீன்ஸ், பட்டர் பீன்ஸ், பட்டாணி, சன்னா போன்றவற்றையும் மாற்றி மாற்றிக் கொடுத்துப் பழக்குங்கள்.
சோயா உணவுகள் சாப்பிடும் ஆண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்கும் என்பதற்கான ஆதாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை என்றாலும் எதையுமே அளவோடு சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது.
உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை
`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,
avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.