Published:Updated:

அவள் பதில்கள் - 8 - இனிப்பைத் தவிர்ப்பது நல்லதா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

- சாஹா

என் மகள் யுபிஎஸ்சி தேர்வில் பலமுறை தோல்வியடைந்துவிட்டாள். ஆனாலும், எப்படியும் அதில் தேர்ச்சிபெறுவேன் எனத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். மகளின் விடாமுயற்சி பெருமையளித்தாலும் அவளது தொடர் தோல்வி கவலையும் அளிக்கிறது. அவளுக்கு எப்படிப் புரியவைப்பது?

- ரத்னா ராமசாமி, கோவை

பத்மாவதி
பத்மாவதி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் பத்மாவதி

நான் சொல்லப்போகிற விஷயங்கள் யுபிஎஸ்சியில் தொடர் தோல்வியைச் சந்திப்பவர்களுக்கானவை மட்டுமல்ல; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் கனவில் இந்தத் தேர்வுக்குத் தயாராகும் எல்லோருக்குமானவை. மிக மிகக் கடினமான தேர்வுதான் இது. உங்கள் அறிவு, புத்திக்கூர்மை, பாட அறிவு போன்றவற்றை மட்டும் டெஸ்ட் செய்யாமல் உங்கள் மனபலம், தோல்விகளையும் ஸ்ட்ரெஸ்ஸையும் கையாள்வதில் உங்கள் திறன் போன்றவற்றுக்கும் சேர்த்து வைக்கப்படுகிற டெஸ்ட் இது. இந்தத் தேர்வுக்குத் தயாராகும்போது நீங்கள் கற்றுக்கொள்கிற விஷயங்களை நாளை நீங்கள் தேர்ச்சிபெற்று பணியமர்த்தப்படும்போது அதில் எப்படிச் செயல்படுத்துகிறீர்கள் என்றும் கவனிக்கப்படும்.

தொடர் தோல்விகளை எதிர்கொள்ள ஒருவரின் அணுகுமுறை, தவறான கைடன்ஸைப் பின்பற்றுவது, அனுபவமற்றவர்களின் தவறான அறிவுரை போன்றவை காரணங்களாக இருக்கலாம். ஒரு பாடத்தையே பிஹெச்.டி அளவுக்குப் படிப்பதைவிட, ‘Jack of all trades' என்று சொல்வார்களே... அதற்கேற்ப பல விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.அந்த விஷயங்களை இம்ப்ரூவைஸ் செய்துகொள்ள வேண்டும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் 40 சதவிகிதம் உங்களுக்குத் தெரிந்தவையாக இருக்கலாம். மீதி 60 சதவிகிதத்தை, பகுப்பாய்வுத் திறனின் அடிப்படையில் அதுவரை நீங்கள் படித்தவற்றிலிருந்து எழுத வேண்டும். இந்தத் தேர்வுக்குத் தயாராகக் குறைந்தது 2 வருடங்கள் தேவை.

அவள் பதில்கள் - 8 - இனிப்பைத் தவிர்ப்பது நல்லதா?

ப்ரீலிமினரியில் தேர்ச்சிபெறவில்லையா... அதை க்ளியர் செய்வதில் மட்டுமே முழு கவனத்தையும் நேரத்தையும் செலுத்திக்கொண்டிருக்காமல், கூடவே மெயின் தேர்வுக்கான தயாரிப்பிலும் கவனம் செலுத்துவது சிறந்த அணுகுமுறை. இது, டூ இன் ஒன் என்பதுபோல ப்ரீலிமினரியோடு சேர்த்து மெயின் தேர்வுக்கும் நம்மைத் தயார்ப்படுத்திவிடும்.

உங்கள் மகள் இதை விரும்பிப் படிக்கிறார் என்பதால் அவருக்குப் பிடித்த விஷயத்தைச் செய்ய அனுமதியுங்கள். வெற்றிபெற்ற ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் தோல்விகள் நிச்சயம் இருக்கும். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெறும் ஒவ்வொருவரும் தோல்விகளைக் கடந்துதான் ஜெயித்திருப்பார்கள். ஐ.எஃப்.எஸ் ஹெல்த்தா, ஐ.ஆர்.எஸ் உஷா தேவி, ஐ.ஏ.எஸ் மோகன்தாஸ், ஐ.ஐ.எஸ் லீலா மீனாட்சி போன்ற பலரை இதற்கு உதாரணங்களாகக் காட்டலாம். முயற்சிகளைக் கைவிட வேண்டாம் என மகளுக்குப் பக்கபலமாக இருங்கள்.

ப்ளஸ் ஒன் படிக்கும் என் மகளுக்கு இனிப்பு என்றாலே பிடிப்பதில்லை. குழந்தையிலிருந்தே இப்படித்தான். இனிப்பே சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியக் குறைபாட்டை உருவாக்குமா?

- மல்லிகா அன்பழகன், சென்னை-78

பத்மாவதி
பத்மாவதி

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த டயட்டீஷியன் கவிதா.

நீங்கள் பயப்படுகிற மாதிரி இனிப்பைத் தவிர்ப்பதால் சத்துக்குறைபாடு எதுவும் ஏற்படாது. அதே நேரம் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற தேடல் இருந்தால், அது சத்துக்குறைபாட்டின் அறிகுறி யாக இருக்கலாம்.

உணவு என்பது ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புகள் சம்பந்தப்பட்டது. குறிப்பிட்ட சுவையையோ, உணவையோ சாப்பிடாமல் இருப்பதற்கும் உடலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உங்கள் மகளுக்குச் சிறுவயதிலிருந்தே இனிப்புச்சுவை பிடிக்காததால் இப்போதும் அதைத் தவிர்க்கிறார் என்றே தெரிகிறது. மற்றபடி இதில் கவலைப்பட ஒன்றுமில்லை.

சொல்லப்போனால், இனிப்புச்சுவை மூலமாகக் கிடைக்கும் சத்துகள், நாம் சாப்பிடும் அரிசி, காய்கறி என அனைத்துப் பொருள்களிலுமே அடங்கியிருக்கின்றன. அவற்றின் மூலமாகவே அத்தகைய சத்துகள் கிடைத்துவிடும். தனியாக இனிப்பு என்ற ஒன்று தேவையில்லை.

யூரிக் ஆசிட் உடலில் அதிகமாகும் பிரச்னைக்கு காரணம் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? தீர்வுகளையும் சொல்லுங்களேன்...

- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்

பராந்தகன்
பராந்தகன்

பதில் சொல்கிறார் தஞ்சை மருத்துவக்கல்லூரி, பொது மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் பராந்தகன்

ரத்தத்தில் பொதுவாக யூரிக் அமிலத்தின் அளவு 6.8 மில்லிகிராம் இருக்க வேண்டும். இந்த அளவைவிட கூடும்போது சில பாதிப்புகள் ஏற்படும். சிறுநீரகம் யூரிக் அமிலத்தை வெளியேற்றாமை, இரைப்பை புற்றுநோய் மற்றும் நிணநீர் புற்று நோய், புற்றுநோய் சிகிச்சை மருந்துகள், ‘சொரியாசிஸ்’ என்ற சரும நோய், சிறுநீர் பெருக்கத்துக்கான மருந்து (Thiazide Diuretics) பயன்படுத்துவது என இவையெல்லாம் ரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிக்கக் காரணமாகலாம். சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலேயும் யூரிக் அமிலம் அதிகமாகச் சுரக்க வாய்ப்புள்ளது.

ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும்போது அது மூட்டு இணைப்பில் படர்ந்து அழற்சி உண்டாகி மூட்டு வீக்க நோய் (Gout) ஏற்படலாம். ஆண்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், யூரிக் அமில அதிகரிப்பால் சிறுநீரகக் கல், சிறுநீரகச் செயலிழப்புவரை ஏற்படலாம். இதய நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகம் உள்ளவர்கள் அசைவ உணவு, காலிஃப்ளவர், காளான், பசலைக்கீரை, மது உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

யூரிக் அமிலம் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்படி பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ, avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.