Published:Updated:

அவள் பதில்கள்! - 12 - தீராத உடல்வலி... டெஸ்ட்டெல்லாம் நார்மல்... தீருமா பிரச்னை?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

உலக அளவில் மக்கள் மருத்துவரை அணுக, காய்ச்சலுக்கு அடுத்தபடி இரண்டாம் இடத்தில் இருப்பது வலி.

அவள் பதில்கள்! - 12 - தீராத உடல்வலி... டெஸ்ட்டெல்லாம் நார்மல்... தீருமா பிரச்னை?

உலக அளவில் மக்கள் மருத்துவரை அணுக, காய்ச்சலுக்கு அடுத்தபடி இரண்டாம் இடத்தில் இருப்பது வலி.

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

என் வயது 48. கடந்த மூன்று ஆண்டுகளாக உடல்வலியால் அவதிப்படுகிறேன். உடல் முழுவதும் வலி... பொது மருத்துவரில் தொடங்கி, எலும்பு, நரம்பு மருத்துவர்கள் வரை எல்லோரையும் பார்த்துவிட்டேன்.

எல்லோரும் சொல்லிவைத்ததுபோல உடலில் ஒரு பிரச்னையும் இல்லை என்கிறார்கள். ‘உனக்கு மனசுதான் பிரச்னை. உடம்புல ஒரு பிரச்னையும் இல்லை’ என்கிறார்கள் வீட்டில். கடைசியாக மனநல மருத்துவரையும் பார்த்துவிட்டேன். அந்த சிகிச்சையிலும் பலனில்லை. என் வலி மட்டும் குறைந்தபாடாக இல்லை. இதற்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா?

- பி.மஞ்சுளா, சென்னை - 44

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

அவள் பதில்கள்! - 12 - தீராத உடல்வலி... டெஸ்ட்டெல்லாம் நார்மல்... தீருமா பிரச்னை?

உலக அளவில் மக்கள் மருத்துவரை அணுக, காய்ச்சலுக்கு அடுத்தபடி இரண்டாம் இடத்தில் இருப்பது வலி. எலும்பு தொடர்பான வலி, நரம்பு தொடர்பான வலி எனத் தனித்தனியே வரும் போது பிரச்னையில்லை. ஆனால், சிலருக்கு உடல் முழுவதும் வலி, ஒவ்வொரு

நாள் ஒவ்வோர் இடத்தில் வலி என மாறி மாறி வரும். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை ரத்த அழுத்தம், ரத்த சோகை என ஒவ்வொரு பிரச்னையாகப் பார்த்து, எந்தக் காரணத்துக்காக வரும் வலி என்றே தெரியாமல் கடைசியில் ‘காட் ஒன்லி நோஸ்’ (GOK- God Only Knows) என்று சொல்லிக்கொண்டு வலிக்கான மாத்திரைகளை மட்டுமே பரிந்துரைத்துக்கொண்டிருந்தார்கள். அடுத்தகட்டமாக இது மனநலம் தொடர்பான பிரச்னைகளின் பிரதிபலிப்பாக இருக்குமோ என்று அதற்கான சிகிச்சைகள் கொடுத்த காலமும் உண்டு. ஆனால், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இத்தகைய வலி ‘ஃபைப்ரோமயால்ஜியா பெயின் சிண்ட்ரோம்’, அதாவது தசைநார்களிலும் தசை முடிச்சுகளிலும் வலியை ஏற்படுத்துகிற ஒரு பாதிப்பு என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு வெறும் வலியாக மட்டுமல்லாமல், உடல் சோர்வு, மன அழுத்தம், மனச்சோர்வு, அசதி, படுத்துக்கொண்டே இருக்க வேண்டும் போன்ற உணர்வு, மரத்துப்போவது போன்று சுமார் 25 வகையான நோய்க்குறிகளையும் காட்டுகிறது. இதற்கான வழிகாட்டு முறைகள் மட்டுமன்றி, சிகிச்சைகளும் நிறைய வந்திருக்கின்றன. ஆனால், இதற்கான சிகிச்சையில் அடுத்த நாளே தீர்வை எதிர்பார்க்க முடியாது. குறைந்தது நான்கு முதல் ஆறு வாரக்கால சிகிச்சை தேவைப்படும். இப்படியொரு பிரச்னைக்கு சிகிச்சை வந்திருப்பதே பெரிய முன்னேற்றம்தான். இந்தக் காரணங்களைப் புரிந்துகொண்டு, வலி நிவாரண மருத்துவர்கள் மற்றும் புனர்வாழ்வு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டியது முக்கியம். பாதிக்கப்பட்ட நபரின் அவதிகளை குடும்பத்தாரும் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும். எனவே, உங்கள் குடும்பத்தார் சொல்வதைக் கேட்டு துவண்டுபோகாமல், உங்கள் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். சீக்கிரமே வலியிலிருந்து விடுபட வாழ்த்துகள்.

நித்யா மனோஜ் , ஷீபாதேவி , ஆன்டணி அஷோக் குமார்
நித்யா மனோஜ் , ஷீபாதேவி , ஆன்டணி அஷோக் குமார்

என் வயது 68. பதினைந்து வருடங்களாகத் தலைக்கு எண்ணெய் வைப்பதில்லை. ஆனாலும் முடி கறுப்பாகவே இருக்கிறது. எண்ணெய் வைப்பதைத் தவிர்ப்பது தவறானதா?

- வே.தேவஜோதி, மதுரை - 17

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஷீபாதேவி

கூந்தல் என்பது `கெரட்டின்' என்ற புரதத்தால் ஆனது. இந்தப் புரதம் நிறமற்றது. `ஹேர் ஃபாலிகிள்ஸ்' எனப்படும் கூந்தலின் நுண்ணறைகளில் `மெலனோசைட்ஸ்' எனப்படும் நிறமி செல்கள் இருக்கும். அவைதான் மெலனினை உற்பத்தி செய்பவை. அந்த மெலனின்தான் கூந்தலின் கருமைக்குக் காரணம். வயதாக, ஆக மெலனின் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால்தான் கூந்தல் நரைக்கிறது. ஆனால், இப்போதெல்லாம் இள வயதுக்காரர்களுக்கே குறைவாக இருக்கிறது. உங்கள் விஷயத்தில் அந்த மெலனின் சுரப்பு குறையாம லிருப்பது ஆச்சர்யம். ஆனால், எண்ணெய் வைப்பதன் மூலம் கிடைக் கும் பல பலன்களை நீங்கள் மிஸ் செய்கிறீர்கள்.

தலைக்கு எண்ணெய் வைப்பதும், எண்ணெய்க் குளியல் எடுப்பதும் காலங்காலமாகப் பின்பற்றப்படுகிற விஷயங்கள். முடி வளர்ச்சிக்கு மட்டுமன்றி, உடல் வலிமைக்கும் இவை அவசியம். எண்ணெய் வைத்துக் குளிப்பதால் கூந்தலின் வேர்க்கால்கள் தூண்டப்பட்டு நிறமி செல்களுக்கு ஊட்டம் அளித்து, முடி வளர்ச்சி தூண்டப்படும். ஆனால், இன்றைய பெண்கள் எண்ணெய் வைப்பதையும், எண்ணெய்க் குளியலையும் விரும்புவதே இல்லை. ஆனால், கூந்தலுக்கு எண்ணெய் வைப்பதும் எண்ணெய்க் குளியல் எடுப்பதும், இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியம். நம்முடைய உணவில் பி 12 குறைபாடு அதிகரித்து வருகிறது. வசதி, நேரமின்மை காரணமாக ஷாம்பூ குளியல் எடுத்து, கூந்தலின் பி.ஹெச் அளவைக் குறைத்துக் கொள்கிறோம். அதை ஈடுகட்ட எண்ணெய் தேய்ப்பது அவசியம்.

எண்ணெய்க் குளியல் என்பது மன அழுத்தத்தையும் குறைக்கும். தவிர பொடுகு, பூஞ்சைத் தொற்று போன்ற பிரச்னைகளில் இருந்தும் காக்கும். வாரம் ஒரு முறையாவது தலையில் எண்ணெய் வைத்து அரை மணி நேரம் ஊறி, பிறகு ஷாம்பூ குளியல் எடுக்கலாம். அதனால் கூந்தல் வறட்சி தவிர்க்கப்படும். நரைக்காது.

தலையில் எண்ணெய் வைத்தால் தோற்றமே மாறிப்போகிறது என்ற நினைப்பில் இன்று பலரும் அதைத் தவிர்க்கிறார்கள் அல்லது பெயருக்கு நான்கைந்து துளிகளைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள். எண்ணெய் வைக்கவென ஒரு முறை இருக்கிறது. மண்டைப் பகுதியில் வேர்க்கால்களில்படும்படி லேயர், லேயராக கூந்தலைப் பிரித்து எண்ணெய் தடவ வேண்டும். கூந்தல் நுனிவரை தடவ வேண்டும். அரை மணி நேரம் ஊறி, பிறகு அலச வேண்டும். பகலில் எண்ணெய் வைக்கப் பிடிக்காதவர்கள், இரவில் தலைக்கு எண்ணெய் தடவி, மசாஜ் செய்யலாம். தலையணையின் மீது ஒரு துணியை விரித்துவிட்டுப் படுக்க வேண்டும். மறுநாள் காலையில் தலைக்குக் குளிப்பது இன்னும் சிறந்தது.

கொரோனாவுக்குப் பிறகு, பிரபல ஹோட்டல் களே மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் ஆர்வம்காட்டும் என் மகனுக்கு அந்தத் துறையில் எதிர்காலம் இருக்குமா? எப்படிப்பட்ட பிரிவுகளில் வாய்ப்புகள் இருக்கின்றன?

- மனோன்மணி பாலன், திருச்சி-11

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் ஆன்டணி அஷோக் குமார்.

ஹோட்டல்கள் எதுவும் நிரந்தரமாக மூடப்படவில்லை. பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருப்பதுபோல இதுவும் தற்காலிக பிரச்னையே. இன்னும் சொல்லப்போனால் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி படித்தவர்களுக்கு கொரோனா காலத்திலும் வேலை வாய்ப்புகள் இருந்ததுதான் உண்மை. உணவு என்பது மனிதர்களின் அத்தியாவசிய தேவை என்பதால் ஊரடங்கிலும் ஹோட்டல் பிசினஸ் முடங்கவில்லை. உலக அளவில் இதுதான் நிலை. கொரோனா காலத்திலும் திறமையான செஃப்களுக்கு நிறையவே டிமாண்டு இருக்கிறது. இது எக்ஸிகியூட்டிவ் செஃப் லெவலில் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி, கடைநிலை செஃப்களுக்கும் பொருந்தும். சென்னை, மும்பை, டெல்லி என எந்த நகரத்தின் போக்குவரத்தைக் கவனித்தாலும் ஸ்விக்கி, ஸொமேட்டோ ஊழியர்களின் எண்ணிக்கையே அதிகமிருக்கும்.

கேட்டரிங் என்பதை வெறும் ஹோட்டல் வேலையோடு மட்டும் பொருத்திப் பார்க்காதீர்கள். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்குமான உணவுத் தயாரிப்புக்கு ஆட்கள் தேவை. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக ரெஸ்டாரன்ட் இருக்கும். அங்கே பணிபுரிய ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த வர்கள் தேவை. இன்று எல்லா நட்சத்திர ஹோட்டல்களிலும் `கிளவுட் கிச்சன்' என்ற கான்செப்ட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது ஸ்டார் ஹோட்டல்களிலும் ஹோம் டெலிவரி செய்கிறார்கள். கொரோனா காலத்திலும் அதிக அளவில் முன்னேறியிருப்பது கிளவுட் கிச்சன்கள்தான். ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் சமையல் மட்டும் இருப்பதில்லை. ஃப்ரன்ட் ஆபீஸ், ரெஸ்டாரன்ட் ஆபரேஷன், ஹவுஸ் கீப்பிங், மார்க்கெட்டிங், சேல்ஸ் என நிறைய பிரிவுகளைக் கொண்டது அந்தப் படிப்பு. இவை தவிர ஏர்லைன் கேட்டரிங் என்றொரு பெரிய ஏரியா இருக்கிறது. விமானப் பயணிகளுக்கான உணவுத் தயாரிப்புத்துறை அது. ஃபிளைட் கிச்சன் எனப்படும் அதிலும் வேலை வாய்ப்புகள் ஏராளம். எனவே, உங்கள் மகனின் ஆர்வத்துக்குத் தடை போடாதீர்கள்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

அவள் பதில்கள்! - 12 - தீராத உடல்வலி... டெஸ்ட்டெல்லாம் நார்மல்... தீருமா பிரச்னை?
அவள் பதில்கள்! - 12 - தீராத உடல்வலி... டெஸ்ட்டெல்லாம் நார்மல்... தீருமா பிரச்னை?
அவள் பதில்கள்! - 12 - தீராத உடல்வலி... டெஸ்ட்டெல்லாம் நார்மல்... தீருமா பிரச்னை?