Published:Updated:

அவள் பதில்கள் - 45 - விசேஷ நாள்களில் விருந்து... அடுத்த நாள் பட்டினி... இந்தப் பழக்கம் சரியா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

- சாஹா

அவள் பதில்கள் - 45 - விசேஷ நாள்களில் விருந்து... அடுத்த நாள் பட்டினி... இந்தப் பழக்கம் சரியா?

- சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

இதுநாள் வரை குடும்ப வரவு - செலவுக் கணக்கை நான்தான் கவனித்துக்கொண்டிருந்தேன். தற்போது என் மனைவியிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிட்டேன். ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் என்னிடமே கேட்கிறாள். என் மனைவியே குடும்ப வரவு - செலவு கணக்கைப் பார்க்க வழி சொல்லுங்களேன்.

 ஜி.ஆர்.ஹரி
ஜி.ஆர்.ஹரி

- கே. சந்திரசேகரன், சேலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.ஆர்.ஹரி

ஒவ்வொரு குடும்பத்துக்கும் நல்ல வரவு-செலவுத் திட்டம் என்பது அவசியம். அது சரியாக இருந்தால்தான் அடுத்த தலைமுறைக் கான சேமிப்பு உள்ளிட்ட அனைத்தையும் திட்டமிட முடியும். பட்ஜெட் என்ற வார்த்தை ஏதோ மத்திய, மாநில அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமானது என்ற நினைப்பிலும், அது ராக்கெட் சயின்ஸ் போன்றது என்ற எண்ணத்திலும் அதிலிருந்து பலரும் விலகியே இருக்கிறார்கள். உண்மையில் பட்ஜெட் என்பது ரொம்பவே சிம்பிளானது.

ஒரு மாதத்தின் வருமானம் என்ன, அதில் செலவுகள் எவ்வளவு என ஒரு நோட்டில் எழுதிவந்தாலே, பட்ஜெட்டை ரெடி செய்து விடலாம். செலவுகளை இரண்டுவகையாகப் பிரித்துக்கொள்ளலாம். மாதந்தோறும், வாரந்தோறும், தினந்தோறும் வரும் செலவுகளை ‘ரெகரிங் எக்ஸ் பெண்டிச்சர்’ அதாவது அடிக்கடி வரும் செலவுகள் என்று சொல்வோம். உதாரணத்துக்கு... குழந்தையின் பள்ளி வேன் கட்டணம், மளிகை செலவு, மின்சார கட்டணம், வீட்டு வாடகை, சொந்த வீடு என்றால் இ.எம்.ஐ... போன்றவை. இன்னொன்று எப்போதாவது வரும் செலவு களான ‘நான்ரெகரிங் எக்ஸ்பெண்டிச்சர்’. வீட்டுக்கு வாங்கும் டிவி, டூர், எதிர்பாராத மருத்துவச் செலவு போன்றவை.

பட்ஜெட் போடும்போது ரெகரிங் செலவு களை அவசியம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பட்ஜெட் போடும்போதே அதில் சேமிப்புக்கு ஒரு தொகையை ஒதுக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். மாத வருமானத்தில் 15 முதல் 20 சதவிகிதத்தை ஏதேனும் ஒரு சேமிப்பில் போட்டு வந்தால் அந்தச் சேமிப்புத் தொகையை நான்ரெகரிங் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அமெரிக்க மக்களின் செலவுப் பழக்கம் வேறு மாதிரியானது. அவர்கள் கடன் வாங்கி யாவது கார் வாங்குவார்கள், வீடு வாங்கு வார்கள். இ.எம்.ஐ கட்ட முடியாமல் வாங்கியதை வங்கியிடமே திருப்பிக் கொடுப்பார்கள். சேமித்து பிறகு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் கிடையாது. கடன் வாங்கி செலவு செய்வதென்பது அவர்களது கலாசாரம். ஆனால் இந்தியர்களின் மனநிலையோ வேறு. முதலில் வருமானம் ஈட்ட வேண்டும். பிறகு அதிலிருந்து சேமிக்க வேண்டும். அதன் பிறகு அதிலிருந்து செலவு செய்ய வேண்டும் என்று நினைப்போம்.

உங்கள் மனைவிக்கு இந்த விஷயங்கள் புதியவை என்பதால் ஆரம்பத்தில் நீங்கள் சில வழிகளில் அவருக்கு உதவலாம், வழிகாட்ட லாம். அதாவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து பட்ஜெட்டுக்கான வரவு, செலவுகளை எழுத வேண்டும். ரெகரிங் செலவுகளுக்கென ஒரு தொகையை ஒதுக்கி, அதில் உங்கள் மனைவி முழு சுதந்திரத்துடன் இயங்க அனுமதிக்க வேண்டும். அதில் வேறு யாரும் தலையிடக் கூடாது. நான்ரெகரிங் செலவுகளுக்கு மட்டும் எல்லோரும் கலந்து பேசி முடிவு செய்யலாம்.

அவள் பதில்கள் - 45 - விசேஷ நாள்களில் விருந்து... அடுத்த நாள் பட்டினி... இந்தப் பழக்கம் சரியா?

ரெகரிங் செலவுகளுக்கு, தானே செலவு செய்யலாம்... அதுகுறித்து கணவரிடம் ஆலோசனை கேட்க வேண்டாம் என்ற நம்பிக்கை அவருக்கு வர வேண்டும். ஆனால் நம்மூரில் பல குடும்பங்களிலும் பெண்களிடம் வரவு, செலவுகளை ஒப்படைத்துவிட்டு, பிறகு ஒவ்வொன்றுக்கும் கேள்வி கேட்பதை பல ஆண்களும் வழக்கமாக வைத்திருப்பதுதான் பிரச்னையே. ஒருவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்கும்போது அந்தப் பொறுப்பை சிறப்பாகச் செய்யும் சுதந்திரத்தை அவருக்கு கொடுக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களிலும் இந்த விதிதான் பின்பற்றப்படும். அந்தச் சுதந்திரத்தை உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடுங்கள். ஆரம்பத்தில் தவறுகள் செய்வார். அவற்றைப் பெரிதுபடுத்திக் கேள்விகள் கேட்க வேண்டாம். அனுபவங்களிலிருந்து தானே கற்றுக் கொள்வார்.

இங்கே இன்னொரு விஷயத்தை யும் குறிப்பிட வேண்டும். வழக்கமாக கணவர் சம்பாதிக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஃபிக்ஸட் டெபா சிட்டிலோ, ஷேர் மார்க்கெட்டிலோ முதலீடு செய்து வைத்தால் அதில் வரும் வருமானத்துக்கு கணவர்தான் வரி கட்ட வேண்டும் என்பது இந்திய வருமான வரி சட்டம் சொல்வது. அதுவே கணவர், தன் மனைவியிடம் வீட்டுச் செலவுக்காக 50,000 ரூபாய் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். மனைவி 40,000 ரூபாயைச் செலவு செய்து விட்டு, 10,000 ரூபாயை ஷேரிலோ, ஃபிக்ஸட் டெபா சிட்டிலோ, சீட்டுத் திட்டத்திலோ முதலீடு செய்கிறார் என்றால், அதிலிருந்து வரும் தொகைக்கு மனைவிதான் வரி கட்ட வேண்டும்.

இந்திய வருமான வரி சட்டத்தின் படி ஒரு தனிநபர், 2,50,000 ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி கட்ட வேண்டாம். அந்த வகையில் மனைவி முதலீடு செய்யும் விதத்தில் அதிலிருந்து வருமானத்துக்கு வரி கட்டும் சுமை கணவருக்கு வராது. 2,50,000-க்குள்தான் மனைவிக்கு அந்த வருமானம் வருகிறது என்றால் அவரும் வருமான வரி விலக்கு பெறு கிறார். இதை புத்திசாலித்தனமான வரித்திட்டமாகவும் அணுகலாம்.

விடுமுறை, விசேஷ தினங்களில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு மறுநாள் `மந்தமாக இருக்கிறது, சாப்பிடப் பிடிக்கவில்லை' என்று பட்டினி கிடக்கிறார் என் கணவர். இது சரியான முறையா... இதை எப்படித் தவிர்ப்பது?

 கற்பகம்
கற்பகம்

- சங்கீதா ராஜாராம், ராஜபாளையம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

விடுமுறைகளும் விசேஷங்களும் விருந்துகளும் நம் வாழ்வோடு ஒன்றியவை. விடுமுறை மற்றும் விசேஷ நாள்களில் ஒருவேளைக்கு பலமான விருந்து சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் பட்டினி கிடப்பதைத் தொடர்ந்து பின்பற்றுவது சரியான பழக்கமல்ல. இந்தப் பழக்கத்தால் `அசிடிட்டி' எனப்படும் அமிலம் சுரக்கும் பிரச்னை வரும். ஒருவேளை பலமாக சாப்பிட்டுவிட்டதாக உணர்ந்தால் அடுத்தவேளைக்கு குறைவான உணவு சாப்பிடலாம். உதாரணத்துக்கு மதியத்துக்கு சாம்பார், கூட்டு, பொரியல், ஸ்வீட் என ஃபுல் மீல்ஸோ அல்லது பிரியாணியோ சாப்பிட்டால், மாலை வேளை எதையும் சாப்பிடாமல், இரவுக்கு சூப் அல்லது பழம் மட்டும் சாப்பிடலாம். இப்படிச் செய்தால் மறுநாள் காலை எழுந்திருக்கும்போது புளித்த ஏப்பம், வயிற்று எரிச்சல் போன்றவை இருக்காது.

நம்முடைய ஒவ்வொரு வேளை உணவுமே பேலன்ஸ்டாகதான் இருக்க வேண்டும். இரவு நேர பார்ட்டி, விருந்துக்குப் போவதாக இருந்தால் அன்றைய தினம் காலை மற்றும் மதியத்துக்கு மிதமான உணவு களை எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவை முடித்த பிறகு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சரியான நேரத்துக்குத் தூங்க வேண்டும். இரவில் தாமதமாகச் சாப்பிட்டுவிட்டு, தாமதமாகத் தூங்கச் செல்வதால் அசிடிட்டி பிரச்னை வரும் என்பதால் அதையும் தவிர்க்க வேண்டும்.

விருந்தும் சரி, விரதமிருப்பதும் சரி அளவோடு இருக்க வேண்டும். ஒரே வேளையில் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது இன்சுலின் ஹார்மோனை தூண்டும். அதன் விளைவாக உணவு கொழுப்பாக மாற்றப்படும். விருப்பமான உணவுகளை வாரத்தில் ஒருநாள் சாப் பிட்டுக் கொள்ளலாம், அதுவும் அளவோடு..!

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.