Published:Updated:

அவள் பதில்கள் - 22 - குழந்தைக்கு டான்சில்ஸ்... வீட்டு வைத்தியம் உதவுமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

சாஹா

அவள் பதில்கள் - 22 - குழந்தைக்கு டான்சில்ஸ்... வீட்டு வைத்தியம் உதவுமா?

சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும் அடிக்கடி உடல்நலமின்றிப் போவதைத் தடுக்கவும் அவர்களுக்கு கடைகளில் விற்கும் லேகியங்களைக் கொடுக்கலாமா? இதை வீட்டிலேயே நாம் தயாரித்துக் கொடுக்க முடியுமா? டான்சில்ஸ் வந்து அவதிப்படும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கொடுக்கக்கூடிய மருந்து ஒன்று சொல்லுங்களேன்...

- சி.மணிமேகலை, தஞ்சாவூர்.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.

அவள் பதில்கள் - 22 - குழந்தைக்கு டான்சில்ஸ்... வீட்டு வைத்தியம் உதவுமா?

குழந்தைக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்றால் முதலில் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். குழந்தை களின் உடல்நல பாதிப்புக்கு நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதது முக்கிய காரணம் என்றாலும், அதை மீறிய வேறு காரணங்களும் இருக்கக்கூடும். எல்லாவற்றையும் லேகியம் கொடுத்து, சரி செய்துவிட நினைக்கக் கூடாது. நோய் எதிர்ப் பாற்றலுக்கு லேகியம்தான் அவசியம் என்று அர்த்தமில்லை. வீட்டிலேயே கற்பூரவள்ளி, துளசி, சித்தரத்தை, அதிமதுரம் போன்றவற்றை சாறு எடுத்து தேன் கலந்து கொடுக்கலாம். ஆனால், இதை யெல்லாம் தினமும் செய்ய முடியாது, குழந்தையின் நோய் எதிர்ப்பாற்றல் மிக மோசமாக இருக்கிறது என்ற நிலையில் மருத்துவ ஆலோசனையுடன் லேகியங்களைக் கொடுக்கலாம். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளில் லேகியம் என்பது முக்கியமான ஒன்று. ஆனால், நீங்கள் கேட்டிருப் பதைப்போல அதை வீட்டில் தயாரிப்பதென்பது தேவையற்றது. லேகியம் தயாரிக்கவென ஒரு முறை இருக்கிறது. குறிப்பிட்ட சூட்டில், எந்தெந்தப் பொருளை எப்போது சேர்க்க வேண்டும் என நிறைய நுணுக்கமான விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். சமைப்பது போன்ற வேலையல்ல அது. அதற்கென மருத்துவ அறிவும் அனுபவமும் வேண்டும்.

குழந்தைக்கு டான்சில்ஸ் இருந் தால் அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து தனித்தனியே பொடித்துக் கொள்ளவும். ஒவ்வொன்றிலும் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, அத்துடன் துளசி இலைகள் 10, கற்பூரவள்ளி இலைகள் 5 ஆகிய எல்லாவற்றையும் சிறிது ஆடா தொடை இலைச்சாறு விட்டு அரைத்துக்கொள்ளவும்.

கலவையை சின்னச் சின்ன மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி எடுக்கவும். அப்படிக் காய வைக்காவிட்டால் பூசணம் பிடித்துவிடும். காயவைக்க முடியாதவர்கள் சிரப் வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம். மாத்திரையாக எடுப்பதானால் மூன்று வேளைகளுக்குத் தலா ஒன்று, சிரப் என்றால் தேன் கலந்து மூன்று வேளைகளுக்கு தலா ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். இதை எடுத்துக் கொள்வதோடு, குழந்தையை தினமும் வெந்நீரில் கல் உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து வாய் கொப்புளிக்கச் சொல்லவும். இந்த மருந்தை எடுத்துக்கொண்ட பிறகு, குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் செய் தால் எந்த மருந்துக்கும் பலன் இருக்காது.

அவள் பதில்கள் - 22 - குழந்தைக்கு டான்சில்ஸ்... வீட்டு வைத்தியம் உதவுமா?

வெறும் சீயக்காயை அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் தலைக்குக் குளிக்கப் பயன்படுத்துகிறேன். இதுவே போதுமானதா? சீயக்காயுடன் வேறு பொருள்கள் சேர்க்க வேண்டுமா?

-வே.தேவஜோதி, மதுரை -17

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி.

அவள் பதில்கள் - 22 - குழந்தைக்கு டான்சில்ஸ்... வீட்டு வைத்தியம் உதவுமா?

வெறும் சீயக்காய்தூள் மட்டும் உபயோகித் தால், கூந்தல் வறண்டு போகும். அதனால் ஒரு கிலோ சீயக்காய்க்கு, அரை கிலோ வெந்தயம், அரை கிலோ பயத்தம்பருப்பு (முழுதாக இருக்கும் பச்சைப்பயறு உபயோகிக்க வேண்டாம்), 100 கிராம் பூலாங் கிழங்கு, 50 கிராம் பூந்திக்கொட்டை, வாசனை வேண்டுமென்றால் வெட்டிவேர் 10 கிராம் ஆகியவற்றை வெயிலில் காயவைத்து, மெஷினில் கொடுத்து அரைத்து வாங்கவும். இப்படி அரைக்கும் சீயக்காய்தூள், எல்லா வகையான கூந்தலுக்கும் ஏற்றது. இதில் புரதச் சத்து, கண்டிஷனர் இரண்டுமே உள்ளன. மிகச் சிறந்த வாஷாகவும் இருக்கும். வெந்தயம் சேர்ப்பதால் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

பொதுவாக சீயக்காய் உபயோகிப்பதாக இருந்தால், எண்ணெய் வைத்து சிறிது நேரம் ஊறிக் குளிப்பது சிறந்தது. ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பலருக்கும் அதற்கு நேரமோ, பொறுமையோ இல்லை. மேற்குறிப்பிட்ட காம்பினேஷனில் சீயக்காயை அரைத்து வைத்துக்கொண்டால், எண்ணெய் வைக்காமலும் தலையை அலசலாம். வெறும் சீயக்காய் பயன் படுத்தும்போது ஏற்படும் கூந்தல் வறட்சி இதில் இருக்காது. கூந்தல் மென்மையாக இருக்கும். இதைப் பயன்படுத்தித் தினம்தோறும் குளிக்கத் தேவையில்லை. வாரம் இருமுறை இப்படிக் குளித்தால் போதும்.

சென்னை, ஓ.எம்.ஆரில் (பழைய மாமல்லபுரம் சாலை) அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க பணம் கட்டினோம். இரண்டு வருடங்களாகியும் வீடு கட்டி முடிக்கப்படவில்லை. பில்டர் பிடிகொடுத்துப் பேச மறுக்கிறார். இதிலிருந்து மீள ஏதேனும் வழி இருக்கிறதா?

- பி. மீனாட்சி, சென்னை- 24

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கட்டுமான துறைக்கான மார்க்கெட்டிங் ஆலோசகர் சார்லஸ்.

அவள் பதில்கள் - 22 - குழந்தைக்கு டான்சில்ஸ்... வீட்டு வைத்தியம் உதவுமா?

உங்களைப் போல அப்பார்ட்மென்ட் வாங்க பணம் கட்டப்பட்டு, கட்டுமான வேலை முடியாமல் இழுபறியில் இருக்கும் புராஜெக்ட்டுகள் சென்னையில் நிறைய உள்ளன. இதிலிருந்து வெளியே வர நீங்கள் தமிழ்நாடு `ரெரா' (Real Estate

Regulatory Authority- RERA) கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட அந்த அப்பார்ட்மென்ட்டில் வீடு வாங்கியிருக்கும் அத்தனை பேரும் முதலில் அசோசியேஷன் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அந்த அசோசியேஷனில் வீடு வாங்கியவர்களில் 70 சதவிகிதம் பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் சேர்ந்து ரெரா கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தால் உங்கள் பணத்தைத் திரும்ப பெற்றுத் தரவோ, நீங்கள் அனைவரும் சேர்ந்து இழுபறியிலுள்ள கட்டுமானப் பணிகளை முடிக்கவோ கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும். இதுதான் முதல் படி.

உங்கள் கையில் உள்ள பணத்தைப் பொறுத்து அது சில லட்சங்களோ, கோடிகளோ... அந்த பட்ஜெட்டுக்கேற்ப ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள வீடுகளை வாங்குவதுதான் புத்திசாலித்தனமானது. புதிதாகக் கட்டப்படவிருக்கிற முடிக்கப்படாத நிலையிலுள்ள வீடுகளில் பணத்தைப் போட்டு, அது வருடக்கணக்கில் கட்டி முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற சிரமத்துக்குள் சிக்கிக்கொள்ள நினைக்காதீர்கள்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002

என்ற முகவரிக்கோ, avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism