பிரீமியம் ஸ்டோரி

கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், சென்னை எனத் தமிழகத்தின் பல பகுதிகள் மழையால் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு உள்ளன. உங்கள் ஊர் அனுபவங் களையும், மழை மேலாண்மையில் நாம் எந்தளவுக்கு முன்னேறியுள்ளோம் அல்லது பின்தங்கியுள்ளோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் பகிருங்களேன் என்று சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். அவற்றில் சிறந்தவை இங்கே...

R.Nagarajan

என் ஊர் செம்பனாா்கோவில். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. கிராம பட்டாமணியம் மற்றும் கருணீகர்களை பணிநீக்கம் செய்து கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்தது அ.தி.மு.க அரசு. அதிலிருந்தே புறம்போக்கு நிலங் களின் விவரங்கள் படிப்படியாக மறைந்து போயின. ஆட்சியாளர்கள், அவர்களின் கட்சிக்காரர்கள் புறம் போக்கு நிலங்களை கபளீகரம் செய்தனர். ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்றனர். விளை நிலங்கள் முழுவதும் ரியல் எஸ்டேட் காரர்களால் விற்பனை செய்யப்பட்டு வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழல் பொறுப்பில்லை. இப்படிப்பட்ட சூழலில் மழை பெய்தால் வீடுகள் மூழ்காமல் என்ன செய்யும்?

Anbu Bala

எங்கள் ஏரியா மேடவாக்கம் அருகிலுள்ள விக்னராஜ புரம். எங்கள் ஏரியாவில் தண்ணீர் அதிக அளவில் தேங்கவில்லை. மேலும், எங்கள் வார்டு மெம்பர் பாரதி அம்மாளும், அவரின் குடும்பத்தாரும் எங்களிடம் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் போல் மழை குறித்த புகார்களைக் கேட்டறிந்தனர். அவர்கள் தொடர்ந்து நீர்நிலைகளைச் சுத்தம் செய்து வருவதுடன், குப்பைகளை அகற்றி நீர் வழித்தடங்களை தூர் வாரும் பணிகளையும் சிறப்பாகச் செய்து வருகின்றனர். பாராட்டுகள்!

Janaki Paranthaman

கோவையில் நாங்கள் இருக்கும் பகுதியில் (ராம நாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோடு) நீர்த்தேக்கம் கிடையாது. ஆங்காங்கே மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் இருக்கின்றன. இதை வீடுகளுக்கு மட்டுமல்லாது கடை களுக்கும் கட்டாயப்படுத்த வேண்டும். இதற்கான சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். நீர் நிலைகளில் தூர் வாரும் பணியை மழைக்கு முன் செய்துவிட்டால், `அம்மாடி, ஆத்தாடி' என்று அல்லல்பட வேண்டாம். வரும் முன் காப்போம் என்பது நோய்க்கு மட்டுமல்ல, இயற்கை தாக்குதலுக்கும் அதுவே மந்திரம்.

மழை
மழை

C.B.Raju

மெட்ரோ வாட்டர் நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து பணி யாற்றினால், திட்டமிடுதலே இல்லாமல் கண்ட இடங்களில் எல்லாம் பள்ளம் தோண்டி தெருக் களை நாசமாக்குவதைத் தவிர்க்க முடியும். அதேபோல, மழைக் காலத்தில் நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை உடனடியாக அகற்ற வழிவகை செய்ய வேண்டும். சிங்கார சென்னைக்கு இவை எல்லாம் அவசியத் தேவை.

Gomathi Sivayam

தெரிந்தோ, தெரியாமலோ நீர்நிலைகள் பராமரிப்பை உதாசீனப்படுத்தி இப்படி ஒரு நிலைமையை உருவாக்கி விட்டோம். சிறுகச் சிறுகவே சரி செய்ய வேண்டும். இருக்கிற குளங்களை முதலில் தூர்வாரி சுத்தம் செய்தால், தண்ணீர் தேங்காமல் குளத்துக்குள் சென்று விடும். நிலத்தடி நீர் சேமிக்கப்படுவதால் அருகில் உள்ள ஏரியாக்களில் தண்ணீர் பிரச்னையும் குறையும். அரசாங்கத்தையே குறை சொல்லாமல், குளத்தினுள் கழிவுகள், குப்பைகளைப் போடாமல் இருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதையும் உணர வேண்டும்.

Mahalakshmi Subramanian

சின்ன மழைக்கே தெருக்கள் தீவாகிவிடுகின்றன. பொதுப்பணித்துறையால் தோண்டப்படும் பள்ளங்கள் சரியாக மூடப்படுவதில்லை. அதிகாரிகளின் பொறுப்பற்ற பணிகள், பல விதங்களிலும் பொதுமக்களை பாதிக்கிறது. தன்னார்வ அமைப்புகள் வாய்க்கால், ஏரிகளைத் தூர்வாரினாலும் வடிகால் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், கழிவுகளைக் கொட்டுவது எனப் பல காரணங்களால் தண்ணீர் ஓடாமல், அங்கங்கே வெள்ளமாகவும், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புமாக உள்ளது. சீரமைப்புப் பணிகளை அந்தந்தப் பகுதி மக்களே செய்து கொள் கிறோம். நீர்நிலைகளில் குப்பைகளைப் போடாமல், நாங்களே இயன்ற அளவு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி எங்கள் பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்கிறோம். சாலைகளின் நிலையைப் பார்த்தால் ஆட்சியாளர்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது.

Kalai Malar

நான் சாலிகிராமத்தில் உள்ள விஜயராகவபுரத்தில் வசிக்கிறேன். இங்கே மழைக்காலங்களில் மட்டும் அல்லாமல் எப்போதும் தெருக்களில் சாக்கடை ஓடிக் கொண்டிருக்கும். தமிழகத்தில் உள்ள பல தெருக்களுக்கும் இந்நிலை இருக்கக்கூடும். தெருக்களில் உள்ள கழிவு நீர் அமைப்புகளை முறையாகக் கோடைக்காலத்தில் சரிபார்த்திருந்தால் இப்போது குடிநீரில் சாக்கடை கலக்கும் அபாயம் வரை அவலங்கள் நேர்ந்திருக்காது. புகார் செய்தாலும் பலனில்லை. கொசுக்கள் அதிகம் உருவாகிவிட்டன. அதிகாரிகள் எப்போது வருவார்கள்?

@Leelusubbu

பருவநிலை மாற்றங்களால் இயற்கைச் சீற்றத்தின் விளைவுகளைக் கணிக்க முடியாத நிலையாகிவிட்டதால், எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறோம். இன்னொரு பக்கம், சென்னையில் மக்கள் தொகைக்கு இடத்தேவை இருப்பதால் கட்டடங்களும் கூடிக்கொண்டே போகின்றன. நீண்டகால நோக்கில் திட்டங்கள் யோசிக்கப்பட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு