#Ayodhya : ‘சரயு நதிக்கரையில் ஒரு வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது’ - பிரதமர் மோடி #LiveUpdates

அயோத்தியில் இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்வின் தொகுப்பு..!
இன்று முழு நாட்டுக்கு உணர்ச்சிகரமான தருணம்!
‘ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு என்னை அழைத்ததில் மிகவும் பெருமைகொள்கிறேன். ‘ஜெய் ஸ்ரீராம்’ இந்த வார்த்தை இன்று அயோத்தியில் மட்டுமல்ல உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் தேசத்தின் அனைத்து மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கும், ராமர் பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டு மக்களின் பல வருடக் காத்திருப்பு இன்று முடிந்துவிட்டது.

சரயு நதிக்கரையில் ஒரு புதிய வரலாறு உருவாக்கப்படுவதை முழு உலகமும் கண்காணித்துக்கொண்டிருக்கிறது. இன்று முழு நாட்டுக்கு உணர்ச்சிகரமான தருணம். ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த ராமருக்கு தற்போது பெரிய கோயில் கட்டப்படவுள்ளது. ராமர் கோயிலுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றிகள். இந்த வரலாற்றுத் தருணத்தைக் காண எனக்கு வாய்ப்பு அளித்த ராமர் அறக்கட்டளைக்கு நன்றிகள். இந்த ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாக மாறும். இந்த கோயில் கோடிக்கணக்கான மக்களின் கூட்டுத் தீர்மானத்தின் சக்தியைக் குறிக்கும். இது எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்.’ என விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அடிக்கல் நாட்டினார் மோடி!
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா மேடையில் பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர் நிருத்யா கோபால் தாஸ் ஆகிய அனைவரும் முறையான சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டுள்ளனர். அங்கு பூசாரிகள் மந்திரங்கள் முழங்க அவர்கள் கூறிய அனைத்து சடங்குகளையும் பிரதமர் மோடி செய்தார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற பூமி பூஜைக்குப் பிறகு 40 கிலோ வெள்ளி செங்கற்கள் கொண்டு அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ராமர் கோயிலில் பிரதமர்!
அயோத்தி வந்தடைந்த பிரதமர் அங்கிருந்து முதலாவதாக அனுமன் கோயிலுக்குச் சென்றார். அவருடன் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டுமே இருந்தார். பிரதமர் கலந்துகொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் அவருடன் இருக்கும் அனைவரும் முகக் கவசம் அணிந்துகொண்டு முறையான சமூக இடைவெளியைப் பின்பற்றி வருகின்றனர். கோயிலுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாகத் தன் கைகளைத் கழுவிய பிரதமர், பிறகே சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து அனுமன் கோயில் நிர்வாகிகள் ராமர் பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளியால் ஆன கிரீடத்தை பிரதமருக்கு பரிசாக வழங்கினர். பின்னர் 5 நிமிட பயணத்துக்குப் பிறகு ராமர் கோயிலுக்கு சென்ற பிரதமர், அங்கும் முதலாவதாகத் தன் கைகளைக் கழுவிய பின்னரே கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்கிருந்து நேரடியாக அடிக்கல் நாட்டு விழா நடக்கும் மேடைக்குச் சென்றார். அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டுள்ள பிரதமர், கொரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வருகிறார்.
அயோத்தி வந்தடைந்தார் பிரதமர்!
பிரதமர் மோடி, ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள அயோத்தி நகருக்கு வந்தடைந்தார். முதலாவதாக அவர் அனுமன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். 29 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் முதன்முறையாக பிரதமர் மோடி, அயோத்திக்கு வருகை தருவதாகவும் ராம ஜென்ம பூமியைப் பார்வையிடும் முதல் பிரதமர் மோடிதான் என்றும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
அயோத்தி புறப்பட்டார் பிரதமர் மோடி!
அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனி விமானத்தில் அயோத்தி புறப்பட்டார். 10.30 மணிக்கு லக்னோ வந்து அங்கிருந்து அயோத்தி வரவுள்ளார்.
உச்சக்கட்ட பாதுகாப்பு!
அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி வரவுள்ள நிலையில் அந்த நகரம் முழுவதும் இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனுமன் கோயில், ராமர் கோயில், விழா நடக்கும் இடம் என அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் நிகழ்ச்சி முடியும் வரை பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் பகுதிகள் முழுவதுமாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கோயிலுக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் காலை 9.30 மணிக்கு அயோத்தியை அடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழா மேடையில் பிரதமருடன் உத்தப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர் நிருத்யா கோபால் தாஸ் உள்ளிட்ட 4 பேர் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர்.
அயோத்தி நகரம் - விழாக்கோலம்

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி மொத்த அயோத்தி நகரமும் விழாக்கோலம் கொண்டுள்ளது. நகரின் பெரும்பாலான இடங்களில் வண்ண விளக்குகள், தோரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாதுகாப்பு குறியீடு அழைப்பிதழ் வழங்கப்பட்ட 175 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 135 பேர் ஆன்மிகத் தலைவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி:
பிரதமர் மோடி இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். அவர் அயோத்தியில் சுமார் 3 மணி நேரம் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.35 மணிக்கு டெல்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் புறப்படும் பிரதமர் 10.35 மணிக்கு லக்னோ வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வரவுள்ளார்.

முதலில் அனுமன்கரி கோயிலுக்குச் செல்லும் மோடி அங்கு 10 நிமிடங்கள் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு பிறகு, ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 12.30 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சியில் பிரதமருடன் மேடையில் இருக்க 4 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிற்பகல் 1 மணிக்கு மேல், ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இதையடுத்து 2 மணிக்கு லக்னோ செல்லும் அவர், 2.20-க்கு லக்னோவிலிருந்து டெல்லி புறப்படுகிறார்.
அடிக்கல் நாட்டு விழா:

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனக் கடந்த வருடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து அங்கு கோயில் கட்டுவதற்காகப் புதிய அறக்கட்டளை அமைத்து பணிகள் தொடங்கப்பட்டன. ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.