Published:Updated:

அவள் பதில்கள் - 34 - ஹிப்னோதெரபி மூலம் ஒருவரை வசியப்படுத்த முடியுமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

சாஹா

அவள் பதில்கள் - 34 - ஹிப்னோதெரபி மூலம் ஒருவரை வசியப்படுத்த முடியுமா?

சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

ஹிப்னோதெரபியின் மூலம் நமக்குப் பிடிக்காதவர் களைக்கூட வசியம் செய்து நம் பக்கம் இழுத்துவிட முடியும் என்று சொல்வது எந்தளவுக்கு உண்மை? அதென்ன ஹிப்னோதெரபி?

- மங்களா ராம், கோவை

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, லைஃப் கோச் மற்றும் உளவியல் ஆலோசகர் ஆர்.எல்.ராஜா

ஆர்.எல்.ராஜா
ஆர்.எல்.ராஜா

`ஹிப்னோதெரபி' அல்லது `ரிக்ரெஷன் தெரபி' என்பது ஒருவரை வசியப்படுத்தச் செய்யப்படுவதல்ல. 'ஹிப்னோ' என்றால் அரை தூக்கநிலை அல்லது அரை விழிப்புநிலை. அதாவது சம்பந்தப்பட்ட நபரை அரை தூக்கம் மற்றும் அரை விழிப்புநிலையில் வைத்துக் கொடுக்கப்படுகிற தெரபி. கிட்டத்தட்ட தியானநிலைக்கு இணையானது. அதாவது இந்த தெரபிக்கு உட்படுத்தப்படுகிற நபரை, அவரின் அப்போதைய நடத்தைக்கு காரணமான கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்வார் தெரபிஸ்ட். எந்த விஷயங்கள் அவரின் நிகழ்கால மாற்றத்துக்கு காரணம் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக இப்படிச் செய்வார். சிலர், `நான் இப்படித்தான் நடந்து கொள்வேன், இதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது' என்று சொல்வார்கள். அப் போது அவரை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் சிலர், `நான் இப்படி நடந்துகொள்கிறேன். எனக்கே இது பிடிக்க வில்லை... ஆனாலும் செய்கிறேன்' என்பார்கள். அப்படிப் பட்டவர்களுக்கானதுதான் இந்த தெரபி.

`எனக்கு ரொம்ப கோபம் வருது. ஆனா, காரணம் தெரியலை, மாறணும்னுதான் நினைக்கிறேன்' என் பார்கள். அந்தநிலையில் ஹிப்னோதெரபிக்கு வருபவர் களை, அரை விழிப்புநிலை அல்லது அரைத் தூக்க நிலைக்கு உட்படுத்துவார்கள். அந்த நிலையிலும் தான் என்ன பேசுகிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருப்பார்கள். அது முடிந்ததும் அவர்களை நிகழ்காலத்துக்கு அழைத்துவந்து, அவர்களின் நடத்தை மாற்றத்துக்கான காரணங்களை ஆராய்ந்து முடிவுக்கு வருவோம். அது அவர்கள் குழந்தை யாக இருந்தபோதோ, வேறு காலகட்டத்திலோ நடந்த ஒரு சம்பவத்தின் காரணமாக இருக்கலாம். அதை தெரபிஸ்ட்டுகள் வெளியே கொண்டு வருவார்கள். கடந்த காலத்தில் நடந்த அந்தச் சம்பவம்தான் தன்னை தற் போதைய நடத்தையை நோக்கித் தூண்டுகிறது என்று உணரச் செய்வோம்.

கடந்த காலத்தில் நடந்த அந்தச் சம்பவத்தின் சாயலில் நிகழ்காலத்தில் ஏதேனும் நடக்கும்போதெல்லாம் அவர்கள் தூண்டப்படுவார்கள். ஹிப்னோதெரபியின் உதவியோடு அந்தச் சம்பவம் அவர்களது ஆழ்மனத்தி லிருந்து வெளியேற்றப்படும். அதன்பிறகு அடுத்தமுறை அதே மாதிரியான தூண்டல் ஏற்படும்போது முன்புபோல நடந்துகொள்ளாமல் பக்குவப்பட்டவர்களாக மாறுவார்கள். நடந்தது நடந்துவிட்டது... அதை நினைத்து இப்போது ரியாக்ட் செய்யத் தேவையில்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள். யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு வாழப் பழகுவார்கள். இதுதான் ஹிப்னோதெரபி. உங்களுக்குச் சொல்லப்பட்டதுபோல இந்த தெரபியின் மூலம், பிடிக் காதவர்களைக்கூட வசியம் செய்து யார் பின்னாலும் வரவழைக்கவெல்லாம் முடியாது.

இந்த அரைத்தூக்க நிலைக்கு மருந்துகள் பயன்படுத்த மாட்டோம். அதனால் அரைத்தூக்க நிலை என்றாலும் சம்பந்தப்பட்ட நபருக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர முடியும். சிகிச்சையின்போது மூன்றாம் நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கிளினிக் செட்டப்பிலும் தற்போது கொரோனா காலம் என்பதால் ஆன்லைனிலும் இந்தச் சிகிச்சை செய்யப்படுவதால் பாதுகாப் பின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. உலகம் முழுவதும் இந்தச் சிகிச்சை இப்படித்தான் செய்யப்படுகிறது.

அவள் பதில்கள் - 34 - ஹிப்னோதெரபி மூலம் 
ஒருவரை வசியப்படுத்த முடியுமா?
jgroup

என் வயது 28. என் கூந்தல் மிகவும் வறண்டு, தேங்காய் நார் மாதிரி இருக்கிறது. அடர்த்தியும் குறைவாக இருக்கிறது. நான் கூந்தலை அயர்ன் செய்யும் கருவியை வாங்கி, வீட்டிலேயே தினமும் அயர்ன் செய்துகொள்ளலாமா? ஸ்ட்ரெயிட்டனிங் செய்துகொள்ள பயமாக இருக்கிறது. ஹேர் அயர்ன் கருவி வாங்கும்போது எப்படித் தேர்வு செய்ய வேண்டும்... எப்படி உபயோகப் படுத்த வேண்டும்?

- கே.சங்கவி, சென்னை-33

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

வசுந்தரா
வசுந்தரா

உங்களுடைய முடி, நார் போல வறண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக் கிறீர்கள். இந்த நேரத்தில் கூந்தலை அயர்ன் செய்வது நல்லதல்ல. ஏனென்றால் அயர்ன் என்பது அதிகபட்ச சூட்டை உபயோகித்துச் செய்யப்படுவது. என்றாவது ஒருநாள் கூந்தலை அயர்ன் செய்துகொள்வது ஓகே. ஆனால், வீட்டிலேயே அதற்கான கருவியை வாங்கிவைத்துக்கொண்டு அடிக்கடி அயர்ன் செய்வது கூந்தலுக்குக் கெடுதலானது. முடியின் வழியே வெப்பம் உள்ளே ஊடுருவி, கூந்தலின் வேர்க்கால்களை பாதிக்கும். முடி வளர்ச்சி குறையும். முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் வளர்வது சிரமமாகும். எனவே அயர்னிங் ஆசையை மறந்துவிடுங்கள். உங்கள் கூந்தலுக்கு ஊட்டமளிக்கக்கூடிய விஷயங்கள் பற்றி யோசியுங்கள்.

தரமான எண்ணெய், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் உபயோகிக்கலாம். ஹேர் பேக் உபயோகிக்கலாம். கூந்தலை ஸ்டைலிங் செய்வதைவிடவும் உங்களுக்கு இப்போதைய தேவை, கூந்தலுக்கு போஷாக்கு கொடுப்பது. எனவே, அதில் கவனம் செலுத்துங்கள். அதையும் மீறி கூந்தலை அயர்ன் செய்தாக வேண்டும் என நினைத்தால் பெரிய கடைகளில் கிடைக்கும், ‘ஹீட் ரெசிஸ்டன்ட் ஸ்டைலிங் புராடக்ட்ஸ்’ அல்லது ‘தெர்மல் ஸ்டைலிங் புராடக்ட்ஸ்’ உபயோகிக்கலாம். இந்தப் பொருள்களை உபயோகிக்கும் போது, அயர்ன் செய்வதால் ஏற்படும் சூட்டின் காரணமாக கூந்தல் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

ஹேர் அயர்னுக்கான கருவி வாங்கும்போது `செராமிக் அயர்ன்' என்று பார்த்து வாங்கலாம். அது சூட்டை ஒரே மாதிரி வெளியேற்றும். தெர்மோ ஸ்டாட் இருப்பதால் போதுமான வெப்பம் வந்ததும் தானாக ஆஃப் ஆகிவிடும். ஹேர் அயர்ன் செய்யும்போது 180 டிகிரி சென்டிகிரேடு முதல் 220 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பம் கொடுக்கப்படும். எப்போதுமே குறைந்த அளவு வெப்பத்தில் வைத்து அயர்ன் செய்ய வேண்டும். அதிக வெப்பத்தில் வைத்துச் செய்யும்போது கூந்தல் பலவீனமடைந்து உதிரும். எப்போதும் கூந்தலின் வேர்க்கால்களின் அருகே அயர்ன் செய்யக் கூடாது.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism