தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

2K kids: கெட்ட வார்த்தையில் பேசுவது ஃபேஷனாக மாறுகிறதா?!

2K kids
பிரீமியம் ஸ்டோரி
News
2K kids

கு.ஷன்மதி

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட `பப்ஜி’ என்ற ஆன்லைன் விளையாட்டின்போது, ஆபாசமாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டதாக `கேமர்' (Gamer) மதன், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் பேசிய கெட்ட வார்த்தைகள் ஒருபக்கம் அதிர்ச்சி என்றால், ‘மதன் மீது என்ன தவறு?’ என்று ஆங்காங்கே வீடியோ வெளியிட்ட பதின் வயதினர், இளைய தலைமுறையினர் அதைவிட அதிர்ச்சி.

முன்னர் எல்லாம் வகுப்பில் கெட்ட வார்த்தை பேசும் ஒரு மாணவன் இருந்தால், ‘அய்யோ அவன் கெட்ட பையன்’ என்று எண்ணி மற்ற மாணவர்கள் அவனிடமிருந்து ஒதுங்குவார்கள். இன்றோ, வகுப்பறைகள், சமூக வலைதளங்கள், அலுவலகம் என எங்கெங்கும், கெட்ட வார்த்தைகள் பேசுபவர்களுக்கு ஒரு ஹீரோ இமேஜ் உருவாக்கப்பட்டு, அவர் பேச்சை ரசிக்க(!) ஒரு கூட்டம் உருவாகிக்கொண்டிருப்பது வேதனையான உண்மை.

திருச்சி அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் மற்றும் வழக்கறிஞர் திருவேணி இதுபற்றிக் கூறும்போது, ‘`சினிமா, மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எம்.ஜி.ஆர் தன் படங்களில் எதிர்மறை பாடல்கள் தவிர்த்து, நேர்மறை பாடல்களுக்கே இடம்கொடுப்பார். அவர் ரசிகர்களுக்கு, அவரது அந்த வகைப் பாடல்கள் நிறைய தன்னம்பிக்கையையும் புத்துணர்வையும் கட்டி எழுப்பியது. அடுத்து வந்த ஹீரோக்கள், சிகரெட்டை விதவிதமாகப் பிடிப்பதை ஒரு ஹீரோயிஸமாகக் காட்ட, அந்தத் தலைமுறை ரசிகர்களுக்குப் புகைப்பழக்கம் தவறு என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு, அதன் மேல் ஒரு விருப்பம் ஏற்பட்டது.

2K kids: கெட்ட வார்த்தையில் பேசுவது ஃபேஷனாக மாறுகிறதா?!

இப்போது சினிமா, வெப் சீரிஸ், சோஷியல் மீடியா போஸ்ட்கள், வீடியோக்கள் என எங்கு பார்த்தாலும், எந்த ஒரு வாக்கியம் பேசினாலும் அதில் ஒரு கெட்ட வார்த்தையைக் கோத்துச் சொல்வதை ஒரு டிரெண்டாகவே ஆக்கிவிட்டார்கள். நம் பதின்ம வயதுக் குழந்தைகள் முதல் இளைய தலைமுறை வரை அதை அப்படியே பின்பற்றுவதைப் பார்க்கும்போது, இந்த நிகழ்காலமும் நிகழ் தலைமுறையும் மிகவும் கவலைக்குரியதாகின்றன. அவர்களுக்கு, அவையெல்லாம் கெட்ட வார்த்தை என்ற எண்ணம் இல்லாமல்போய், இதுதான் ஃபேஷன் என்ற எண்ணமே மேலோங்குகிறது. சினிமாவில் சென்ஸார் போர்டு இருந்தாலும், அவர்கள் தணிக்கைக்கு அப்பாற்பட்ட புரொமோ, யூடியூப் வெர்ஷனில் எல்லாம் இந்த வார்த்தைகள் சகஜமாகப் புழங்கத்தான் செய்கின்றன. இன்னொரு பக்கம் வெப் சீரிஸ், சேனல்கள், சோஷியல் மீடியாவுக்கான சென்ஸார் போர்டு குறித்த பேச்சுகள்கூட இங்கே அழுத்தமாக இன்னும் எழும்பவில்லை.

எந்தப் பிரச்னைக்கான தீர்வுக்கான வழியும், எப்போதும் தனிநபரில் இருந்துதான் தொடங்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு, கெட்ட வார்த்தைகள் பேசுவது டிரெண்டு இல்லை, இழிவு என்று நாம்தான் எடுத்துரைக்க, இடித்துரைக்க வேண்டும். ஒருவர் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு கெட்டவார்த்தை பயன்படுத்துவதையே ஏற்றுக்கொள்ள முடியாது. அது சட்டப்படி தண்டிக்கக்கூடிய செயலும்கூட. அப்படியிருக்க, வேடிக்கை யாகவும் விளையாட்டாகவும் ஃபேஷனாகப் பயன்படுத்துவது துளிகூட ஜீரணித்துக்கொள்ள முடியாத செயலே. இது மிக மிகத் தவறான செயல் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும், நாம் உணர்த்தவும் வேண்டும்’’ என்கிறார் உறுதியாக.