Published:Updated:

‘ரூம் போட்டுப் பேசும்’ கிளப் ஹவுஸ்! - உள்நுழைவோர் கவனத்துக்கு...

கிளப் ஹவுஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கிளப் ஹவுஸ்

கிளப் ஹவுஸும் சர்ச்சைகளிலிருந்து தப்பவில்லை. ‘என் மனைவி உனக்கும் மனைவி’ என்கிற லிங்கில், ‘நான் ரெடி நீ ரெடியா’ என்று கொச்சையாகக் கேட்டுக்கொண்டிருக் கிறார்கள்

எழுத்து, வீடியோக்கள் மூலம் மக்களை ‘கனெக்ட்’ செய்த சமூக வலைதளங்களின் புதுவரவு கிளப் ஹவுஸ். ‘ஆடியோ ஒன்லி’ என்னும் கிளப் ஹவுஸில் தனித்தனி தலைப்புகளுக்கு தனி ‘ரூம்கள்’ உருவாக்கலாம். ரூமை உருவாக்கியவர் யாருக்கெல்லாம் அனுமதி தருகிறாரோ அவர்கள் பேசலாம். அதில் இணையும் அனைவரும் பேசுவதைக் கேட்கலாம். `எனக்கு ஸ்டேஜ் ஃபியர் இருக்கு’ என்று பயப்படுபவர்கள்கூட கிளப் ஹவுஸ் அறைகளில் தங்களுக்குப் பரிச்சயமான தளங்களில் ‘சும்மா கிழி’ ரேஞ்சில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால், இதற்குள் எப்படி நுழைவது என்று பார்த்துவிடலாம்.

உங்கள் கைப்பேசியில் `கிளப் ஹவுஸ்' செயலியைப் பதிவிறக்கம் செய்து உங்கள் பெயரைப் பதிவு செய்வது முதல் ஸ்டெப். ஏற்கெனவே கிளப் ஹவுஸில் இருக்கும் யாரேனும் ஒருவர் உங்களை பரிந்துரை செய்தால் போதும். அடுத்து, `அரசியல்’, ‘சினிமா’ என்று உங்களுக்குப் பிடித்தமான களங்களைக் குறிப்பிட வேண்டும். இந்தக் களங்கள் தொடர்பான தலைப்புகளில் இருக்கும் ரூம்கள் உங்கள் டைம் லைனில் தெரியும். இதன் வழியாக கிளப் ஹவுஸின் அறைக்குள் நுழையலாம். அல்லது, கிளப் ஹவுஸில் உருவாக்கப்பட்ட ஒரு குழுவின் லிங்கை யாராவது உங்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இன்வைட் செய்தால், அதன் வழியாகவும் அறைக்குள் நுழையலாம். அல்லது, கிளப் ஹவுஸில் நீங்கள் யாரையெல்லாம் பின்தொடர்கிறீர்களோ, அவர்கள் உருவாக்குகிற எல்லா தலைப்புகளும் உங்களுடைய டைம் லைனில் காட்டும். இதில் உங்களுக்குப் பிடித்த தலைப்பின் மூலமும் அறைக்குள் நுழையலாம். தலைப்பு பிடித்துப்போய் அல்லது ஆர்வத்தால் ஓர் அறைக்குள் நுழைந்துவிட்டால் மற்றவர்கள் பேசுவதை உங்களால் கேட்க மட்டுமே முடியும். நீங்களும் பேச வேண்டுமென்றால் அந்த அறையின் தொகுப்பாளரிடம் அல்லது நடுவரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அவர்கள் அனுமதித்தால் நீங்களும் பேச முடியும். பேச்சாளர் ஆனபிறகு நடுவராவதும் தொகுப்பாளராவதும் எப்படி என்பது உங்களுக்கே தெரிந்துவிடும். இனி கிளப் ஹவுஸ் அறைகளுக்குள் வலம் வருவோம்.

‘ரூம் போட்டுப் பேசும்’ கிளப் ஹவுஸ்! - உள்நுழைவோர் கவனத்துக்கு...

ஓர் அறைக்குள், ‘மென்ஸ்ட்ருவல் கப்’பை எப்படிப் பயன்படுத்துவது என்று பெண்ணொருவர் விளக்கமளித்துக்கொண்டிருந்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்களில் சிலர், ‘தங்களுடைய காதலி / மனைவி மென்ஸ்ட்ருவல் கப்பைப் பயன்படுத்த பயப்படுகிறார்கள். அவர்களின் பயத்தைத் தெளிவிக்க எங்களுக்கு இதைப்பற்றித் தெரிய வேண்டுமல்லவா... அதற்காகத்தான் இந்த அறைக்குள் வந்தோம்’ என்கிறார்கள்.

இன்னோர் அறைக்குள், `கரகாட்டக் காரன்’ படத்தின் இசை, பின்னணி இசையை சீன் பை சீனாக விவரித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மற்றோர் அறைக்குள் அரசியல் கட்சிகளின் ஐ.டி விங்ஸ் சீரியஸாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். தவிர, பெண் தொழில்முனைவோர்களின் தன்னம் பிக்கை கதைகள், உணவு முறைகள், எழுத்தாளர் களுடன் இலக்கிய உரையாடல், பிடித்த பிரபலங்களுடன் பேசுவது, தமிழக வரலாறு, உலக வரலாறு, பொது அறிவுப் பரிமாற்றம் என்று வலைதள உலகில் காலடி எடுத்துவைத்த மிகக் குறுகிய காலத்திலேயே கிளப் ஹவுஸ் பெரும் பான்மை மக்களிடம் பிரபலமாகிவிட்டது.

இத்தனை ப்ளஸ் இருந்தாலும், கிளப் ஹவுஸும் சர்ச்சைகளிலிருந்து தப்பவில்லை. ‘என் மனைவி உனக்கும் மனைவி’ என்கிற லிங்கில், ‘நான் ரெடி நீ ரெடியா’ என்று கொச்சையாகக் கேட்டுக்கொண்டிருக் கிறார்கள். இன்னோர் அறையில் மருத்துவர் ஒருவர் பாடகி ஒருவரிடம் ‘நீங்கள் எந்த மனநல மருத்துவரிடம் சிகிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்’ என்று தன் துறைக்கான வரம்பை மீறி பேசிவிட்டு, பிறகு ‘மது அருந்தியதால் அப்படிப் பேசிவிட்டேன்’ என்று மன்னிப்பு கேட்கிறார்.

கிளப் ஹவுஸில் இயங்கிக்கொண்டிருக்கும் மூன்று பெண்களிடம் அனுபவங்களைக் கேட்டோம்.

``எழுதுறப்போ இது வேணும், இது வேணாம்னு நாமளே ஃபில்டர் பண்ணிடுவோம். ஆனா, இது பேசுற தளம். அந்த நொடி இதைப் பேசலாமா, கூடாதான்னு யோசிச்சு பேச முடியாது. வார்த்தைகள் வந்து விழுந் திடும். அதுல கவனமா இருக்கணும். என்னோட முதல் கிளப் ஹவுஸ் அனுபவம் வரலாறு சார்ந்து அமைஞ்சது. `அரசியலமைப்புல மாட்டிறைச்சி தடை பத்தி தவறான தகவல்களை சிலர் பேசிக்கிட்டிருக்க, நான் அது தொடர்பான வரலாற்றுத் தகவல்களை எடுத்துச் சொன்னேன். அந்த அறையில் இருந்தவங்க எல்லாரும் பாராட்டினாங்க. இங்க அரசியல், சினிமா, கலாசாரம், பண்பாடு பத்தி பேசுறதுக்கு நிறைய பேர் இருக்காங்க. ஆனா, அவற்றுக்குப் பின்னாடியிருக்கிற வரலாறு பத்தி பேசத்தான் ஆளில்லையோன்னு தோணுச்சு. ஸோ, இளைஞர்கள் அதிகமாக இருக்கிற கிளப் ஹவுஸ்ல எனக்குத் தெரிஞ்ச வரலாற்று உண்மைகளையெல்லாம் பேசிட்டு இருக்கேன். ஆரம்பத்துல 50 பேர்தான் கேட்டாங்க. இப்போ 500 பேருக்கு மேல கேட்கிறாங்க’’ என்கிறார் ஷாலின் மரிய லாரன்ஸ்.

மு.வித்யாவின் அனுபவம் வேறு ரகம். ‘`கிளப் ஹவுஸ்ல ரெண்டு, மூணு அறைகள்ல ரொம்ப நல்லா பாடு வாங்க. தினமும் அவங்க பாடுறதைக் கேட்க அந்த அறைகளுக்குள்ள போயிடுவேன். ‘நம்மளைத்தவிர எல்லாரும் சூப்பரா பாடுறாங்க’ன்னு ஃபேஸ்புக்ல போஸ்ட் ஒரு போட் டேன். அதுக்கு ‘நானும்’னு நிறைய பேர் பின்னூட்டம் போட்டிருந்தாங்க. இத்தனை பேர் இருக்கீங்கன்னா சுமாரா பாடுறவங்களுக்கு ஒரு குரூப் ஆரம்பிக்கலாம்னு இன்னொரு போஸ்ட் போட்டேன். அடுத்த பத்து நிமிஷத்துல நண்பர் பழனி, ‘சுமாராக பாடுவோர் சங்கம்’ என்ற பேர்ல ஒரு ரூம் உருவாக்கி எனக்கு லிங்க் அனுப்ப, இன்னொரு நண்பர் ராஜேஷ், ‘சுமாரா சிங்கர்ஸ்’ என்ற பேர்ல ஒரு கிளப் ஆரம்பிச்சு லிங்க் அனுப்பினார். நான் ரெண்டையும் ஒண்ணு சேர்த்துட்டேன். பாடு றோமா, இல்லையோ செமயா ஃபன் பண்றோம்; நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருக்கு’’ என்று சிரிப்பவர், ‘நம்மோட போன் நம்பர் கொடுத்துதான் கிளப் ஹவுஸை ஆக்டிவேட் செய்றோம்கி றதால, தேவையில்லாத பிரச்னைகள் வரலாம். கிளப் ஹவுஸுக்குள்ள பேசிக்கிட்டிருக்கும்போது, போன் வந்து எடுத்து பேசினா அறைக்குள்ள இருக்கிற அத்தனை பேருக்கும் கேட்டுடும். வெளியே வந்துதான் பேசணும். அறைக்குள்ள இருக்கிற யாரோ ஒருத்தர் நாம பேசுறதை ஸ்கிரீன் ரெக்கார்டிங்கோட வாய்ஸ் ரெக்கார்டிங் செஞ்சு சோஷியல் மீடியால போட்டுடலாம். கவனமா பேசுங்க’’ என்று எச்சரிக்கையும் விடுக்கிறார்.

‘ரூம் போட்டுப் பேசும்’ கிளப் ஹவுஸ்! - உள்நுழைவோர் கவனத்துக்கு...

‘`கிளப் ஹவுஸுக்குள்ள நிறைய பிரபலங்கள் வர்றாங்க. பாடுறது, பேசுறது, கதை சொல்றதுன்னு அவங்ககிட்ட உங்க திறமையை வெளிப்படுத்தி அடுத்தகட்டத்துக்குப் போகலாம்’’ என்கிற ஸ்ரீவித்யா, அதன் நெகட்டிவ் பக்கங்களையும் பட்டிய லிடுகிறார். ‘`சில ரூமுக்குள்ள போனா நிறைய கெட்ட வார்த்தை பேசுறாங்க. ‘சிங்கிளா வாங்க, மிங்கிளா போங்க’ன் னு ஒரு தலைப்பு. பதிமூணு, பதினாலு வயசுப்பொண்ணுங்க ஆர்வக் கோளாறுல உள்ள போயிட்டு அலறி யடிச்சு வெளியே வர்றாங்க. பாட்டு கிளாஸ்னு ஓர் அறை. எட்டிப் பார்த்தா டபுள் மீனிங் ஜோக்ஸ். தொகுப்பாளரும் நெறியாளரும் கொஞ்சம் கண்டிப்பா இருந்தா கிளப் ஹவுஸ் எல்லோருக்கும் பயனுள்ளதா இருக்கும்’’ என்கிறார் வருத்தமாக.

எந்த ஒரு புது விஷயமும் பயன் பாட்டுக்கு வரும்போது சிக்கல்கள் நிறைய இருக்கும். போகப்போக பக்குவப்படும். இது புது இடம், புது விதம் என்பதால் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருந்தால் பிரச்னை யின்றி தொழில்நுட்பத்தை அனுபவிக்கலாம்.