Published:Updated:

அவள் பதில்கள் 42: பிளாஸ்டிக் உபயோகம்... எந்த அளவு நல்லது?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

- சாஹா

அவள் பதில்கள் 42: பிளாஸ்டிக் உபயோகம்... எந்த அளவு நல்லது?

- சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்
மாலினி கல்யாணம்
மாலினி கல்யாணம்

எங்கள் வீட்டில் மாதுளை, கொய்யா மரங்கள் உள்ளன. அவற்றில் நிறைய பூக்கள் பூத்து, காய்கள் வரும் நேரத்தில், அவற்றை அணில்கள் சாப்பிட்டு வீணாக்குகின்றன. காய்களில் சிறிய பை கட்டித் தொங்கவிட்டால் அவை அழுகிவிடுகின்றன. அணில்கள் மரங்களைத் தொந்தரவு செய்யாமலிருக்க என்னதான் வழி?

- எஸ்.சித்ரா, சென்னை-64

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த தோட்டக்கலை ஆலோசகர் மாலினி கல்யாணம்

அணில்கள் உங்கள் தோட்டத்துச் செடிகளில் பூக்கும் பூக்களையும், காய்களையும் தேடி வருவதில்லை. அவற்றுக்குத் தேவை உணவு. நீங்கள் சாப்பிடும் உணவு எதுவானாலும் அணில்கள் சாப்பிடும். கெட்டுப்போன உணவை மட்டும் அவை தொடாது. அணில்களுக்கு உணவு வைக்கும்போது தினமும் ஒரே இடத்தில் வைக்கவும். உருவத்தில் சிறிய ஜீவன்கள்தானே என மிகக்குறைவான உணவை வைக்காதீர்கள். எப்போதும் ஓடித்திரிந்து கொண்டே இருப்பதால் அவற்றுக்கு சீக்கிரமே பசியெடுக்கும். மீண்டும் உணவைத் தேடி அதே இடத்துக்கு வரும். மாலை 5 மணிக்கு மேல் அணில்கள் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. எனவே அதற்கு முன்பாக உணவு வைத்துவிடுங்கள். அதேபோல காலையில் 5 அல்லது 6 மணிக்குள் முதல் உணவை வைத்துவிடுங்கள். சமைத்த உணவாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. பிஸ்கட், பிரெட் போன்றவைகூட ஓகே. நட்ஸ், கடலை, சோளம் என எதுவும் அவற்றுக்கு ஓகே தான். வெயில் காலத்தில் தயிர்சாதத்தை விரும்பிச் சாப்பிடும். அணில்களுக்கு தினமும் உணவு வைத்துப் பழக்கிவிட்டால் அவை உங்கள் வீட்டுத் தோட்டத்துப் பூக்களையும் காய்களையும் தொடாது. என்னுடைய தோட்டத்தில் சீத்தாப்பழ மரம், மாதுளை மரம், நெல்லிக்காய் மரம் என நிறைய வைத்திருக்கிறேன். அவற்றுக்கு உணவளிக்கத் தொடங்கிய பிறகு அவை மரங்களைத் தொந்தரவே செய்வதில்லை. இது என் அனுபவத்தில் உணர்ந்த விஷயம். நீங்களும் முயன்று பாருங்கள்.

அவள் பதில்கள் 42: பிளாஸ்டிக் உபயோகம்... எந்த அளவு நல்லது?

என்னதான் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்க முடிவதில்லை. சமையலறை யில் வைக்கும் மளிகை டப்பா தொடங்கி, குழந்தைகளுக்கு கொடுத்தனுப்பும் வாட்டர் பாட்டில் வரை பிளாஸ்டிக்தான் பயன்படுத்துகிறோம். பாதுகாப்பான பிளாஸ்டிக் என ஏதும் இருக்கிறதா? அதை எப்படிக் கண்டறிவது? பிளாஸ்டிக் பொருள்களை எத்தனை நாள்களுக்கொரு முறை மாற்ற வேண்டும்? எப்படி டிஸ்போஸ் செய்ய வேண்டும்?

- சுதா அரவிந்த், புதுச்சேரி

பதில் சொல்கிறார், தமிழ்நாடு பிளாஸ்டிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம், சுற்றுச்சூழல் குழுத் தலைவர் பி.சுவாமிநாதன்.

பிளாஸ்டிக் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் ‘எஃப்.டி.ஏ’ (FDA-Food and Drug Administration) நிறுவனத்தால் அங்கீகரிக்கப் பட்டவைதான். அதாவது உபயோகத்துக்கு ஏற்றவை என்ற உத்தரவாதத்துடன் வருபவை அவை. பிளாஸ்டிக்கில் உருகும் நிலை, நெகிழும் நிலை என இரண்டு உண்டு. அதாவது பிளாஸ்டிக் 90 டிகிரிக்கு மேல் நெகிழவும், 110 டிகிரிக்கு மேல் உருகவும் ஆரம்பிக்கும். வீட்டில் உபயோகிக்கும் கன்டெய்னர்களிலோ, குழந்தைகளுக்கு கொடுத்தனுப்பும் லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்றவற்றிலோ இந்த இரண்டுக்குமே வாய்ப்பில்லை. எனவே, உணவுக்கான கன்டெய்னர் உள்ளிட்டவற்றுக்காக அவற்றைப் பயன்படுத்துவதில் பயம் தேவையில்லை. அதே சமயம், மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும் உணவுக்கான கன்டெய்னர்களை பயன் படுத்துவது நல்லதல்ல.

பி.சுவாமிநாதன்
பி.சுவாமிநாதன்

பிளாஸ்டிக்கில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (Polyethylene Terephthalate), அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் (High-Density Polyethylene), பாலி வினைல் குளோரைடு (Polyvinyl Chloride or PVC), குறைந்த அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் (Low-Density Polyethylene), பாலிப்ரொப்பிலீன் (Polypropylene), பாலிஸ்டிரீன் (Polystyrene), பிற பிளாஸ்டிக் (Other) என 7 வகைகள் உண்டு. இவை முறையே 1 முதல் 7 வரை வரிசைப்படுத்தப்பட்டவை. இவற்றில் பிவிசியை மட்டும் உணவுப் பயன்பாட்டுக்குத் தவிர்ப்பது போது மானது.

பிளாஸ்டிக் பொருள்களை குப்பையில் வீசும்போது தனியே பிரித்துப்போடுவது நல்லது. வீட்டில் உபயோகப்படுத்தப்படும் அனைத்துவகை பிளாஸ்டிக் கவர் மற்றும் பொருள்களையும் தனியே பிரித்து குப்பை யில் வீசும்போது அவற்றை மறுசுழற்சி செய்வது எளிதாகிறது. இதற்கென பிரத்யேக மெஷின் இருக்கிறது.

மருத்துவத்துறையில் உபயோகிக்கப்படும் பல பொருள்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறது. இன்ஜெக்‌ஷன் தொடங்கி ஸ்டென்ட் வரை உதாரணம். இவையும் நாம் உபயோகிக்கிற பிளாஸ்டிக் கன்டெய்னர் களும் ஒரே மெட்டீரியலால் செய்யப்படுபவைதான். உபயோகப்படுத்தும்வரை பிளாஸ்டிக் நல்ல பொருள்தான். வீசி எறியப்பட்ட பிறகுதான் அது சுற்றுச்சூழலுக்கு வில்லனாக மாறுகிறது. எனவே யூஸ் அண்டு த்ரோ பிளாஸ்டிக் கன்டெய்னர்கள், கவர்கள் என பிளாஸ்டிக் பொருள்களைச் சேர்த்துவைத்து மறுசுழற்சி செய்வோரிடம் கொடுத்துவிடலாம். அவர்கள் அவற்றை சிப்ஸாக மாற்றி, பைப், ராடு, ரூஃப் கார்டன், பூங்காக்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் நிறுவப்படும் பெஞ்ச் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்துவார்கள்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism