Published:Updated:

சட்ட விரோத கருக்கலைப்பு, உதிரும் உயிர்கள்... உடனடி தேவை விழிப்புணர்வும் நடவடிக்கையும்!

கருக்கலைப்பு
பிரீமியம் ஸ்டோரி
கருக்கலைப்பு

ஏழு வாரங்கள் வரையிலான கர்ப்பங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகள் மூலமே கலைக்கலாம்

சட்ட விரோத கருக்கலைப்பு, உதிரும் உயிர்கள்... உடனடி தேவை விழிப்புணர்வும் நடவடிக்கையும்!

ஏழு வாரங்கள் வரையிலான கர்ப்பங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகள் மூலமே கலைக்கலாம்

Published:Updated:
கருக்கலைப்பு
பிரீமியம் ஸ்டோரி
கருக்கலைப்பு

சட்ட விரோத கருக்கலைப்பால் இளம்பெண்கள் உயிரிழக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் 1

பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேல் முருகன் - அனிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அனிதா மூன்றாவதாகக் கருவுற்றபோது, அதுவும் பெண்ணாக இருக்குமோ என்ற அச்சத்தில்(!) அதன் பாலினத்தைத் தெரிந்துகொள்ள, `ஓம்சக்தி’ என்ற மருந்தகத்தை நாடினர். 20,000 ரூபாய் வாங்கிக்கொண்டு, அங்கே உள்ள ரூமில் வைத்து அனிதாவுக்கு ஸ்கேன் எடுத்து, ‘கருவில் இருப்பது பெண் குழந்தை’ எனக் கூறப்பட, கருவைக் கலைக்க முடிவெடுத்தனர் தம்பதி. மேலும் 30,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதே மருந் தகத்தில் அனிதாவுக்குக் கருக்கலைப்புக்கான மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட, காலை முதல் இரவு வரையிலும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்து, அரசு மருத்துவ மனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் அனிதா.

சட்ட விரோத கருக்கலைப்பு, 
உதிரும் உயிர்கள்... உடனடி தேவை விழிப்புணர்வும்  நடவடிக்கையும்!

சம்பவம் 2

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வுக்கு உட்பட்ட லெப்பைகுடிக்காடு அருகே யுள்ள சன்னாசியப்பா கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் வெற்றிவேல் - வேளாங்கண்ணி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந் தைகள். இந்த நிலையில், கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மருந்துக்கடையில் மயங்கிக்கிடந்த வேளாங்கண்ணியை அவரின் தாய், சிகிச்சைக் காக ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினார்கள் மருத்துவர்கள். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வேளாங்கண்ணியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில், முறையற்ற கருக்கலைப்பு காரணமாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்றது முதல்கட்ட அறிக்கை.

சம்பவம் 3

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள மங்களூர் கிராமத்தில் ஒரு வீட்டில் பெண்ணுக் குக் கருக்கலைப்பு நடப்பதாக மருத்துவக் குழுவினருக்கு சமீபத்தில் ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ரமேஷ்பாபு தலைமையிலான மருத்துவக் குழுவினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து ராம நத்தம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மருந்தகங்களில் ஆய்வு செய்தனர். அப்போது, மங்களூர் கிராமம் சிவன் கோயில் தெருவிலுள்ள குமார் என்பவரின் வீட்டு மாடியிலுள்ள ஒரு ரூமில், ஒரு பெண்ணுக்குக் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து அமர வைத்திருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து, அந்தப் பெண்ணை அவசர ஊர்தி மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் அதிகாரிகள். தப்பியோடிய மருந்தக ஊழியரைத் தேடி வருகிறார்கள்.

இந்த மூன்றாவது சம்பவத்தில் அதிகாரி களின் துரித நடவடிக்கையால் ஓர் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டாலும், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் இவற்றின் எல்லை கிராமப் பகுதிகளில் சட்டவிரோத கருக்கலைப்பு என்பது குடிசைத் தொழிலைப்போல சர்வ சாதாரணமாக நடக்கிறது என்கிறார்கள் அப்பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவர் கலையரசியிடம் பேசினோம்...

“பி. ஃபார்ம் மற்றும் மருந்தகப் பட்டதாரிகள் மட்டுமே மெடிக்கல் ஷாப் நடத்த முடியும் என விதிமுறைகள் இருக்கும்போது, எங்கோ இருக்கும் அத்தகைய பட்டதாரிகளின் சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, 8-ம் வகுப்புகூட படிக்காத பலரும் இந்த மாவட்டங் களில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகின்றனர். கிராமப்புறப் பகுதிகளில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை மருந்துக்கடை நடத்தும் அவர்கள்தான், இந்த சட்ட விரோத கருக்கலைப்பு கும்பல்களுக்கு புரோக்கர் களாகவே செயல்படுகின்றனர்.

அதேபோல, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைக் கூறுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள பெரும்பாலான ஸ்கேன் சென்டர்கள் அதைக் கடைப்பிடிப்பதில்லை. ஸ்கேன் எடுத்து என்ன குழந்தை என்று சொல்வதற்கு 10,000, 20,000 எனப் பணம் வாங்கிக்கொள்ளும் அவர்களும் இந்த சட்டவிரோத கருக்கலைப்பு மாஃபியாக்களுக்கு புரோக்கர்கள்தான்.

பெரும்பாலும், வீடுகளை யொட்டியுள்ள மருந்தகங்கள் மற்றும் மருந்தகங்களின் பின்புறமுள்ள அவசர அறைகளையே கருக்கலைப்பு மையங் களாக மாற்றி, உடனடியாகக் கரு கலைய வேண்டும் என்பதற்காக ஓவர் டோஸ் மாத்திரைகளைக் கொடுக் கிறார்கள். குளுக்கோஸ் போடுவதற்குக் கூட சுவரில் ஆணியடித்து அதில் குளுக்கோஸ் பாட்டிலைத் தொங்கவிட்டு அவர்கள் சிகிச்சை அளிக்கும் விதம் இங்குள்ள மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பலருக்கும் தெரியும். ஆனால், 99 சதவிகித அதிகாரிகள், அத்தகைய சட்டவிரோத கருக்கலைப்பு மையங்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்தியாவில் நடைபெறும் கருக்கலைப்பு களில் 67% பாதுகாப்பற்ற சூழலில் நடை பெறுவதாக `ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம்’ அறிக்கை வெளியிட்டுள்ளது. பதின்ம வயது கருக்கலைப்பு மற்றும் முறையற்ற உருவால் உண்டான கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலைக்கான கருக்கலைப்பு மட்டுமல்ல, எதிர்பாராமல் உண்டான கருவை கலைக்க நினைக்கும் தம்பதிக்குக்கூட, அரசாங்க மருத்துவமனைக்குச் சென்று கருக்கலைப்பு செய்யலாம் என்ற விழிப்புணர்வு இந்தப் பகுதி மக்களுக்கு இல்லை” என்றார்.

கலையரசி
கலையரசி

சமீப காலமாக அதிகரித்து வரும் சட்ட விரோத கருக்கலைப்பு மரணங்கள் மற்றும் அதைத் தடுக்க எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்...

“ஏழு வாரங்கள் வரையிலான கர்ப்பங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகள் மூலமே கலைக்கலாம். 10 வாரங் களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை அனைத்து அரசு மருத்துவமனை களிலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம்.

எனவே, இதுபோன்ற சுயமாக மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து, தங்கள் பகுதி கிராம சுகாதார செவிலியர்களைத் தொடர்புகொண்டு பொது மக்கள் தேவையான ஆலோசனைகளைப் பெறலாம். இது தொடர் பாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி சுகாதார செவிலியர்கள் மூலமாகக் கிராம வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

இதுகுறித்து சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் பேசினோம்... ‘‘அது கருக் கலைப்பு அல்ல. தாய், சேய் உயிரைக் கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாவட்ட நிர்வாகம், சமூகநலத்துறை மற்றும் சுகாதாரத் துறையோடு இணைந்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு, மருத்துவர்கள் முதல் மெடிக்கல் ஷாப் வரை யிலும் ஆய்வுகளும் மேற்கொள்கிறோம். இனியும் இதுபோல் நடக்காமல் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை துரிதப்படுத்தப் படும்” என்றார்.

செயல்படுங்கள் அதிகாரிகளே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism