Published:Updated:

அவள் பதில்கள்: 14 - நெஞ்செரிச்சல், அஜீரணம்... அடிக்கடி மருந்து எடுத்துக்கொள்வது சரியா?

- சாஹா

பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்: 14 - நெஞ்செரிச்சல், அஜீரணம்... அடிக்கடி மருந்து எடுத்துக்கொள்வது சரியா?

கடந்த சில மாதங்களாக என் கணவருக்கு நெஞ்செரிச்சல், வலி, எதுக்களித்தல் பிரச்னைகள் இருக்கின்றன. அதனால் சாப்பிட்ட உடனே செரிமானத்துக்கான சிரப் அல்லது மாத்திரை எடுத்துக்கொள்வது அவருக்கு வழக்கமாகிவிட்டது. இந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது சரிதானா அல்லது என் கணவரின் பிரச்னைக்கு சிகிச்சைகள் தேவைப்படுமா?

- பி.செல்வராணி, வேலூர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

நாம் சாப்பிடும் உணவைக் கூழாக்கி, திரவ உணவாக மாற்றி, உணவுக்குழாயின் ரத்தக்குழாய்கள் மூலம் உறிஞ்ச, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கும். அதன் மூலமே ஜீரணமாதல் நடக்கிறது. நேரம் தவறிச் சாப்பிடுவது, அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது, அதிக காரம், எண்ணெய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவது, வலி நிவாரணிகளை அதிகம் எடுத்துக் கொள்வது போன்றவற்றால் அதிகமாக அமிலம் சுரந்து வலி வரலாம். சிலருக்கு இந்தக் காரணங்கள் அன்றி மன அழுத்தம் காரணமாகவும் இப்பிரச்னைகள் வரலாம்.

அவள் பதில்கள்: 14 - நெஞ்செரிச்சல், அஜீரணம்... அடிக்கடி மருந்து எடுத்துக்கொள்வது சரியா?

அதிக அளவில் அமிலம் சுரப்பதால் நெஞ்சு கரித்த லோடு நடு நெஞ்சில் வலி, இரைப்பையிலும் மேல் வயிற்றிலும் வலி வரலாம். அமிலத்தன்மை அதிகரித்தால் அது இரைப்பையின் சுவர்களை அரித்துப் புண்ணாக்கும். ஹைப்பர் அசிடிட்டி எனப்படும் இந்தப் பிரச்னைக்கு ஆன்டாசிடு மருந்துகள் உதவும். இவை இரைப்பையின் அமிலத்தன்மையைச் சமன்படுத்தும். ஆனால் அமிலத் தன்மையை சமன்படுத்தும் இந்த மருந்துகளில் அலுமினியம், மெக்னீசியம் போன்ற காரத்தன்மையுள்ள உலோகங்களே பிரதானமாக இருக்கும். எனவே இவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் உள்ளிட்ட வயிற்று உபாதைகள் வரலாம். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் அதிகமுள்ளோர் போன்றோர் இவற்றை மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளவே கூடாது.

தவிர நெஞ்செரிச்சல், நடு நெஞ்சில் வலி போன்றவை அஜீரணத்தின் அறிகுறிகளாக மட்டும்தான் இருக்க வேண்டியதில்லை. மாரடைப்பின் அறிகுறிகளாகவும் இருக்கக்கூடும். எனவே உங்கள் கணவரை சுய மருத்து வத்தை தவிர்த்து முறையான மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளச் சொல்லுங்கள். சரியான நேரத்தில் முறையான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்து, மன அழுத்தம் தவிர்த்து வாழவும் அறிவுறுத்துங்கள்.

சமையலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது என்ற கேள்வி காலங்காலமாகத் தொடர்கிறது. ஒவ்வொரு விளம்பரமும் ஒவ்வொரு தகவல் சொல்கிறது. எந்த எண்ணெயை எவ்வளவு உபயோகிக்கலாம்? எப்படி உபயோகிக்கலாம் என்று விளக்க முடியுமா?

- எம்.ஜெயபாரதி, செங்கல்பட்டு

அவள் பதில்கள்: 14 - நெஞ்செரிச்சல், அஜீரணம்... அடிக்கடி மருந்து எடுத்துக்கொள்வது சரியா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் அம்பிகா சேகர்.

உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கவும், செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுக்கவும், உள் உறுப்புகளைப் பாதுகாப்பதற்கும் கொழுப்புச்சத்து தேவை. அது எண்ணெயிலிருந்து கிடைக்கிறது. பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தவிட்டு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகெண்ணெய் எனச் சமையலுக்குப் பலவித எண்ணெய்களைப் பயன் படுத்துகிறார்கள். இவற்றில் பாமாயில் தவிர்த்து மற்ற எண்ணெய்களை அளவோடு பயன்படுத்தலாம். அதன்படி ஒருவர் ஒரு நாளைக்கு 15 முதல் 20 மில்லி எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். நல்லெண் ணெய், தவிட்டு எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் - மூன்றையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் ஒரே எண்ணெயைத் தொடர்ந்து உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

சாலட் செய்ய, தோசை வார்க்க ஆலிவ் எண்ணெய் ஓகே. அதில் ரெகுலர் சமையல் செய்ய முடியாது.

உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற வற்றை எண்ணெயில் வறுத்தோ, பொரித்தோதான் சாப்பிட வேண்டும் என்றில்லை. வேகவைத்து, மசியலாகச் செய்து சாப்பிடலாம். காய்கறிகளை முதலில் ஆவியில் வேகவைத்துவிட்டு, பிறகு தாளிப்பதற்கு மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.

பொரிக்கவோ, வறுக்கவோ பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்ப உபயோகிக்கக் கூடாது. அதனால், ‘ட்ரான்ஸ் ஃபேட்டி ஆசிட்’ அதிகமாகி, ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். அது ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல. எனவே, அந்த எண்ணெயைத் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்த லாம்.

என் குழந்தை செவித்திறன் சவால் உள்ளவள். லாக்டெளனுக்கு முன்புவரை அவளை படிக்கவைப்பதில் எனக்குப் பிரச்னையே இருந்ததில்லை. ஆசிரியர்களே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்கள். லாக்டௌனில் அது எனக்கு மிகப் பெரிய சவாலாக மாறியிருக்கிறது. அவளை எப்படிப் பார்த்துக்கொள்வது?

- மீனாட்சி கருப்பையா, தூத்துக்குடி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, செவித்திறன் சவால் உள்ளோருக்கான கல்வி ஆலோசகர் லதா ராஜேந்திரன்.

வழக்கத்தைவிட இந்த நேரத்தில்தான் உங்கள் குழந்தையின் மீது நீங்கள் அதிக அன்பையும் அக்கறையையும் காட்ட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அல்லாத குழந்தைகளின் பெற்றோருக்கே இதை வலியுறுத்துகிறோம் எனும்போது சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களாகிய நீங்கள் இன்னும் கவன மாகக் கையாள வேண்டும்.

இந்த நேரத்தில் அவர்களுக்குப் பெற்றோர், ஆசிரியர் என இரட்டைப் பொறுப்பையும் நீங்கள்தான் ஏற்க வேண்டும். கூடியவரையில் குழந்தையைத் தனிமையில் விடாதீர்கள். அவர்களின் மனநிலையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள அனுமதியுங்கள்.

சிறப்புக் குழந்தைகளுக்கும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் இன்றைய சூழலில் குழந்தைகளின் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் உபயோகத்தை பெற்றோராகிய நீங்கள்தான் கண்காணிக்க வேண்டும். அவர்கள் தெரியாமல் தவறான பாதைகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். இதை அவர்களுக்குத் தெரிந்தும் மறைமுகமாகவும் கண்காணிக்க வேண்டும். அதே நேரம் பெற்றோர் தன்னைச் சந்தேகப்படுகிறார்களோ என்ற எண்ணத்தை யும் குழந்தைக்கு ஏற்படுத்தக் கூடாது.

படிப்பு விஷயத்தில் உங்கள் குழந்தைகள் தடுமாறுவது தெரிந்தால் ஆசிரியருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவலாம். பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தால் ஹியரிங் எய்டை சரியாக உபயோகிக்கிறார்களா, பராமரிக்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் கண்காணிப்பார்கள். வீட்டில் அதையும் பெற்றோராகிய நீங்கள்தான் கவனிக்க வேண்டும்.

முடிந்தவரை வீட்டிலுள்ள அனைவரும் அவரவர் உரையாடல்களில் இப்படிப்பட்ட மாற்றுத்திறனுள்ள குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள். உதாரணத்துக்கு புதிதாக ஓர் உணவு சமைத்தால் அதன் பெயரைச் சொல்லிவிளக்குவது, ஒரு ஜோக் சொல்லி மற்றவர்கள் மட்டும் சிரிக்காமல் அதை அந்தக் குழந்தைக்கும் விளக்குவது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

தான் ஒதுக்கப்படுகிறோம் என்ற எண்ணம் அந்தக் குழந்தைக்கு வரவே கூடாது. பிள்ளை களின் மொழி வளர்ச்சி, பேச்சு, பிற திறமை களையும் வளர்க்கும் விஷயங்களில் ஈடுபடுத்த வேண்டும். எப்போதும் அவர்களை பிசியாக இருக்கச் செய்யலாம்.

செவித்திறன் சவால் உள்ள குழந்தை களுக்கு மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதில் சிரமம் இருக்கலாம். அவற்றை வெளிப்படுத்த குடும்ப உறுப்பினர்கள் உதவியாகவும் ஊக்கமாகவும் இருக்க வேண்டும். இந்தக் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கம் மிக அவசியம். சொற்களைத் தெரிந்துகொள்ள புரிந்துகொள்ள இது மிக அவசியம். பொது அறிவையும் வளர்க்கும். மொழி வளர்ச்சிக்கும் இது பெரிய அளவில் உதவும். எனவே, நல்ல புத்தகங்களை வாசிக்கப் பழக்குங்கள்.

அவள் பதில்கள்: 14 - நெஞ்செரிச்சல், அஜீரணம்... அடிக்கடி மருந்து எடுத்துக்கொள்வது சரியா?

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு