ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் பதில்கள் - 53 - பெர்ஃப்யூம், டியோடரண்ட்… வியர்வை வாடையை விரட்ட எது பெஸ்ட்?

பெர்ஃப்யூம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெர்ஃப்யூம்

- சாஹா

குழந்தை பிறந்தபிறகு கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? காரசாரமான உணவுகளையும் அசைவ உணவுகளையும் சாப்பிடலாமா? பிரசவமான எத்தனை நாள்கள் கழித்துச் சாப்பிடலாம்? - ரெ.கயல்விழி, வடுகப்பட்டி

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பிரசவமான பெண்கள், தாய்ப்பால் ஊட்டும்போது அவர்களது உடலில் நீர்ச்சத்து அதிகம் வெளியேறும். அதை ஈடுகட்ட திரவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசிக் கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, சூப் என சூடான திரவ உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். பிரசவமான பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக வரும் மலச்சிக்கல் பிரச்னை ரொம்பவும் இயல்பானது. குழந்தைபெற்ற நிலையில் மிகவும் சிரமப்பட்டு மலம் கழிக்கவும் முடியாது. அந்த பாதிப்பிலிருந்து மீளவும் திரவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிரசவத்துக்குப் பிறகு பெரும்பாலும் அம்மாக்கள் களைப்பாக, போதுமான தூக்க மில்லாமல் இருப்பார்கள். எனவே எளிதில் செரிமானமாகும் உணவுகளை சின்னச் சின்ன இடைவேளைகளில் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு அரிசி உணவுகளே சிறந்தவை. அந்த வகையில் பொங்கல், இட்லி, இடியாப்பம், ரசம் சாதம், கிச்சடி போன்றவற்றைச் சாப்பிடலாம். கோதுமை உணவுகளும் மலச்சிக்கலுக்கு காரணமாகும் என்பதால் அவற்றைத் தவிர்க்கலாம். அவை செரிமானமாவதில் சிரமம் இருக்கும். வயிற்று உப்புசத்தையும் ஏற்படுத்தலாம். எனவே முதல் 15 நாள்களுக்கு கோதுமை உணவுகளைத் தவிர்க்கலாம். அதன் பிறகு கோதுமை மாவை வறுத்துவிட்டு அதில் கஞ்சி தயாரித்துக் குடிக்கலாம். ஒருநாளைக்கு 2 முதல் 3 டம்ளர் பால் குடிக்கலாம். உலர் திராட்சை, பேரீச்சம் பழம், பாதாம், வால்நட்ஸ் போன்ற டிரை ஃப்ரூட்ஸை அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.

கர்ப்பமாக இருந்த ஒன்பது மாதங்களில் அசிடிட்டி, செரிமானமின்மை, மலச்சிக்கல் என பல பிரச்னைகள் வரக்கூடும். பிரசவமான மூன்று வாரங்கள் கழித்து அசைவ உணவுகளைச் சாப்பிடலாம். அதிக காரமான உணவுகள் தவிர்த்து, கிளியர் சூப், சிக்கன் சூப், முட்டை போன்றவற்றை முதலில் சாப்பிடலாம். உங்கள் உடல் இவற்றை ஏற்றுக்கொள்கிறதா என்று பார்க்கவும். ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், அதன் பிறகு கிரில் செய்யப்பட்ட மீன், சிக்கன் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

வியர்வை வாடையைப் போக்க பெர்ஃப்யூம், டியோடரண்ட்… இவற்றில் எது சிறந்தது... சருமத்துக்கு நல்லது? - பி.ஷோபனா, சென்னை-10

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

பூர்ணிமா
பூர்ணிமா

முதலில் எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். வியர்வைக்கென தனி வாடையே கிடையாது. அதாவது நாம் நினைக்கிற மாதிரி வியர்வைக்கென கெட்ட வாடை என ஒன்று கிடையாது. வியர்வையோடு பாக்டீரியா அல்லது பூஞ்சைக் கிருமிகள் சேரும்போதுதான் அதன் கெட்ட வாடை வருகிறது.

பெர்ஃபியூம் உபயோகிக்கும்போது என்பது நம் உடலிலிருந்து ஒருவித நல்ல வாடையை உணர முடியும். டியோடரண்ட் என்பது வியர்வையின் வாடையை, தன் வாடையின் மூலம் மறைக்கும். ரோல் ஆன் என்பது அதில் சேர்க்கப்படும் அலுமினியம் கூற்றைப் பயன்படுத்தி வியர்வை வெளியேறாதபடி, வியர்வை சுரப்பிகளை மூடிவிடும். பட்டு ஜாக்கெட் போன்ற உடைகளை அணியும் போது வியர்வை கசிந்து, அதன் அடையாளம் உடையில் தெரியாமலிருக்க ரோல் ஆன் உபயோகிக்கலாம்.

அவள் பதில்கள் - 53 - பெர்ஃப்யூம், டியோடரண்ட்… வியர்வை வாடையை விரட்ட எது பெஸ்ட்?

இவற்றையெல்லாம் உபயோகிப்பது சரியா, தவறா என்றால் இவற்றில் வாசனைக்காகப் பயன்படுத்தும் கூறுகள் நிச்சயம் சருமத்தை பாதிக்கும். அதனால்தான் அதிக வாசனை உள்ள பவுடர், சோப் போன்றவற்றைக்கூட உபயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கான்டாக்ட் அலர்ஜி என்கிற ஒவ்வாமைக்கு அதுதான் பிரதான காரணமே. மாநிற சருமம் கொண்ட நம்மைப் போன்ற தென்னிந்தியர்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பு இன்னும் அதிகம். உதாரணத்துக்கு அக்குள் பகுதியில் வியர்வைக்காக உபயோகிக்கும் இந்த வாசனைப் பொருள்களால், அந்தப் பகுதி அளவுக்கு அதிகமாக கருமை ஆகலாம்.

‘அப்படியென்றால் வியர்வை நாற்றத்தை மறைக்க எதைத்தான் உபயோகிப்பது’ என்ற கேள்வி வரலாம். ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்ட டஸ்ட்டிங் பவுடர்கள் கிடைக்கின்றன. இந்த பவுடர்கள் பாக்டீரியாவோ, பூஞ்சையோ வளரவிடாமல் பார்த்துக்கொள்வதோடு, ஈரப்பதம் இல்லாமலும் பார்த்துக்கொள்ளும். எனவே நீங்கள் கேட்ட எல்லா வற்றையும்விட டஸ்ட்டிங் பவுடரே சருமத்துக்குப் பாதுகாப்பானது.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.