டாட்டூ போட்டுக்கொண்டவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது என்கிறார்கள்... உண்மையா?
-சி.அஜிதா, சென்னை-19
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி

ரத்த தானம் செய்ய முன் வருவோரிடம் ரத்தம் எடுப்பதற்கு முன் கேள்வி - பதில் அடங்கிய படிவம் ஒன்று கொடுக்கப்படும். அந்த நபருக்கு காய்ச்சலோ, ஹெச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் பி, சி தொற்றுகளோ இருக்கின்றனவா என்று கேட்கப்படும். அப்படி இருந்தால் ரத்தத்தை எடுக்க மாட்டார்கள். தவிர, அவர்களுக்கு சமீபத்தில் மலேரியா காய்ச்சல் வந்திருந்தாலும் அவர்களிடமிருந்து ரத்தத்தை எடுக்க மாட்டார்கள்.

ரத்தத்தை எடுத்த பிறகும் ஹெச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் பி, சி உள்ளிட்ட பல்வேறு வகையான தொற்றுகளுக்காக அதைப் பரிசோதிப்பார்கள். அதில் ஏதேனும் தொற்று உறுதியானாலும் அவரிடமிருந்து ரத்தத்தை எடுக்க மாட்டார்கள். டாட்டூ போட்டுக்கொண்டவர்களுக்கு மேற் குறிப்பிட்ட கிருமித் தொற்றுகள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களுக்கும் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் ரத்த தானம் செய்ய முடியாது.
மற்றபடி டாட்டூ போட்டுக்கொண்டதாலேயே அவர்கள் ரத்த தானம் செய்யும் தகுதியை இழப்பதில்லை. அவர்கள் ரத்த தானம் செய்யத் தகுதியான உடல்நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அதாவது அவர்கள் சரியான எடையில் இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது. இப்படி ரத்த தானம் செய்வோருக்கான பொதுவான விதிகள்தான் முக்கியம்.
சன் ஸ்கிரீன் தேர்வுசெய்யும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?
- கே.ஆனந்தி, திருச்சி
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அழகுக்கலை நிபுணர் மேனகா.

வெயில் நேரடியாக சருமத்தில் படும்படியான இடங்களில் இருப் பவர்கள் மட்டும் சன் ஸ்கிரீன் உபயோகித்தால் போதும் எனப் பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். அப்படி யல்ல... காருக்குள் பயணம் செய்வோருக்கும். வெளியிலேயே வராமல் வீட்டுக்குள்ளேயே இருப் பவர்களுக்கும்கூட சன் ஸ்கிரீன் அவசியம். முகத்தில் மட்டும் சன் ஸ்கிரீனை உபயோகிக்காமல், கழுத்து, கை, கால்கள், முதுகு என வெயில்படும் எல்லா பகுதிகளிலும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். வெயில் பட்டால் உதடுகளும் கறுத்துப்போகலாம். எனவே உதடுகளுக்கு `யுவி' பாதுகாப்புள்ள லிப் பாம் பயன்படுத்துங்கள். சன் ஸ்கிரீன் உபயோகிப்பதால் அது 100 சதவிகித பாதுகாப்பு என நினைத்துக்கொள்ள வேண்டாம். வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பெரியவர்களுக்கு உபயோகிக்கிற சன் ஸ்கிரீனை குழந்தைகளுக்கும் பயன்படுத்தக்கூடாது. குழந்தை களுக்கு ‘பாரா அமினோ பென்ஸாயிக் ஆசிட் மற்றும் ஆக்ஸிபென்ஸோன் போன்ற ரசாயனங்கள் உள்ள சன் ஸ்கிரீன் வகைகளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாகவே PABA Free என்றும், Non-Comedogenic என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் சன் ஸ்கிரீன் வகைகள் எல்லோ ருக்கும் ஏற்றவை. இவை சருமத் துவாரங்களை அடைக் காமல் பாதுகாப்பவை.
உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை
`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,
avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.