Published:Updated:

``நிஷாவின் பெற்றோரை நாம் கொண்டாட வேண்டும்!”

#Avaludan
பிரீமியம் ஸ்டோரி
#Avaludan

#Avaludan

``நிஷாவின் பெற்றோரை நாம் கொண்டாட வேண்டும்!”

#Avaludan

Published:Updated:
#Avaludan
பிரீமியம் ஸ்டோரி
#Avaludan

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த கொளஞ்சி, சுமை தூக்கும் தொழிலாளி. அவர் மனைவி அமுதா, தூய்மைப் பணியாளர். இந்தத் தம்பதியின் மகன் நிஷாந்த். அவர் திருநங்கையாகத் தன்னை உணர்ந்தபோது பெற்றோர் எதிர்க்க, வீட்டைவிட்டு வெளியேறினார். நிஷாவாக பெயர் மாற்றம் செய்து வாழ ஆரம்பித்தார். பின்னர் பெற்றோர், நிஷாவைப் புரிந்துகொண்டு வீட்டுக்கு அழைத்துவர, நிஷா பாலியல் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ள, 21 வயதில் தங்கள் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தியுள்ளனர் அவர் பெற்றோர். திருநர் சமூகத்துக்கான முதல் அங்கீகாரம் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்தச் சம்பவம் பற்றிய வாசகர்களின் கருத்து களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லி, அவள் விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். அவற்றில் சிறந்தவை இங்கே...

பார்த்தசாரதி: குடும்பத்தால் கைவிடப்பட்ட திருநங்கைகள் சமூகத்தில் படும் அவஸ்தைகளை கண்கூடாகப் பார்க்கிறோம். தன் பிள்ளையின் உணர்வுக்கு மதிப்பளித்த இந்தத் தாய் தந்தை, திருநர் சமூகத்தினரின் பெற்றோர்களுக்கு மிகச் சிறந்த முன் உதாரணமாகியுள்ளனர்.

BanuMiss Svm: சமூகத்துக்கு பயந்துதானே பால் மாறும் பிள்ளைகளைப் புறக்கணிக் கிறார்கள் பெற்றோர்கள்? நிஷாவின் அம்மா அப்பா அதே சமூகத்தை அழைத்து தன் பிள்ளைக்கு நிகழ்ச்சி நடத்தியிருப்பது, தங்கள் குடும்பத்தில் மட்டுமல்லாது சமூகத் திலும் அந்த மாற்றத்தைக் கொண்டுவரும் சிறப்பான செயல். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Vignesh: பெற்றோருக்கு ஹேட்ஸ் ஆஃப். சகோதரிக்கு வாழ்த்துகள். உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் இணைகிறோம்.

Saraswathy Padmanaban: சில மாதங்களுக்கு முன் அந்தப் பதின்ம வயதுக் குழந்தையைச் சந்தித்தேன். ‘மேடம், இப்பவெல்லாம் பொம்பளைப் பிள்ளைங்க டிரஸ் போட்டுக்க ஆசையா இருக்கு. அம்மா வீட்டைவிட்டுத் துரத்திட்டாங்க. பிச்சை எடுக்குறேன், எங்க ஆளுங்க (திருநங்கைகள்) கூட தங்கியிருக்கேன்’ என்றபோது மனம் கனமானது. சமீபத்தில் ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டரில் அந்த முகத்தைக் கண்டபோது, உயிர் உறைந்து விட்டேன். குடும்பத்தின் புறக்கணிப்பால் சமூக வன்முறைகளின் கைகளில் சிக்கி, மரணத்திடம் சென்று சேர்ந்துவிட்டது அந்த உயிர். இதில் முதல் குற்றவாளி, அந்தக் குடும்பம்தானே?

Kanniya Devi Thulasiraman: இந்தப் பெற்றோரின் மன தைரியத்துக்குப் பாராட்டு கள். சமூகக் கட்டுப்பாடுகளை உடைக்கும் குடும்பங்கள், தங்களுக்கான மகிழ்ச்சியைக் கண்டடைகின்றன.

Mahalakshmi Subramanian: நிஷாவின் பெற்றோரைப் பாராட்ட வேண்டியது, கொண்டாட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை, சமூகக் கடமை. அப்போதுதான், திருநர் பிள்ளைகளைக் கொண்டுள்ள மற்ற பெற்றோர்களுக்கும் இந்த விழிப்புணர்வு, மனமாற்றம் கிடைக்கும். திருநர் சமூகத்தினரின் வாழ்வு, துன்பங்களிலிருந்து காக்கப்படும்; மேம்படும்.

Susee: மனதார வாழ்த்துகிறேன். எல்லா திருநர்களுக்கும் இப்படி குடும்பத்தின் அன்பு கிடைக்க வேண்டுகிறேன்.

``நிஷாவின் பெற்றோரை நாம் கொண்டாட வேண்டும்!”

Janaki Paranthaman: திருநர் பிள்ளைகளை பெற்றோர்களே ஏற்கவில்லை யென்றால் மற்றவர்கள் எப்படி ஏற்பார்கள்? அதுவே, அவர்களைப் பெற்றோர்கள் மனமுவந்து ஏற்கும்போது, தங்குமிடம் முதல் படிப்பு, வேலை என இயல்பானதொரு வாழ்க்கையை அவர்களும் கிடைக்கப் பெறுவார்கள். அவர்களது சமூகப் பங்கேற்புக் கான வேலைகளை அரசும் செய்ய வேண்டியது அவசியம்.

Breeze: இந்த உலகில் எதுவும், யாருக்கும் நடக்கலாம். நாளை ஒருவேளை நம் பிள்ளைகள் திருநம்பியாக/திருநங்கையாக மாறினால் நாம் செய்ய வேண்டியது, மனதார ஏற்றுக் கொள்வதே. அதுவே அவர்களின் முதல் தேவை. அவர்களை அதே அன்போடும், கூடுதல் புரிந்துணர்வோடும் அணைத்து, பாதுகாப்பு உணர்வையும், இந்த உலகத்தை தங்களது புதிய பாலின அடையாளத்தோடு சந்திப்பதற்கான தைரியத்தையும் அவர் களுக்குக் கொடுப்போம்.

G Karpagam: வீடு என்ற கூடு வெளியேற்றாமல் அரவணைத்துக்கொண்டால், பிச்சை எடுப்பது முதல் பாலியல் தொழில் செய்வது வரை, எந்த அவலத்துக்கும் தள்ளப்படாமல் மரியாதையான, பாதுகாப்பான வாழ்க்கையை வாழ அவர்களுக்கு வழி கிடைக்கும்.

Ananthy Murugaraj: நெகிழவைக்கிறது. இங்கு கொள்ளை முதல் கொலைவரை செய்த குற்றவாளிகள்கூட சுதந்திரமாக உலாவர, பால் மாற்றம் என்ற இயற்கையான நிகழ்வுக்கு ஆளான திருநர் சமூகத்தினரை துன்பங்கள் சூழ்ந்த வாழ்க்கைக்குத் தள்ளுவது அநியாயம். நிஷாவின் பெற்றோர் முதலில் அதைச் செய்தாலும், பின்னர் தங்கள் பிள்ளையைப் புரிந்துகொண்டது சிறப்பான மனமாற்றம்.

Shajathi: மாற்றம் நம்மில் இருந்தே தொடங்க வேண்டும் என்று வெறும் வார்த்தைகளாகப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் பலர். செயலில் காட்டியிருக்கும் நிஷாவின் பெற்றோருக்கு... சல்யூட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism