Published:Updated:

கொண்டாட்டக் காலம் கொடூர காலமாகிவிடக் கூடாது!

கூட்டமாவா வர்றீங்க? 
I Am Waiting!
பிரீமியம் ஸ்டோரி
News
கூட்டமாவா வர்றீங்க? I Am Waiting!

தமிழகத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. விரைவில் பண்டிகைகள் வரவிருக்கின்றன.

‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால், கொரோனா வைரஸ் இன்னமும் இருக்கிறது. பல நாடுகளில் இரண்டாம் அலை தொடங்கியிருக்கிறது. பண்டிகைக் காலம் நெருங்குவதால், வைரஸ் பரவலைத் தடுக்கும்விதமாக மக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். சிறு கவனக்குறைவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.’’ - அக்டோபர் 21-ம் தேதி பிரதமர் மோடி மக்களுக்காக ஆற்றிய உரையின் சில வரிகள் இவை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சமீபத்தில்தான் பண்டிகைக்கால அபாயத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறது கேரளா. இந்தியாவில் முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கேரளாவில்தான் என்றாலும் டெல்லி, மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அங்கு தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-க்கும் குறைவாகவே இருந்தது. இதனால், கொரோனாவின் ஆரம்ப மாதங்களில் கேரளாவின் தடுப்பு நடவடிக்கைகள் பெரிதும் பாராட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு சிறிது சிறிதாகத் தளர்வுகள் வழங்கப்பட்டன. ஒருகட்டத்தில், கொரோனாவை முழுவதும் மறந்து இயல்புநிலைக்குத் திரும்பியது கேரளா. கடந்த மாதம் ஓணம் பண்டிகை நெருங்கியதையடுத்து, மொத்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்தார்கள் கேரள மக்கள். மார்க்கெட் தொடங்கி மால்கள்வரை மக்கள் வெள்ளத்தில் நிரம்பிவழிந்தன. பண்டிகை நாளில் ஓணத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடித் தீர்த்தார்கள் மக்கள்.

கொண்டாட்டக் காலம் கொடூர காலமாகிவிடக் கூடாது!

இந்த அலட்சியத்துக்கு அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை கொஞ்சநஞ்சமல்ல. ஆம், கொரோனா பாதிப்புப் பட்டியலில் எங்கோ ஒரு மூலையிலிருந்த கேரளா, இப்போது நாளொன்றுக்கு 10,000-க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகும் மாநிலமாக மாறியிருக்கிறது. இதனால், அங்கு மருத்துவ அவசர நிலையை அறிவித்திருக்கிறது அரசு. மருத்துவமனைகளிலும் இடமில்லை... பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பிவிட்டதால், நோயாளிகளை வீடுகளிலும் முகாம்களில் தனிமைப் படுத்திக்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறது கேரள அரசு. இதைப் பார்த்த பிறகேனும் நாம் சுதாரித்து க்கொள்ள வேண்டும்.

தமிழகத்திலும் தீபாவளி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து பெரிய பண்டிகைகள் வரவிருக்கின்றன. புத்தாடைகள் வாங்கவும், இதர பொருள்களை வாங்கவும் மக்கள் இப்போதே கடைவீதி களில் குவியத் தொடங்கிவிட்டார்கள். தற்போது நமக்கிருக்கும் ஒரே ஆறுதலான விஷயம்... தினசரி 7,000 பேர் வரை சென்ற கொரோனா பாதிப்பு, படிப்படி யாகக் குறைந்து தற்போது 3,000-ஐ ஒட்டிவந்து நிற்கிறது. அலட்சியத்தால் இந்த பாதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்துவிடக் கூடாது. சரி, வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக சுகாதாரத்துறை என்ன நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது? தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் இது குறித்துப் பேசினோம்.

‘‘தமிழகத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. விரைவில் பண்டிகைகள் வரவிருக்கின்றன. இது போன்ற நாள்களில்தான் நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள், ஷாப்பிங் மால்கள், கடைவீதிகளில் தனிக்கவனம் செலுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. கடைகளில் அதிக கூட்டம் சேராமல் இருக்கவும், சரியான சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதிசெய்யவும் குழுக்கள் அமைக்கப்படும்.

விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கவும், கடைகளுக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதிக்கும்போது யாருக்கேனும் மாறுபட்ட வெப்பநிலை கண்டறியப்பட்டால் அவர்களைப் பரிசோதிக்க, ஆங்காங்கே தற்காலிக சுகாதார நிலையங்களை உருவாக்கவும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. கடைகளில் மட்டுமல்ல... பண்டிகைக் காலங்களில் வீட்டுக்கு உறவினர்கள் வரும்போதும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். சிறிய கவனக்குறைவுகூட பெரும் ஆபத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது’’ என்றார் எச்சரிக்கை உணர்வுடன்!

கொண்டாட்டக் காலம் கொடூர காலமாகிவிடக் கூடாது!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு ஆரம்பம் முதலே அதிகமுள்ளது. சென்னையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் கேட்டோம். ‘‘கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 10 மணி வரை உயர்த்தி முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகளை ஒருங்கிணைத்து சிறப்புக் கண்காணிப்புக் குழுக்களை உருவாக்கியிருக்கிறோம். அனைத்து வணிக அமைப்புகளையும் அழைத்து, பாதுகாப்பு விதிமுறைகளைக் கூறியிருக்கிறோம். அவற்றைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், சீல் வைத்தும் வருகிறோம்.

மக்களும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முக்கவசம் இல்லாமல் வெளியே வரக்கூடாது. முடிந்தவரை கூட்டம் இல்லாத நாள்களில் முன்கூட்டியே ஷாப்பிங்கை முடித்துக்கொள்ள வேண்டும். கடைசிநாள்களில் கடைகளில் குவியக் கூடாது. மேலும், பண்டிகை நெருங்கும் நாள்களில் கடைத் தெருக்களில் மக்கள் குவியாதபடி விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை களில் மாநகராட்சி ஊழியர்கள் 16 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். காவலர்கள், மருத்துவ ஊழியர்கள் பலரும் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோரின் கடுமையான உழைப்பால் தொற்று, கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்களின் உயிர்த் தியாகத்தையும் உழைப்பையும் யார் அலட்சியப்படுத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார் கறாராக.

வருமுன் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமல்ல... நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.