Published:Updated:

அவள் பதில்கள் - 44 - விவாகரத்து வரும்வரை கணவன் வீட்டில் வாழ முடியுமா?

விவாகரத்து
பிரீமியம் ஸ்டோரி
விவாகரத்து

- சாஹா

அவள் பதில்கள் - 44 - விவாகரத்து வரும்வரை கணவன் வீட்டில் வாழ முடியுமா?

- சாஹா

Published:Updated:
விவாகரத்து
பிரீமியம் ஸ்டோரி
விவாகரத்து

குழந்தைகளுக்கு தொண்டையில் சதை வளர்வதும் அதை அறுவைசிகிச்சை செய்து எடுப்பதும் தற்போது சாதாரணமாகப் பேசப்படுகிறதே... எல்லாக் குழந்தை களுக்கும் இப்படி ஏற்படுமா? இதற்கு என்ன காரணம்? தீர்வு என்ன? முன்கூட்டியே தடுக்க முடியுமா?

- கே.சந்திரிகா, அருப்புக்கோட்டை

சஃபி
சஃபி

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி

நம் உடலில் ‘டான்சில்’ என்றோர் உறுப்பு உண்டு. வாய்க்கும் உணவுக்குழாய்க்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள பாதுகாப்பு உறுப்பு அது. சுற்றுப்புற மாசிலுள்ள கிருமி களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் அந்த உறுப்புதான். தண்ணீர் குடிக்கும்போதும், உணவு உண்ணும்போதும் டான்சில் வழியே தான் கிருமிகள் உடலுக்குள் செல்லும். குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்காதபடி டான்சில் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும். அதனால் அந்தப் பகுதி வீக்கமடையும். அதனால் தீங்கு விளைவிக்கும் அந்தக் கிருமி, குழந்தையின் நுரையீரல், வயிறு உள்ளிட்ட வேறு எந்தப் பகுதிக்கும் செல்லாமல் தடுக்கப் படும்.

குழந்தைகளின் 11 வயது வரை இந்தப் பிரச்னை இருக்கும். அதன் பிறகு குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க ஆரம்பிக்கும். எனவே நோய்க்கு எதிராக டான்சில் முன் அளவுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

அவள் பதில்கள் - 44 - விவாகரத்து வரும்வரை கணவன் வீட்டில் வாழ முடியுமா?

டான்சில் வீக்கம் ஒருவகையில் நல்லது என்றே சொல்லலாம். பிறகு ஏன் அதை அறுவைசிகிச்சையின் மூலம் நீக்குகிறார்கள் என்ற கேள்வி எழலாம். சில குழந்தைகளுக்கு டான்சில் வீக்கம் தீவிரமாக இருக்கும். வீக்கம் அதிகரித்த காரணத்தால் சரியாகச் சாப்பிட முடியாது. தண்ணீர்கூட குடிக்க முடியாது. மூச்சுவிட சிரமமாக இருக்கும். அதை ‘ஃபரின்ஜியல் டான்சில்ஸ்’ (Pharyngeal Tonsils) என்று சொல்வோம். இந்தப் பிரச்னை வந்தால் சிலருக்கு காய்ச்சல் அதிகரிக்கும், சரியாகச் சாப்பிட முடியாது, தொற்று பாதிப்பும் அதிகரிக்கும். டான்சில் பழுத்து வீங்கும். அதற்கு ஆன்டிபயாடிக் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.

இப்போதெல்லாம் பெரும்பாலும் அறுவை சிகிச்சையே தேவையின்றி டான்சில் வீக்கத்தைச் சரிசெய்ய முடியும். ஆனால், ஒரு மாதத்தில் மூன்று முறைக்கு மேல் குழந்தைக்கு இப்படி வருகிறது, மிகவும் அவதிப்படுகிறது என்ற நிலையில் அறுவைசிகிச்சையைப் பரிந்துரைப்போம். அதற்கு ‘டான்சிலெக்டமி’ (Tonsillectomy) என்று பெயர்.

குழந்தைகள் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, இருப்பிடம் என அனைத்தும் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அடிக்கடி தொற்று வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொண்டையில் வீக்கம் வந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எப்போதும் ஃபிரெஷ்ஷான, சூடான உணவுகளைக் கொடுப்பது, கொதிக்கவைத்து ஆறவைத்த நீர், சுத்தமான காற்றை சுவாசிக்கும்படியான சூழல் போன்றவற்றின் மூலம் குழந்தைக்கு டான்சில் வீக்கம் வராமல் பாதுகாக்கலாம்.

எனக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. காதல் திருமணம். என் பெற்றோருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் வேலைக்கும் செல்லவில்லை. கடந்த ஒரு வருடமாக எனக்கும் கணவருக்கும் பிரச்னை. பிரிந்துவிடலாம் என்கிறார். நாளுக்கு நாள் பிரச்னை அதிகமாகிக்கொண்டே போகிறது. வீட்டைவிட்டு வெளியேறச் சொல்கிறார். வேலையோ, ஆதரவோ இல்லாத நிலையில் நான் எங்கே செல்ல முடியும்? விவாக ரத்துக்கு அப்ளை செய்து அது கிடைக்கும்வரை கணவன் வீட்டில் வாழ பெண்ணுக்கு உரிமை உண்டா? என்னைப் போன்றோருக்கு வேறு பாதுகாப்பு என்ன?

- சி.மாளவிகா, சென்னை-53

ஆதிலட்சுமி லோகமூர்த்தி
ஆதிலட்சுமி லோகமூர்த்தி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி

குடும்ப அமைப்பில் உறவு களால் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் பெண்கள் இன்று ஏராளம். அப்படிப் பிரச்னைகள் ஏற்படும்போது அந்தக் குடும்பத்தில் தொடர்ந்து வசிப்பது சிக்கலாகிறது. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 முதல் நடைமுறைக்கு வந்தது. குடும்ப அமைப்பில் இணைந்து வாழக்கூடிய ரத்த உறவின் மூலமோ, திருமண உறவின் மூலமோ, தத்தெடுத்த வாரிசின் மூலமாகவோ, இணைந்து வாழக்கூடிய லிவ் இன் துணை மூலமாகவோ உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, வார்த்தைகள் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ வன்முறையை எதிர் கொள்ளும்போதும், பொருளிழப்பு ஏற்படும்போதும் சம்பந்தப்பட்ட பெண் களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் நிவாரணம் கிடைக்கும். பாதிக்கப்பட்ட பெண், பாதுகாப்பு உத்தரவும் (Protection Order) இருப்பிடத்தில் தொடர்ந்து வசிப்பதற்கான (Residential Order) உத்தரவும் கோரலாம்.

ஒரு பெண் பெற்றோருடன் வசிக்கிறார் என வைத்துக்கொள்வோம். பெற்றோர் தவறியபிறகு அண்ணன்-தம்பிகள் அந்தப் பெண்ணிடம் சொத்துகளைக் கேட்டுக் கையெழுத்துப் போடச் சொல்லியும், அப்போதுதான் திருமணம் செய்துவைப்போம் என்றும் சொல்லி மிரட்டுவதும் குடும்ப வன் முறையில்தான் வரும். எனவே திருமணத் துக்கு முந்தைய உறவுகள், திருமணத்துக்குப் பிறகான உறவுகள், திருமணமே இல்லாத நிலையில் வந்த உறவுகள் என யார் மூலம் பிரச்னை வந்தாலும் சம்பந்தப்பட்ட பெண் அந்த இடத்திலேயே தொடர்ந்து வசிப்பதற் கான ரெசிடென்ஷியல் ஆர்டர் கேட்டு உத் தரவு போடலாம். அதாவது பிரச்னை தரும் நபர்களுடன் அதே இடத்தில் ஒரு பகுதியில் நீங்கள் வசிக்கலாம்.

அவள் பதில்கள் - 44 - விவாகரத்து வரும்வரை கணவன் வீட்டில் வாழ முடியுமா?

உங்கள் விஷயத்தில் இன்னும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கவில்லை என்று தெரிகிறது. முதல் வேலையாக நீங்கள் ஒரு வழக்கறிஞரை நாடுங்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூகநலத் துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு அலுவலரை நாடினால் அவர் உடனடியாக இந்த வழக்கை மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு கொண்டு செல்வார். எதிர்த்தரப்பினர் ஆஜராகா விட்டாலும் அதே வீட்டில் நீங்கள் தொடர்ந்து வசிப்பதற்கோ அல்லது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொடுக்கவோ கோரி உத்தரவை உடனடியாக வாங்க முடியும். இதை விவாகரத்து வழக்கை தாக்கல் செய்வ தற்கு முன்பே செய்யலாம். விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த உடனேயே அவர் உங்கள் கணவர் அல்ல என்று அர்த்தமாகாது. வழக்கு முடிந்து கடைசி உத்தரவு வரும்வரை அவர்தான் கணவர். எனவே தைரியமாக ஒரு வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். அதற்கு வசதி இல்லாத பட்சத்தில் இலவச சட்ட உதவி மையத்தை நாடுங்கள்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை `அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.