சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் காய்ச்சலைப் புறக்கணிக்காதீர்கள்.

அலட்சியத்துக்கும் அக்கறைக்குமான நூலிழை வித்தியாசத்தில்தான் ஒருவரின் நோயும் நலனும் தீர்மானிக்கப்படுகின்றன. அலட்சியம் தவிர்த்து அக்கறையுடன் கொரோனாவை அணுக சில வழிகாட்டுதல்கள்:
கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!

சாதாரணக் காய்ச்சலுக்கும் கொரோனாக் காய்ச்சலுக்கும் என்ன வித்தியாசம்?

கொரோனாப் பெருந்தொற்று காட்டுத்தீப் போல சமூகத்தொற்றுப்பரவல் நிலையை அடைந்துவிட்ட இந்நேரத்தில் ‘காய்ச்சல்’ எனும் அறிகுறியும், ‘அது என்றிலிருந்து ஆரம்பித்தது’ என்பதும் மிக மிக முக்கியமானது.

இந்நேரத்தில் ஒருவருக்குக் காய்ச்சல் அடித்தால் அதை முறையாகப் பரிசோதனை செய்து ‘வந்திருப்பது கொரோனா இல்லை’ என்று நிரூபிக்கும் வரை, காய்ச்சல் அடித்த / அடிக்கும் நபரை கொரோனாத் தொற்று வந்தவராகக் கருதுவது சிறந்தது. எனவே, அறிகுறியை ‘சாதாரணக் காய்ச்சல்’ என்று உதாசீனம் செய்யாமல், உடனே தங்களை வீட்டில் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.வீட்டில் அனைவரும் வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும்.

காய்ச்சல் அடித்த அடுத்த நாளே தொண்டைத்தடவல் நாசித்தடவல் பரிசோதனை (THROAT SWAB NASOPHARYNGEAL SWAB) கொடுத்துவிட வேண்டும்.

‘காய்ச்சல்’ எனும் அறிகுறியை சாதாரணம் என உதாசீனம் செய்யும் பலரும் இரண்டு வாரங்கள் முடியும் நிலையில் மருத்துவமனைகளை மூச்சுத்திணறல் நிலையுடன் (ACUTE RESPIRATORY DISTRESS SYNDROME ) வந்தடைகிறார்கள். எனவே, இந்தப் பெருந்தொற்று அலை உச்சத்தை எட்டி மீண்டும் அச்சுறுத்தல் அற்ற நிலையை அடையும் வரை காய்ச்சல் எனும் அறிகுறியை ‘சாதாரணக் காய்ச்சல்’ என்று உதாசீனப்படுத்தாதீர்கள்.

கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!
கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!

குறிப்பாக 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் காய்ச்சலைப் புறக்கணிக்காதீர்கள். காரணம், இந்த வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த அலையில் தங்களின் அலட்சியம் காரணமாக தாமதமாக மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை பலனின்றி மரணமடைகிறார்கள். இளைஞர்களே, இளைஞிகளே, தயவுசெய்து அலட்சியம் செய்யாதீர்கள்.

இன்னும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், கூடவே இணை நோய்கள் இருப்பவர்களிடையே 80% மரணங்களுக்கு மேல் நடக்கின்றன. எனவே, விரைவில் நோயைக் கண்டறிந்து தனிமைப்படுத்திக்கொண்டு, உடனடியாக சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீளுங்கள்.

கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!
கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!

நோய்த் தன்மையின் படி கொரோனா எப்படி வகைப்படுத்தப்படுகின்றது?

நம் நாட்டில் ஒவ்வொரு 100 கொரோனாத் தொற்று நோயாளிகளையும் கவனித்தால்...

80 நபர்களுக்கு வருவது அறிகுறிகளற்ற / சாதாரண கொரோனா தான் (ASYMPTOMATIC/ MILD COVID19). இவ்வகையினருக்குக் கண்காணிப்பு மட்டுமே போதுமானது. காய்ச்சல், சளி போன்ற நோய் அறிகுறிகளுக்கு மட்டும் தேவையான சிகிச்சை அளித்தால் குணமாகிவிடுவார்கள்.

ஆனால், 100-ல் 20 பேர் கொரோனாவின் அடுத்த கட்டமான மிதமான கொரோனா (Moderate covid19) நிலைக்குச் செல்வார்கள்.

அதிலும் 3% பேர் தீவிர கொரோனா (Severe covid19) நிலைக்குச் செல்வார்கள்.

கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!
கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!

இத்தகையோரை எப்படி அடையாளம் காண்பது?

சாதாரண கொரோனா நோயாளிகளுக்கு (MILD DISEASE) காய்ச்சல், லேசான இருமல், லேசான தொண்டை வலி, முகர்தல் திறன் இழப்பு, சுவைத்தல் திறன் இழப்பு போன்றவை ஏற்படும்.

இவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாது. மூச்சுத்திணறல் ஏற்படாது. மேற்சொன்ன அறிகுறிகள் அனைத்தும் அதிகபட்சம் ஐந்து நாள்களுக்குள் மெல்ல மறைந்துவிடும். முகர்தல்/சுவைத்தல் திறன் இழப்பு மீள சில நாள்கள் முதல் பல நாள்கள் வரை ஆகலாம். இவர்களுக்கு விரல் நுனி உயிர்வளி நாடிமானியில் (finger pulse oximeter) ரத்த ஆக்சிஜன் அளவுகள் 94%க்குக் கீழ் குறையாது. எப்போதும் 94%க்கு மேலே இருக்கும்.

இவர்கள் அறிகுறிகள் தோன்றியதிலிருந்து 10 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இன்னுமொரு விதி யாதெனில், பத்து நாள்கள் கழிந்த நிலையிலும் கடைசி மூன்று நாள்களுக்குக் காய்ச்சல் இல்லாத நிலை இருக்க வேண்டும். இவர்கள் வீட்டுத்தனிமையில் அதிகபட்சம் 14 நாள்கள் இருந்து விட்டுத் தாராளமாக வெளியே வந்துவிடலாம். வெளியே வருவதற்கு முன் மீண்டும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மூலம் நெகட்டிவ் என்று நிரூபிக்கத் தேவையில்லை.

டாக்டர் 
ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

மிதமான கொரோனாவாக (MODERATE COVID19) நோய் முற்றுவதை எப்படி அறிவது?

ஒரு நிமிடத்திற்கு 24 முறைக்கு மேல் மூச்சு விடுவது, அல்லது மூச்சுத்திணறல் / மூச்சு விடுவதில் சிரமம் / நெஞ்சுப்பகுதியில் அழுத்தம், அல்லது விரல் நுனி ரத்த உயிர்வளி நாடிமானி மூலம் 94%க்குக் கீழ் 90%க்கு மேல் ஆக்சிஜன் அளவுகள் இருப்பது... இவர்கள் மிதமான கொரோனா நோயாளிகளாவர். இவர்களுக்குத்தான் ஆக்சிஜன் தேவை ஏற்படும். இவர்களுக்கு 94%க்குக் கீழ் உயிர்வளி அளவுகள்சென்றால், ஆக்சிஜன் வசதி உள்ள மருத்துவமனைகளில் உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்படும்.

ஆயினும் தற்போது இந்த அலையில் முந்தைய அலையைவிட சற்று அதிகமான இளைஞர்கள் இளைஞிகளும் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் மருத்துவமனைகளுக்கு வரும் போக்கு உள்ளது.

இன்னும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர், அறிகுறிகள் தோன்றிய சில நாட்களுக்குள்ளேயே சாதாரண கொரோனா நிலையில் இருந்து, ஆக்சிஜன் தேவைப்படும் மிதமான கொரோனா நிலைக்கு நோய் முற்றுதல் அடைகின்றனர். இதனால் மருத்துவமனைகள் தோறும் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன.

இத்தகைய நோயாளிகளுக்கு மூன்று நாள்கள் முதல் ஒரு வாரம் வரைகூட ஆக்சிஜன் தேவைப்படும் நிலை இருக்கிறது. இதனால் ஒரு படுக்கை, அதற்காகக் காத்திருக்கும் இன்னொருவருக்குக் கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் 90%க்குக் கீழ் எனும் அளவுக்கு உள்ளவர்களையே பெரும்பாலும் உள்நோயாளியாக அனுமதிக்கும் நிலை தற்போது உள்ளது.

ஆக்சிஜன் அளவு 94% முதல் 90% வரை உள்ளவர்கள், தங்களது வீடுகளிலேயே ‘குப்புறப்படுத்தல்’ முறையைச் செய்து வருவதால் நுரையீரலின் ஆக்சிஜன் கொள்முதல் அளவை அதிகரிக்கலாம். இதை ‘ப்ரோனிங்’ என்று கூறுகிறோம் .

கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!
கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!

குப்புறப்படுத்தலின் நன்மைகள் என்னென்ன?

சாதாரணமாக நாம் முதுகு கீழ்ப்புறம், வயிற்றுப்பகுதி மேற்புறமாகவே படுத்துப் பழகியிருப்போம். இதை SUPINE POSITION - மல்லாக்கப் படுத்தல் என்கிறோம். கொரோனா பாதித்து நுரையீரலில் தொற்று பரவிக்கொண்டிருக்கும் சூழலில் மல்லாக்கப் படுப்பதைவிட குப்புறப் படுப்பது நன்றாக உதவும்.

குப்புறப் படுக்கும்போது நமது வயிற்றுப்பகுதி கீழ்ப்புறமாகவும் முதுகுப்பகுதி மேல்புறமாகவும் இருக்கும். இதனால் நுரையீரலின் சுவாசம் உட்கொள்ளும் வெளியிடும் தன்மை மேம்படும். இதன் மூலம் உடலுக்குக் குறைவான சுவாசிக்கும் பளுவில் அதிகமான ஆக்சிஜன் கிடைக்கும். முக்கியமான உறுப்புகளுக்கு ஆக்சிஜன் குறைபாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்யலாம்.

வீட்டுத்தனிமையில் இருக்கும் போது ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டரில் 94%க்கு கீழ் ஆக்சிஜன் அளவுகள் இருக்கும் நபருக்கு, இந்த முறையில் படுப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் குறைந்து ஆக்சிஜன் அளவுகள் கூடுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஆக்சிஜன் அளவுகள் குறைவதை பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி கொண்டு மட்டுமே அறிய முடியும். எனவே வீட்டுத்தனிமையில் இருக்கும் ஒவ்வொரு நபரிடமும் இருக்க வேண்டிய முக்கிய கருவி ‘ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர்.’

கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!
கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!

இந்த ப்ரோனிங்கை எப்படிச் செய்வது?

இதற்கு நான்கு தலையணைகள் வேண்டும். ஒரு தலையணையை குப்புறப் படுத்துத் தலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தலையணையைக் கால்மாட்டுக்கு வைத்து மேடேற்ற வேண்டும். இன்னும் இரண்டு தலையணைகளை ஒன்றன் மீது ஒன்றாக நீளமாக நெஞ்சுப்பகுதி, வயிற்றுப்பகுதி மற்றும் தொடைப்பகுதிக்குக் கீழ் இருக்குமாறு வைத்துப் படுக்க வேண்டும்.

அரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்தப் படுக்கும் முறையை லேசாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். முதல் அரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை வயிற்றுப்பகுதி கீழ் இருக்குமாறு குப்புறப்படுக்க வேண்டும். அடுத்த அரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை வலப்பக்கம் திரும்பி ஒருபக்கமாகப் படுக்க வேண்டும்.

அடுத்த அரை மணிநேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை எழுந்து கால்களை நன்றாக நீட்டி உட்கார்ந்திருக்க வேண்டும். கால்களைத் தொங்கப் போடக்கூடாது. அடுத்த அரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை இடப்பக்கம் திரும்பி ஒருபக்கமாகப் படுக்க வேண்டும். அதற்கடுத்த அரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை மீண்டும் குப்புறப் படுத்திருக்க வேண்டும்.

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இப்படிப் பொசிஷன்களை மாற்றிக் கொண்டே இருப்பது சிறப்பு. முதியோர்களால் அவ்வாறு செய்ய இயலாது என்றால் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது பொசிஷனை மாற்றி அமைப்பது நல்லது. ஒரே பொசிஷனில் பல மணி நேரம் படுத்துக்கிடப்பது அழுத்தப்புண்களை (PRESSURE SORES) உருவாக்கிவிடும். கட்டாயம் உணவு சாப்பிட்டபின் அரை மணி நேரத்திற்கு குப்புறப் படுக்கக் கூடாது.

இப்படி பொசிஷன் மாற்றி பொசிஷன் மாற்றி பகலில் விழித்திருக்கும் 16 மணி நேரமும் செய்யலாம். இரவில் உறங்கும்போது குப்புறப் படுத்து உறங்கலாம்; அல்லது தங்களின் வழக்கம் போல ஒரு பக்கம் படுத்து உறங்கலாம். தலையணைகளைத் தங்களின் வசதிக்கு ஏற்ப சிறிது நகர்த்திக்கொள்ளலாம். பிரச்னை இல்லை.

கொரோனாவை எதிர்கொள்ள குப்புறப்படுங்கள்!

இந்தக் குப்புறப்படுத்தலை முயற்சி செய்யக் கூடாதவர்கள் யார்?

 கர்ப்பிணித் தாய்மார்கள்

ஆழ்சிரை ரத்த நாளக்கட்டிக்காக (DEEP VEIN THROMBOSIS) இரண்டு நாள்களுக்குள் சிகிச்சை எடுத்தவர்கள்

 தீவிர இதய நோய் இருப்பவர்கள்

 தண்டுவட எலும்புகள் / இடுப்பெலும்பு / தொடை எலும்பு முறிவுக்குள்ளானவர்கள்

 ஏனைய கொரோனாத் தொற்று பாசிட்டிவ் என்று வந்து வீடுகளில் தனிமையில் இருக்கும் அனைவரும் மேற்சொன்ன ப்ரோனிங் முறையைக் கடைப்பிடித்து நுரையீரலுக்கு எளிதில் ஆக்சிஜன் கிடைத்திடச் செய்து பலனடையலாம். இதனால் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு மரணமடையும் அபாயமும் குறைகிறது. வெண்டிலேட்டர் வரை செல்லும் நிலையும் குறைகிறது.

அவசியமான எச்சரிக்கை: ப்ரோனிங் செய்தும் ஆக்சிஜன் அளவுகள் கூடாமல் குறைந்துகொண்டே சென்றால் உடனே மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

தீவிர கொரோனா (SEVERE COVID19) நிலையை எப்படி உணர்வது?

தீவிர மூச்சுத்திணறல் அல்லது சுவாசித்தல் ஒரு நிமிடத்திற்கு 30 தடவைக்கு மேல் இருந்தாலோ அல்லது ஆக்சிஜன் அளவு 90%க்குக் கீழ் சென்றாலோ, அது ‘தீவிர கொரோனா’வாகும். இவர்களைக் கட்டாயம் ஐசியூ வசதி உள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும்.

இவர்களுக்குத்தான் மிக அதிகமான அளவு ஆக்சிஜன் மிக நீண்ட நாள்கள் தேவை. இத்தகைய நிலையை எட்டும் 3% சதவிகிதம் மக்களுக்கு நிச்சயம் ஆக்சிஜன் மட்டுமே உயிரைக் காக்கும் அருமருந்தாகும். எனவே இவர்களுக்காக நாம் அனைவரும் ஆக்சிஜனை மிச்சப்படுத்தியாக வேண்டும்.

எப்படி நாம் ஆக்சிஜனை மிச்சப்படுத்துவது?

தேவையின்றி நோய்த் தொற்றை வாங்கி, அதனால் மிதமான மற்றும் தீவிர கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி ஆக்சிஜன் தேவைப்படும் நிலைக்குச் செல்லுதல் கூடாது.

அத்தியாவசியத் தேவையன்றி வீட்டை விட்டு வெளியே வந்தால்தானே தொற்று பெறுவதற்கு வாய்ப்பு. குழந்தைகள் / முதியோர்கள் / இளைஞர்கள் தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அத்தியாவசியத் தேவைக்கும் பொருளீட்டவும் வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள். தனி மனித இடைவெளியைப் பேண வேண்டும்.

தொற்றின் அறிகுறிகள் தோன்றினால் உடனே பரிசோதனைக்குட்படுத்திக்கொண்டு, தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தொற்று பிறருக்குப் பரவும் வாய்ப்பு குறையும்.

மிதமான கொரோனா தோன்றும்போது உடனே சிகிச்சை எடுப்பதன் மூலம் தீவிர கொரோனா நிலைக்குச் செல்லாமல் தடுத்திட முடியும். இதனால் ஆக்சிஜன் தேவையைக் கணிசமான அளவு குறைக்க முடியும்.

தடுப்பூசிகளைப் பெறுவதன் மூலம் மிதமான மற்றும் தீவிரமான கொரோனாத் தொற்றைத் தடுத்திட இயலும். இதன் மூலமும் ஆக்சிஜன் தேவையைக் குறைத்திட முடியும்.

இதுவே இப்போதைக்குச் சிறந்த நோய் தடுக்கும் யுக்தி.