Published:Updated:

வறுமையில் குடும்பம், செல்போன் வாங்கிக் கொடுத்த ஆசிரியை... நெகிழ்ச்சியில் மாணவிகள்!

ஆசிரியர் பைரவி
ஆசிரியர் பைரவி

``நாம வரும்போது எதையும் எடுத்துக்கிட்டு வரலை, போகும்போது எதையும் கொண்டு போறதில்லை. இடைப்பட்ட வாழ்க்கையில முடிஞ்சளவு மத்தவங்களுக்கு உதவி செய்வோம்ங்க... வாழ்க்கை நல்லா இருக்கும்.'' - ஆசிரியர் பைரவி

செல்போன் இல்லாமல் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் தவித்த இரண்டு மாணவிகளுக்கு விகடன் செய்தி மூலமாக செல்போன் கிடைத்திருக்கிறது. ``எங்க முகம்கூட, உதவி செய்த டீச்சருக்குத் தெரியாது. அவங்களுக்கு நாங்க எப்பவும் கடமைப்பட்டிருப்போம்'' என்று நன்றி தெரிவித்தார்கள் மாணவிகள்.

ஆன்லைன் கல்வி (மாதிரி படம்)
ஆன்லைன் கல்வி (மாதிரி படம்)

கொரோனா நோய்த்தொற்று காரணமாகப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் எனத் தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில், பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்திவருகின்றன. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பச் சூழல் காரணமாக செல்போன் வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். சில மாணவ, மாணவிகள் செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத விரக்தியில் உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்திகளையும் காண்கிறோம்.

இந்நிலையில், திருச்சி, பீமநகரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர், ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தியை விகடன் இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி
தற்கொலை செய்துகொண்ட மாணவி

அந்தச் செய்தியைப் படித்த ஒருவர் நம்மைத் தொடர்புகொண்டு, ``இரண்டு மாணவிகள் செல்போன் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். முடிந்தால், அவர்களுக்கு உதவி செய்யுங்கள்" என்று ஒரு போன் நம்பரை கொடுத்தார். நாம் அந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசினோம்.

திருச்சி காட்டூர் பகுதியில் வசிக்கும் மாணவிகள் கார்த்திகா, சுபஸ்ரீ நம்மிடம் பேசினர். தனியார் பள்ளியில் படித்து வரும் இருவரும், தங்களின் குடும்பச்சூழலை நம்மிடம் சொன்னார்கள். ஒருவரின் தந்தை மாலை நேரத்தில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்த, மற்றொருவரின் தந்தை இரும்புக் கடையில் வேலைபார்க்கிறார்.

அந்தத் தகவல்களை உறுதிப்படுத்திய பின்னர், பெரம்பலூரைச் சேர்ந்த கணித ஆசிரியை பைரவியிடம் தகவலைச் சொன்னோம். ``உடனடியா வாங்கிடலாம் சார்'' என்றார்.

செல்போனை பெற்றுக்கொண்ட மாணவியிடம் பேசினோம். ``எங்க அப்பா மாலை நேரத்துல திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்ட்கிட்ட தள்ளுவண்டியில டிபன் கடை நடத்திக்கிட்டு வர்றாங்க. அப்பாகிட்ட சாதாரணமான கீ பேடு போனுதான் இருக்கு. எங்க சொந்தக்கார அண்ணன்கிட்ட, ஆன்லைன் கிளாஸ் மட்டும் அட்டண்ட் பண்ணிட்டு தர்றேன்னு சொல்லி, போன் வாங்கினேன். மூணு நாள் கொடுத்தாங்க. அப்புறம் நெட் அதிகமா செலவாகுதுனு தரலை.

ஆசிரியர் பைரவி
ஆசிரியர் பைரவி

அப்பா, `சீக்கிரம் புது செல்லு வாங்கித் தர்றேன்'னு சொன்னாலும், அப்பாவோட நெலமைய நெனச்சா பாவமா இருந்துச்சு. இந்த நிலையிலதான், எங்களை பத்தி தெரிஞ்ச ஒரு அண்ணன் உங்ககிட்ட சொல்ல, விகடன் மூலமா அது அந்த மிஸ்ஸூக்கு தெரியவர எங்களுக்கு இந்த உதவி கிடைச்சிருக்கு. ரொம்ப நன்றிங்க. எங்க முகம்கூட அந்த மிஸ்ஸுக்கு தெரியாது அவுங்களுக்கு நாங்க எப்பவும் கடமைப்பட்டிருக்கிறோம்'' என்றார்.

தன்னிடம் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகளில் சிலர், தங்களிடம் செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில், அவர்களுக்குத் தன் செலவில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் 16 செல்போன்களை வாங்கிக் கொடுத்தவர் பைரவி டீச்சர்.

போன் வழங்கிய ஆசிரியர் பைரவி
போன் வழங்கிய ஆசிரியர் பைரவி

``அதைப் பத்தி நீங்க விகடன் இணையதளத்தில் எழுதினதும், பல இடங்களிலிருந்தும் போன் செய்து, நாங்களும் உதவுறோம்னு சொல்ல, மேலும் 27 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுக்க முடிந்தது. இப்போ இந்த ரெண்டு மாணவிகளுக்கு உதவினதில் மகிழ்ச்சி. நாம வரும்போது எதையும் எடுத்துக்கிட்டு வரலை, போகும்போது எதையும் கொண்டு போறதில்லை. இடைப்பட்ட வாழ்க்கையில முடிஞ்சளவு மத்தவங்களுக்கு உதவி செய்வோம்ங்க வாழ்க்கை நல்லா இருக்கும்" என்றார் பைரவி டீச்சர்.

அடுத்த கட்டுரைக்கு