Published:Updated:

ஆழியாறு குடிநீர்த் திட்டம்... குழப்ப அரசியல் செய்கிறதா தி.மு.க?

ஆழியாறு குடிநீர்த் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ஆழியாறு குடிநீர்த் திட்டம்

இது மிகவும் நெருக்கடியான பிரச்னை. தண்ணீரை எடுக்கவில்லையென்றால் ஒட்டன் சத்திரக்காரர்கள் தகராறு செய்வார்கள்.

ஆழியாறு குடிநீர்த் திட்டம்... குழப்ப அரசியல் செய்கிறதா தி.மு.க?

இது மிகவும் நெருக்கடியான பிரச்னை. தண்ணீரை எடுக்கவில்லையென்றால் ஒட்டன் சத்திரக்காரர்கள் தகராறு செய்வார்கள்.

Published:Updated:
ஆழியாறு குடிநீர்த் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ஆழியாறு குடிநீர்த் திட்டம்

‘ஆழியாறு-ஒட்டன்சத்திரம் கூட்டுக் குடிநீர்த் திட்ட செயலாக்கம் குறித்து உறுதியான முடிவைச் சொல்லாமல் குழப்பியடித்து வருகிறது தி.மு.க அரசு’ என்கிறார்கள் கொங்கு விவசாயிகள்!

தேனிக்குப் பக்கத்தில் இருந்தாலும், திண்டுக்கல் மாவட் டத்துக்கு வைகை குடிநீர் முழுமையாகக் கிடைக்கவில்லை. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டமும், ஒரு பகுதியின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது. எனவே, கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் பகுதிக்குக் குடிநீர் எடுத்துச் செல்ல 930 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது தமிழக அரசு. இது, ‘பரம்பிக் குளம் – ஆழியாறு பாசனத் திட்ட’த்தின்கீழ் பாசன வசதி பெற்றுவரும் கொங்குமண்டல விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்கவே, ‘‘மக்கள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் தி.மு.க அரசாங்கம் செயல்படுத்தாது’’ என்று சமாதானப் படுத்தினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஆழியாறு குடிநீர்த் திட்டம்... குழப்ப அரசியல் செய்கிறதா தி.மு.க?

ஆனால், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ‘‘ஆழியாறு - ஒட்டன்சத்திரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கைவிடப்படவில்லை. நீர்வளத்துறை அமைச்சர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அவர்களைச் சமாதானப்படுத்தி, தண்ணீர் எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார். இது கொங்கு மண்டல விவசாயிகளை மேலும் கொதிப்படையச் செய்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய ‘பரம்பிக்குளம் – ஆழியாறு பாதுகாப்பு இயக்கம்’ ஒருங்கிணைப்பாளர் ஈசன், ‘‘ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள சிப்காட் மற்றும் மினரல் வாட்டர் கம்பெனிகளுக்காகத்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். எனவே, இங்கிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட ஒட்டன்சத்திரத் துக்கு விடமாட்டோம். ஒரு மாதத்துக்குள் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.

‘பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டம் மற்றும் திருமூர்த்தி நீர் தேக்கம் திட்ட’க்குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம், ‘‘ ‘பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் பகுதிகளுக்கே தண்ணீர் கொடுக்க முடியாமல் சிக்கல் இருக்கிறது’ என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் கூறியிருக்கிறார். மேலும், இப்போதுவரை தண்ணீர் எடுப்பதற்கு பொதுப்பணித்துறை தடையில்லாச் சான்றிதழும் வழங்கவில்லை. எனவே அரசாங்கத்தை நம்புகிறோம். திட்டத்தைக் கைவிடவில்லையென்றால், உயிரைக் கொடுத்தாவது அதைத் தடுத்து நிறுத்துவோம்” என்றார்.

கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, ஈசன், பரமசிவம்
கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, ஈசன், பரமசிவம்

இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு-விடம் விளக்கம் கேட்டுப் பேசினோம். “இது மிகவும் நெருக்கடியான பிரச்னை. தண்ணீரை எடுக்கவில்லையென்றால் ஒட்டன் சத்திரக்காரர்கள் தகராறு செய்வார்கள். தண்ணீர் எடுத்தால் விவசாயிகள் தகராறு செய்வார்கள். எனவே முதல்வர்தான் இந்த விஷயத்தில் முடிவெடுப்பார்” என்றார் நழுவலாக.

குழப்ப அரசியல் செய்யாமல், உறுதியான முடிவெடுக்குமா அரசு?