ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

மருத்துவ அலட்சியமா... மருத்துவக் கொலையா?

மருத்துவ அலட்சியமா... மருத்துவக் கொலையா?
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவ அலட்சியமா... மருத்துவக் கொலையா? ( lakshmiprasad S )

#Avaludan

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தை சேர்ந்த 53 வயது சுரேஷ் சந்திரா, தனியார் மருத்துவமனையில் சிறுநீரகக் கல்லுக்கு சிகிச்சை எடுத்தார். ஆனால், தனக்குத் தெரியாமல் தன் சிறுநீரகம் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தபோது அதிர்ந்தவர், மாவட்ட சுகாதார துறையில் புகார் அளித்துள்ள சம்பவம், நாட்டையே அதிரவைத்துள்ளது. பில்லிங் முதல் சிகிச்சை வரை தனியார் மருத்துவ மனைகளில் நடக்கும் குற்றங்கள், மற்றும் மருத்துவ அலட்சியத்தால் (Medical Negligence) நேரும் பாதிப்புகள் குறித்த உங்கள் அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்...

Sathia Moorthi

மருத்துவத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் வரம். ஆனால், உயிர்காக்க வேண்டிய மருத்துவத் துறை யிலேயே குற்றங்கள் நடப்பது மிக மிக ஆபத்தானது. காசைக் கொட்டி மருத்துவப் படிப்பு படித்து, பெரிய முதலீட்டில் மருத்துவமனை ஆரம்பித்து என்று மருத்துவம் தொழிலாக மாறும்போது, மருத்துவர்களின் பேராசை அவர்களை வெள்ளைக் கோட் போர்வையில் குற்றம் செய்யத் துணிய வைக்கிறது.

Janaki Paranthaman

ஒருவர் தன் உடல் உறுப்பை பணத்துக்காக விற்பது சட்டப்படி குற்றம். எனவேதான், உடல் உறுப்பு தானம் இங்கே பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ மனைகளிலேயே உடல் உறுப்புகள் திருடப்படும் கொடூரத்தை என்னவென்று சொல்வது? சம்பந்தப்பட்ட மருத்துவரின் லைசன்ஸை கேன்சல் செய்வது, மருத்துவ மனைக்கு சீல் வைப்பது எனக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். தீவிரமான காவல்துறை புலனாய்வு, கடுமையான சட்ட நடவடிக்கைகளால், இந்த மாஃபியாவில் உள்ளவர்களை களையெடுக்க வேண்டும்.

மருத்துவ அலட்சியமா... மருத்துவக் கொலையா?
lakshmiprasad S

Anbu Bala

சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா, மூட்டுவலி பிரச்னைக்கு அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது மருத்துவர்கள் கட்டு போட்டபோது ஏற்பட்ட கவனக்குறைவால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட சூழலில் காலை நீக்கினார்கள். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரே பறிபோயிருக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது? சில அரசு மருத்துவமனைகளில், சில மருத்துவர்களின் அலட்சியமான, திமிரான போக்கு இப்படித்தான் இருக்கிறது. அதற்கு அந்த இளம் பெண்ணின் உயிரிழப்பு ஓர் உதாரணம். மருத்துவ அலட்சியத்தைப் பொறுத்தவரை, தனியார் மருத்துவ மனைகளை விட, ‘கேட்பாரற்ற’ மனநிலையில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் குற்றங்கள் பல. அதற்கு பலியாகி பாதிப்புக்கு உள்ளான, உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை... வெளிவராமல் இன்னும் எத்தனையோ?

ja.gan3153

பொதுவாக, பாலியல் குற்றவாளிகளுக்கு, கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு எல்லாம் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று நாம் குரல் கொடுத்துக்கொண்டே வருவது வாடிக்கை. ஆனால், மருத்துவர்களே குற்றவாளிகளாகி நமக்கு அச்சமூட்டி, உறுப்பு திருட்டு, மருத்துவ அலட்சியம் உள்ளிட்டவற்றுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று நம்மை வலியுறுத்த வைக்கிறார்கள். அந்தத் துறைக்கே பெரும் இழுக்கு.

venkeyvenkateswar

உறுப்புத் திருட்டில் அவ்வப்போது இப்படி வெளிப்படும் ஒன்றிரண்டு செய்திகள், வாலின் நுனிதான். இது தேசிய அளவில், சர்வதேச அளவில் நடந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய மாஃபியா. மருத்துவமனைகளின், மருத்துவர் களின் பங்களிப்பு இல்லாமல் இது நடக்க வாய்ப்பில்லை என்பதே கசப்பான உண்மை. இதுகுறித்து அவ்வப்போது வரும் இதுபோன்ற செய்திகள், இதை மையமாக வைத்து எடுக்கப்படும் க்ரைம் திரைப்படங்களை எல்லாம் பார்க்கும்போதே... பதறவைக்கக் கூடியது அந்த நெட் வொர்க். இங்கு உள்ள எத்தனை மருத்துவமனைகள் உடல் உறுப்பு திருட்டு கூடாரங்களாக, மருத்துவர்கள் உடல் உறுப்பு திருடர்களாக, திருட்டு ஏஜென்ட்களாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது, திகிலூட்டக்கூடியது. இந்தக் குற்றத்துக்கு எதிரான அரசின் புலனாய்வு, விசாரணை, தண்டனை எல்லாம் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

natraj5100

சம்பளம், கட்டணம் பெற்றுக்கொண்டு தான் செய்ய வேண்டிய வேலையில் மெத்தனம், அலட்சியம், திமிர் காட்டினால் சரிசெய்ய வாய்ப்புள்ள, கோப்பு, கணினி சம்பந்தப்பட்ட பணி அல்ல இது. கையாள்வது ஒரு மனித உயிரை. அதனால்தான், மருத்துவர்களுக்கு இந்த மரியாதையும், கட்டணமும். அந்தப் பொறுப்பை உணர்ந்தும், அதில் தவறு செய்யும் மருத்துவர்களை, ‘மருத்துவ அலட்சியம்’ என்று சொல்லி அந்தக் குற்றத்தை நீர்க்கச்செய்யக் கூடாது. ‘மருத்துவக் கொலை’ என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்த வேண்டும்.

annamalaiseeralan

தேவையற்ற பரிசோதனைகளை செய்யச்சொல்வது, தாறுமாறான பில்லிங் முதல் `மெடிக்கல் நெக்லிஜன்ஸ்' (Medical Negligence), `மெடிக்கல் க்ரைம்' (Medical Crime) வரை மருத்துவமனைகளிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.