Published:Updated:

அவள் பதில்கள் - 37 - ரெட் ஒயின் குடித்தால் சருமம் பளபளக்குமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

- சாஹா

அவள் பதில்கள் - 37 - ரெட் ஒயின் குடித்தால் சருமம் பளபளக்குமா?

- சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்
செல்வி ராஜேந்திரன்
செல்வி ராஜேந்திரன்

என் தோழி ஒருத்தி அழகு தொடர்பாக எப்போதும் எதையாவது படித்துப் பார்த்து முயற்சி செய்துகொண்டே இருப்பாள். நடிகைகளும் மாடல்களும் ரெட் ஒயின் குடிப்பதால்தான் அவர்களுக்கெல்லாம் சருமம் பளபளப்பாக இருப்பதாக எங்கேயோ படித்ததாகச் சொல்லி அதைப் பின்பற்றலாம் என்கிறாள். ரெட் ஒயின் குடித்தால் சருமம் அழகாகுமா?

- லேகா, பெங்களூரு-3

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

சருமம் அழகாக வேண்டுமென்றால் ரெட் ஒயின்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. அதே அளவுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உள்ள ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, பட்டர் ஃப்ரூட், எலுமிச்சை, நெல்லிக்காய், பப்பாளி போன்ற வற்றை எடுத்துக்கொண்டாலே போதுமானது. சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறப் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டும், பீட்டா கெராட்டினும் சரும அழகை மேம்படுத்தும். ரெட் ஒயினில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக இருப்பதால் சரும ஆரோக்கியத்துக்கு உதவும் என்பது உண்மைதான். ஆனால் அதிலுள்ள ஆல்கஹால் ஆண், பெண் என யாருக்குமே ஏற்றதல்ல என்பதால் அதைத் தவிர்க்கலாம்.

நடிகைகள் மற்றும் மாடல்களின் சருமத்தைப் பார்த்து ஆச்சர்யப்படுவோர், அதைப் பராமரிப்பதில் அவர்கள் காட்டும் அக்கறையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து மேக்கப் போடுவதாலும் ஒருவரது சருமம் அழகாகவோ, நிறமாகவோ மாறிவிடாது. அவர்கள் நிறைய பழங்கள், காய்கறிகள், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்வார்கள். உடற்பயிற்சி செய்வார்கள். இரவு எத்தனை மணிக்கு ஷூட்டிங் முடித்து வந்தாலும் மேக்கப்பை அகற்ற மறக்க மாட்டார்கள். நைட் க்ரீம் உபயோகிக்கத் தவற மாட்டார்கள். சரும அழகுக்கு இவை எல்லாமும் முக்கியம் என்பதை உங்கள் தோழிக்குப் புரிய வையுங்கள்.

எனக்கு ஆறு வயதில் இரட்டைப் பெண் குழந்தைகள். கணவர் கல்லூரிப் பேராசிரியர். குழந்தைகளிடம் அதிகம் பேச மாட்டார். இரண்டு பேருமே அப்பாவை அடிக்கிறார்கள். நினைத்தது நடக்காவிடில் ஒருத்தி, இன்னொருத்தியை அடிக்கிறாள். அடி வாங்குகிறவள் திருப்பி அடிக்க மாட்டாள். அடிக்கிறவள் முன்பின் தெரியாத பெரியவர்கள் உள்பட எல்லோரையும் அடிக்கிறாள். பள்ளியில் முதல்வரை, பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெரியவர்களை என எல்லோரையும் அடிக்கிறாள். இதை எப்படிக் கையாள்வது? அவளை எப்படி மாற்றுவது?

- பி.டி, பாளை

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைப் பிறப்பு பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்களுக்கான உளவியல் ஆலோசகர் ஆனந்தி ரகுபதி

ஆனந்தி ரகுபதி
ஆனந்தி ரகுபதி

குழந்தைகள் ஒருவரை அடிக்கும்போது உடனே அதற்கு ரியாக்ட் செய்யாமலும் அதைப் பெரிதுபடுத்தாமலும் அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி கேள்விகள் கேட்காமலும் கண்டுகொள்ளாமல் இருந்தாலே சில நாள்களில் அவர்கள் அதை தானாக நிறுத்தி விடுவார்கள். குழந்தைகளைப் பொருத்தவரை எந்த ஒரு பழக்கமும் மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்காது. ஒருவேளை அதற்கு மேலும் நீடித்தால் அந்தக் குழந்தைக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று கண்காணிக்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு அப்பா தன்னுடன் சரியாகப் பேசாதது, விளையாடாதது, கொரோனா காலத்தில் அதிகம் வெளியில் சென்று நண்பர்களுடன் பேசிப் பழக முடியாதது என ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ்ஸின் வெளிப் பாடாகவும் இருக்கலாம். குழந்தை அடுத்தவரை அடிக்க முனையும்போது உடனே கோபப்பட்டு ரியாக்ட் செய்ய வேண்டாம். அதற்கு பதில் குழந்தையிடம் ‘நீ ஏதோ கோபமா இருக்கேன்னு தெரியுது... உனக்கு அடிக்கணும் போல இருந்தா இங்கே அடி’ என தலையணையையோ, பொம்மை யையோ கொடுக்கலாம்.

குழந்தை இயல்பாக இருக்கும் நேரங்களில் மடியில் படுக்க வைத்தபடி, தலையைக் கோதியபடி பொறுமையாகப் பேசிப் புரிய வைக்கலாம். ‘எல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும். உன் வயசுக் குழந்தைங்களைக் கட்டிப் பிடிச்சோ, கையைப் பிடிச்சோ பேசணும்...’ என குழந்தை எவற்றையெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை முதலில் சொல்லிவிட்டு, கடைகியாக ‘நீ யாரையும் அடிக்கக் கூடாது... அடிச்சா அவங்களுக்கு வலிக்கும், பாவம்தானே....’ என குழந்தை செய்யக் கூடாதவற்றைச் சொல்ல வேண்டும். அடிக்காதே, துன்புறுத்தாதே என திரும்பத் திரும்ப சொல்லும்போது குழந்தையின் மனதில் அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே அழுத்தமாகப் பதியும்.

அவள் பதில்கள் - 37 - ரெட் ஒயின் குடித்தால் சருமம் பளபளக்குமா?

உங்களுடைய இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை சற்று ஆதிக்க குணம் நிறைந்தவளாகவும், இன்னொரு குழந்தை அடங்கிப்போகிற குணம் உள்ளவளாகவும் தெரிகிறது. ஆதிக்க குணம் உள்ள குழந்தைக்கு ‘தான் சொல்வதுதான் சரி. தான் செய்வதுதான் சரி’ என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அதற்காகக் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய பக்குவமான அணுகுமுறையால், அது காலப்போக்கில் மாறிவிடும்.

அதேநேரம் சமர்த்தாக, துடுக்குத்தனம் செய்யாமல் இருக்கும் இன்னொரு குழந்தையை ஒப்பிட்டுப் பேசும்போது, ஆதிக்க குணமுள்ள அந்தக் குழந்தைக்கு பிடிவாதமும் மூர்க்க குணமும் இன்னும் அதிகமாகலாம். தயவுசெய்து அதைச் செய்ய வேண்டாம். நீங்கள் நினைத்து பயப்படுகிற அளவுக்கு இது பெரிய விஷயமே இல்லை. மிக எளிதாகச் சரி செய்து விடலாம். உங்கள் அணுகுமுறையை மட்டும் மாற்றிப் பாருங்கள்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism