Published:Updated:

கோவை யு.டி.எஸ், திருச்சி எல்ஃபின்... மக்களே உஷார்..! - போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா?

மோசடி நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மோசடி நிறுவனம்

நிதி நிறுவனங்களை நடத்தியவர்கள் காவல்துறையில் சிக்கிக் கிடக்க, முதலீட்டாளர்கள் நிலைமைதான் பரிதாபமாக இருக்கிறது!

“ஒருத்தனை ஏமாத்தணும்னா, மொதல்ல அவங்கிட்ட ஆசையைத் தூண்டணும்...” சதுரங்க வேட்டை படத்தில் வரும் இந்த வசனம் எவ்வளவு உண்மை என்பதை சமீபத்திய சம்பவங்கள் உணர்த்துகின்றன. எதிர்முனையில் இருப்பவர் பேராசையுடன் இருந்தால், ஏமாற்றுபவர்களின் பணி இன்னும் எளிதாகிவிடும். அதுதான் தற்போது தமிழகத்தில் பல நகரங்களில் நடக்கின்றன.

‘கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... முதலீட்டாளர்களே உஷார்’ என்று கடந்த ஆண்டு நாணயம் விகடனில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரை வந்த சில மாதங்களிலேயே கோவை யு.டி.எஸ் நிறுவனத்தின் செயல்பாடு முடிவுக்கு வந்தது. ஆனால், மோசடிப் பேர்வழிகளின் திருவிளையாடல் ஒரு மோசடியோடு நின்றுவிடுவதில்லை. புதுப்புது நகரங்கள் புதுப்புது மோசடிகள் என்று அவர்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

கோவை யு.டி.எஸ், திருச்சி எல்ஃபின்... மக்களே உஷார்..! - போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோவையைச் சேர்ந்த கௌதம் ரமேஷ், யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் (Universal trading Services) என்ற நிறுவனம் நடத்தி, பல நூறு கோடி ரூபாய் பணத்தை அப்பாவி மக்களிடமிருந்து பெற்றார். இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.10,000 வீதம் ஓராண்டு கொடுப்பதுடன் ஓராண்டுக்குப் பிறகு முதலில் தந்த ரூ.1 லட்சத்தைத் திரும்பத் தந்துவிடுவோம் என யு.டி.எஸ் அறிவித்ததை நம்பி, ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பலரும் பணத்தைக் கொண்டுவந்து கொட்டினார்கள்.

சிலபல மாதங்களுக்குப் பணத்தை அளித்த யு.டி.எஸ் நிறுவனம், பெரிய அளவில் பணம் சேர்ந்த பிறகு கம்பியை நீட்டியது. இதையடுத்து, கௌதம் ரமேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இதனால் இரவோடு இரவாக யு.டி.எஸ் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவ்வளவுதான், இனி அவர்களின் ஆட்டம் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, ஒரே வருஷத்தில் மீண்டுமொரு மோசடி விவகாரத்தில் சிக்கியது ரமேஷ் அண்ட் கோ நெட்வொர்க். யு.டி.எஸ் சர்ச்சைக்குப் பிறகு, யு.டி.இ (Universal trading Enterprises) என்ற நிறுவனத்தை சேலத்தில் தொடங்கினார் ரமேஷ். மீண்டும் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த முறை ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்தால் நான்கு மடங்கு லாபம் தருவதாகக் கூறி வலைவிரிக்க, சேலம், கரூர் எனத் தமிழகம் தாண்டி, கேரளாவில் இருந்தும் அந்த வலையில் ஆயிரக்கணக்கானோர் விட்டில்பூச்சிகளாக வந்து விழுந்தனர்.

கோவை யு.டி.எஸ், திருச்சி எல்ஃபின்... மக்களே உஷார்..! - போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா?

நிறுவனத்தின் பெயரை மாற்றினால், அவர்களின் பிசினஸ் ஸ்டைல் மாறிவிடுமா என்ன..? இந்த முறையும் சொன்னதைப்போல பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் எஸ்கேப் ஆக முயற்சி செய்திருக்கிறார் ரமேஷ். சேலத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இது குறித்து, சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதேபோல, கேரளாவிலும் பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேலத்தில் வைத்து கௌதம் ரமேஷ், அவரின் கூட்டாளி பிரவீன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்து கேரள போலீஸார், தமிழகம் வந்தனர். மலப்புரம் போலீஸார் கௌதம் ரமேஷை காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.

“கௌதம் ரமேஷ் தனது ஏஜென்டுகள் மூலம் அவர் கேரளாவுக்குள் நுழைந்துள்ளார். நாங்கள் விசாரித்த வரையில், தமிழகம் மற்றும் கேரளாவில் சுமார் 75,000 பேர் அவரிடம் பணத்தைத் தந்துள்ளனர். மலப்புரம், பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் மீது கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்கிறார்கள் கேரள போலீஸார். கேரள போலீஸ் விசாரணை முடிந்து, கௌதம் ரமேஷை சேலம் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். எல்லாம் சரி, யு.டி.எஸ் நிறுவனத்தில் மக்கள் போட்ட பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்று கேட்டோம். “அவர்கள் (யு.டி.எஸ்) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சொத்துகளைப் பறிமுதல் செய்வதில் தொடங்கி பணத்தைப் பெற்றுத் தருவது வரை நீதிமன்றம் சொல்கிறபடிதான் நாங்கள் நடக்க முடியும்’’ என்றனர்.

திருவேங்கடம் யாதவ், ராஜ்குமார்
திருவேங்கடம் யாதவ், ராஜ்குமார்

கோவை யு.டி.எஸ் மோசடி சர்ச்சை இப்படி எனில், திருச்சி எல்ஃபின் நிறுவனத்தின் சர்ச்சை வேறு மாதிரி இருக்கிறது. எல்ஃபின் என்ற நிதி நிறுவனம் திருச்சியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தை நடத்திவருபவர் ராஜா, அவரின் தம்பி ரமேஷ். ‘‘ரூ.5,000 கொடுத்தால், 4,000 ரூபாய்க்கு மளிகைப் பொருள்கள் தருவோம். மீதமுள்ள 1,000 ரூபாயை ரூ.40 வீதம் 100 நாள்களுக்குத் திரும்பத் தருவோம்’’ என்று விளம்பரம் செய்ய, பணம் வந்து கொட்டத் தொடங்கியது. மளிகையில் சம்பாதித்த நல்ல பெயரை வைத்து, ரியல் எஸ்டேட்டிலும் இறங்கினார்கள். அதன் பிறகுதான் பிரச்னை வரத் தொடங்கியது.

இந்த நிறுவனத்தில் பணத்தைப் பறிகொடுத்த திருவேங்கடம் யாதவிடம் பேசினோம். “2018-ம் ஆண்டு என் நண்பர் மூலமாக எல்ஃபின் நிறுவனம் நடத்தும் மளிகைப் பொருள்கள் திட்டத்தில் சேர்ந்தேன். சொன்னபடி பொருள்களையும் பணத்தையும் தந்ததால், அடுத்து அவர்கள் நடத்திய ரியல் எஸ்டேட் பிசினஸில் பணம் போட முடிவு செய்தேன். திருச்சியில் உள்ள ஹோட்டலில் வைத்து

ரூ.4.5 லட்சம் பணம் தந்தேன். நான் தந்த பணத்தை நோட்டில் எழுதிக் கொண்டார்கள். வேறு எந்த ரசீதும் தரவில்லை. அவர்களை நம்பியதால், நானும் அதைப் பெரிதுபடுத்த வில்லை. இப்போது பணத்தைத் திருப்பிக் கேட்டால், ‘நீ எங்கே பணம் கொடுத்தாய், எப்போது கொடுத்தாய்?’ என்று கேட்கின்றனர். இதுபற்றி மாநகரக் காவல் ஆணையர், பொருளாதாரக் குற்றப்பிரிவு, கலெக்டர் எனப் பலரிடமும் புகார் தந்தும் என் பணம் எனக்குக் கிடைக்கவில்லை’’ என்றார் கவலையுடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிறுவனத்தின் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த ராஜ்குமார், “நான் சிங்கப்பூர்ல வேலை செஞ்சுகிட்டு இருந்தப்ப என்னோட ரெண்டு கால்களிலும் அடிபட்டுருச்சு. இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்ல ரூ.48 லட்சம் கிடைச்சுது. ஊருக்குத் திரும்பிய பின், ரூ.45 லட்சம் பணத்தை எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். 10 மாதங்களில் அதை இரட்டிப்பாக்கி ரூ.90 லட்சம் தருவதா சொன்னாங்க. அதற்கான காசோலையும் கொடுத்தார்கள். அந்தக் காசோலையை நாங்கள் சொல்லும் நேரத்தில்தான் வங்கியில் போடணும்னு சொன்னாங்க. ஆனா, அதுக்குப் பின்னாடி முன்னுக்குப் பின் முரணா பேச ஆரம்பிச்சாங்க. வற்புறுத்திக் கேட்டப்ப மிரட்ட ஆரம்பிச்சாங்க. இனி இவங்களை நம்பி பிரயோஜனம் இல்லைன்னு கடந்த ஜூன் 15-ம் தேதி புதுக்கோட்டை காவல் நிலையத்துல புகார் செஞ்சேன். இது தொடர்பா பேச என்னைக் கூப்பிட்டாங்க. அதை நம்பி கடந்த மாசம் 20-ம் தேதி எல்ஃபின் நிறுவனத்துக்குப் போனேன். அந்த நிறுவனத்து ஆளுங்க என்னை வழிமறிச்சு, அடிக்க ஆரம்பிச்சாங்க. நான் உயிர் பிழைச்சதே பெரிய விஷயம். இதுக்காக நான் தந்த புகார் பேர்ல, ஒன்பது பேர் மீது வழக்குப் போட்டாங்க. இவங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறதால, எந்தக் கவலையும் இல்லாம இருக்காங்க’’ என்றார்.

கோவை யு.டி.எஸ், திருச்சி எல்ஃபின்... மக்களே உஷார்..! - போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா?

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த காக்கிவாடன்பட்டி, மம்சாபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், `இந்த நிறுவனத்தை நடத்திவந்தவர்களிடம் ரூ.4.63 கோடியைக் கொடுத்ததாக மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க, ரூ.1 கோடியை தந்துவிட்டு, மீதப் பணத்தைப் பிறகு, தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சொன்னபடி பணம் தரவில்லை என்பதால் கோவிந்தராஜ் மீண்டும் புகார் செய்ய, எல்ஃபின் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா இப்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

நிதி நிறுவனங்களை நடத்தி வந்தவர்கள் காவல்துறையில் சிக்கிக் கிடக்க, பணம் போட்ட மக்கள் நிலைமைதான் பரிதாபமாக இருக்கிறது. இவர்கள் போட்ட பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்ற கேள்விக்கு யாரிடமிருந்தும் தெளிவான பதில் இல்லை. இனியாவது பேராசைப்பட்டு மோசடி நிறுவனங்களில் பணத்தைப் போட்டு இழக்காமல் உஷாராக இருப்பது மக்களின் பொறுப்பு!

அப்பா-மகன் கூட்டணியில் ரூ.60 கோடி மோசடி!

கோவை ராமநாதபுரம் பகுதியில் கிரீன் க்ரிஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் என்ற எம்.எல்.எம் நிதி நிறுவனம், ‘ரூ.56,250 முதலீடு செய்தால் தொடர்ந்து 10 மாதங்களுக்கு 10% வட்டி கொடுப்போம்’ என்று விளம்பரம் செய்ய, ‘அட, இவ்வளவு வட்டி வேறெங்கும் கிடைக்காதே’ என்று நினைத்து, பலரும் போய் வரிசையில் நின்று பணம் கட்டினார்கள். ஒரு சில மாதம் மட்டும் வட்டித் தொகையைக் கொடுத்துவிட்டு, பிறகு மணிகண்டன் காணாமல் போய்விட, முதலீட்டாளர்கள் வெகுண்டெழுந்து மணிகண்டனின் வீட்டை முற்றைகையிட, மணிகண்டன், அவரின் மகன் சஞ்சய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஏறக்குறைய ரூ.60 கோடியை இவர்கள் மோசடி செய்திருக் கிறார்களாம்!

பணத்தைத் திரும்பத் தராத செந்தூர் ஃபின்கார்ப்..!

திருச்சி தில்லை நகரில் செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனத்தில் பணம் போட்டு பாதிக்கப்பட்ட திருச்சி, கரூர், திருவாரூர், சென்னை, திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 220-க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் சமயபுரம் அருகே டோல்கேட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த நிறுவனத்தில் போட்ட பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது, அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்கள்.

கோவை யு.டி.எஸ், திருச்சி எல்ஃபின்... மக்களே உஷார்..! - போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா?

பாதிக்கப்பட்ட ராமமூர்த்தியிடம் பேசினோம். ‘ரூ.35,000 கொடுத்தால், ஒரே ஆண்டில் ரூ.1,21,000 கிடைக்கும்’ என்ற ஆசை வார்த்தைகளைச் சொன்னது செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம். ஆனால், எந்தப் பணத்தையும் தராமல் ஏமாற்றி நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டார்கள். நாங்கள் ஆட்சியர் முதல் போலீஸார் வரை புகார் அளித்துவிட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை. நாங்கள் போட்ட பணத்தைத் திருப்பித் தர வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.