Published:Updated:

`மனித ரத்தம் மண்ணில் சிந்த வேண்டும்!' - கற்களால் தாக்கிக்கொள்ளும் வித்தியாச திருவிழா

சத்யா கோபாலன்

ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொள்ளும் வித்தியாசமான திருவிழா உத்தரகாண்ட் மாநிலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Bagwal festival
Bagwal festival ( ANI )

இந்தியாவில் பலவிதமான கலாசாரங்கள் உள்ளன. அவற்றுக்கு ஏற்ப மக்களின் பண்டிகை முறைகளும் மாறுபடுகின்றன. பிரமாண்டமான திருவிழாக்கள் முதல் மிரளவைக்கும் திருவிழாக்கள் வரை நம் மக்களின் தனித்துவமான பண்டிகைகள் ஏராளம். இந்த வரிசையில் உத்தரகாண்டிலும் ஒரு விநோத திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.

Bagwal festival
Bagwal festival
ANI

உத்தரகாண்ட் மாநிலம் சம்பவாட் மாவட்டத்தில் ‘பாக்வால்’ என்ற திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இரு பிரிவினராகப் பிரியும் மக்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொள்கின்றனர். இதுதான் இந்தத் திருவிழாவின் சிறப்பம்சம். ஆண்டுதோறும் ரக்‌ஷாபந்தன் நாளில், ஷ்ரவன் பூர்ணிமா என்ற பெயரில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. `கல் வீச்சு விளையாட்டின்போது மண்ணில் சிந்தப்படும் ரத்தத்துக்குப் பிறகே கடவுள் மகிழ்ச்சி அடைகிறார்' என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Vikatan

நேற்று நடந்த கல் எறியும் நிகழ்வு 10 நிமிடங்கள் நீடித்ததாகவும் இதில் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கோயிலின் தலைமை நிர்வாகி ஜோஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசியவர்,

“ பழங்காலத்தில், கடவுளைக் குளிர்விக்க ஆண்டுக்கு ஒருமுறை ஒருவரைப் பலியிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது. அப்போது வயதான பெண்மணி ஒருவர், தன்னுடைய ஒரே பேரனைப் பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடவுளிடம் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து அந்தக் கோயிலிலிருந்த பக்தர்களின் கனவில் வந்த கடவுள், முதியவரின் வேண்டுதலைத் தான் ஏற்பதாகவும் மனித பலிக்குப் பதிலாக ஒருவரை ஒருவர் கற்களால் பலமாகத் தாக்கிக்கொண்டு மனித ரத்தம் மண்ணில் சிந்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதை ஏற்ற பக்தர்களும், அன்று முதல் ஆண்டுதோறும் கற்களால் தாக்கிக்கொள்ளும் ஷ்ரவன் பூர்ணிமாவைக் கொண்டாடி வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

Bagwal festival
Bagwal festival
ANI

சம்யல், கஹர்வால், ஒல்கியா, லாம்கரியா ஆகிய நான்கு கடவுள்கள் தங்கள் நிலங்களைக் காப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்த நான்கு கடவுள்களை வணங்குபவர்களும் இரு குழுவாகப் பிரிந்து கற்களால் தாக்கிக்கொள்கின்றனர். மூத்த மதகுருவிடமிருந்து சமிக்ஞை வந்தவுடன் தாக்குதலை நிறுத்திவிடுகின்றனர். `திருவிழாவின்போது கற்கள் பயன்படுத்தக் கூடாது' என அம்மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஊர் மக்கள் கற்களைப் பதுக்கி வைத்து திருவிழாவின்போது தாக்கிக்கொள்கிறார்கள்.