என் மகன் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்குத் தீவிரமாகப் படித்துக்கொண்டிருக்கிறான். இதில் எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்? இன்டர்வியூ இருக்குமா? படிப்புக்கேற்ற வேலை கிடைக்குமா? எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்?
- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை-82

பதில் சொல்கிறார் போட்டித்தேர்வுகளுக்கான கல்வி ஆலோசகர் கணேச சுப்ரமணியன்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கானது. இதில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 90 மதிப்பெண் களுக்கு மேல் எடுக்கும் மாணவர்கள்தான் ரேங்க் பட்டியலுக்குத் தகுதிபெறுவார்கள். அந்த ரேங்க் பட்டியலைத்தான் டிஎன்பிஎஸ்சி, ரிசல்ட்டாக வெளியிடும். அந்த ரிசல்ட் வெளிவந்த பிறகு கவுன்சலிங் நடைபெறும். ரேங்க் பட்டியலில் இருப்போரை சான்றிதழ்களை அப்லோடு செய்யச் சொல்வார்கள். அதன் பிறகு சான்றிதழ் சரிபார்ப்பும், கவுன்சலிங்கும் நடக்கும். அந்த கவுன்சலிங்கில் தான் அவர்களுக்கான போஸ்ட்டிங் முடிவு செய்யப்படும். அதன்பிறகு அவர்கள் பணியில் சேர வேண்டியிருக்கும். எனவே எழுத்துத் தேர்வு, அடுத்து கவுன்சலிங், அவ்வளவு தான். இதில் இன்டர்வியூ இருக்காது. இதில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கீழ்க்காணும் அடிப்படையில் இருக்கும்.

பொதுப்பிரிவினர் என்றால் 160 முதல் 165 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். பி.சி பிரிவினர் 155 முதல் 160 மதிப்பெண்களும், அதிலேயே பெண்கள் என்றால் 155 முதல் 157 மதிப்பெண்களும், எம்.பி.சி பிரிவினர் 152 முதல் 155 மதிப்பெண்களும், அதிலேயே பெண்கள் 150 முதல் 152 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். எஸ்.சி பிரிவினர் 145- 150 மதிப்பெண்களும், எஸ்.டி பிரிவினர் 142 - 145 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு இதில் 2 முதல் 3 மதிப்பெண்கள் குறையும்.
சிலருக்கு பற்கள் சீராக இல்லாமலிருப்பது ஏன்? இப்படி வளரும் பற்களை குழந்தைப் பருவத்திலேயே பிடுங்கிவிட்டால் மீண்டும் வளரும் பற்கள் சீராக இருக்குமா?
- கே.ராஜேஸ்வரி, ஈரோடு

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி
குழந்தைப் பருவத்தில் சீரான வரிசையில் இல்லாத பால் பற்களைப் பிடுங்கினால், மீண்டும் வளரும் பற்கள் சீரான வரிசையில் வளர்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. குழந்தைக்கு அதன் ஆறு மாதத்திலிருந்து இரண்டரை வயதுக்குள் பால் பற்கள் முளைக்கும். அப்படி 20 பற்கள் முளைக்கும். அந்தக் குழந்தையின் ஆறாவது அல்லது ஏழாவது வயதில்தான் கீழ்வரிசையில் நிரந்தரப் பற்கள் வளர ஆரம்பிக்கும். குழந்தையின் தாடைப் பகுதியிலுள்ள எலும்புகளிலும் வளர்ச்சி இருக்கும். ஒருவேளை ஒரு குழந்தை தன் அம்மாவிடமிருந்து நிரந்தரப் பல் வரிசையையும், அப்பாவிடமிருந்து அல்லது அப்பாவழி உறவுகளிடமிருந்து தாடை அமைப்பையும் கொண்டு பிறக்கலாம். அந்நிலையில் அந்தக் குழந்தையின் பல்வரிசை சீரற்று இருக்க வாய்ப்புகள் உண்டு. குழந்தை வளரும்போதுதான் அதன் தாடை அமைப்புக்கேற்ப பல் வரிசை எப்படி அமைகிறது என்பது தெரியவரும்.

ஒருகட்டம் வரை எல்லோருக்கும் 28 பற்கள்தான் இருக்கும். 17 வயதில்தான் ஞானப்பற்கள் முளைத்து 32 பற்களும் முழுமையடையும். இதுவும் பல் வரிசை அமைப்புக்கு காரணமாகலாம். எனவே குழந்தை வளர்ந்து, குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துதான் சீரற்ற பல் வரிசையைச் சரிசெய்ய முடியுமா என்பதை முடிவு செய்ய முடியும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஉடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை
`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,
avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.