Published:Updated:

`அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை!’ -இப்போது எப்படி இருக்கிறது அயோத்தி? #VikatanInAyodhya

சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பின், இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது அயோத்தி.

அயோத்தி
அயோத்தி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்புக்குப் பிறகு, அயோத்தியில் துணை ராணுவப்படை மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. குறிப்பிட்ட நிலம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சில கிலோமீட்டர்களுக்கு முன்பே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. தற்போது, அங்கு ஓரளவு கெடுபிடிகள் குறைக்கப்பட்டுள்ளன.

அயோத்தி
அயோத்தி

உத்தரப்பிரதேசத்தில், சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் இல்லை. உத்தரப்பிரதேச காவல்துறையினர் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீர்ப்புக்குப் பின்னர், வாகன ஓட்டுநர்கள் ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். ஜல்பா காலனி என்னும் பகுதியிலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பின்னர், அங்கிருந்து நடந்துசெல்லவேண்டிய நிலைதான் இருந்தது. பத்திரிகையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. சாலைகள் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இப்போது அப்படி இல்லை. பத்திரிகையாளர் என்று கூறினாலே உள்ளே அனுமதிக்கின்றனர்.

இப்போது அயோத்தி... அடுத்து காசி, பின்னே மதுரா! - ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா ரெடி

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. உள்ளூர் ரிக்‌ஷாக்கள் மற்றும் ஆட்டோக்கள் இப்போது அனுமதிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நிலம் அமைந்துள்ள பகுதியில் மட்டும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. அந்தப் பகுதிகளுக்குள் நேரடியாக யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மாற்றுப் பாதைகளில் செல்வதற்கு அனுமதிக்கின்றனர். `பாதுகாப்புப் பணிகள் தொடர்பாக மறு உத்தரவு இன்னமும் வரவில்லை' என்கின்றனர் அங்கிருந்தவர்கள். தற்போது, பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கோயில் பகுதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அப்படியே இருக்கிறது.

அயோத்தி
அயோத்தி

அயோத்தி, ராம் ஜென்ம நிவாஸ் அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. வாகனங்கள், பொருள்களைச் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். புறநகர் பகுதியில் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அயோத்தி, படிப்படியாகத் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.