கத்தரி வெயில் முடிந்தும், கோடை வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. `மழையே மழையே வா வா' என மக்கள் ராகம் பாடும் அளவுக்குக் கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருக்கிறது.
பகல் வேளையில் வெயில் கொளுத்திய நிலையில், தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளிலும் தற்போது மழை வருவதற்கான சூழல்கள் தென்படுகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் அதிக மழையைக் கொடுக்கும் தென்மேற்குப் பருவமழை, கேரளாவில் வழக்கம்போல் நேற்று தொடங்கியிருக்கிறது. இந்தப் பருவமழையால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய தமிழக மாவட்டங்கள் அதிக மழையைப் பெறும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் எவ்வாறு இருக்கும்? இந்தப் பருவமழையால் சுட்டெரிக்கும் கோடை வெயில் குறைய வாய்ப்புள்ளதா? இந்தக் கேள்விகளுடன் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரனிடம் பேசினோம்.
``அரபிக்கடல் பகுதியில் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையையொட்டி கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருக்கிறது. தென்மேற்குப் பருவமழை படிப்படியாகக் கர்நாடக மாநிலம் வழியே வடக்குநோக்கி நகரும்.

இந்த மழை, கர்நாடக மாநிலம் உட்பட மேற்கு பகுதியை ஒட்டிய மற்ற மாநிலங்களில் இயல்பான அளவில் பெய்தால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து தமிழகத்துக்கு அதிக நீர் கிடைக்கும். எனவே, இந்த மழை மறைமுகமாகத் தமிழகத்துக்கு நல்ல பலன் கொடுக்கக்கூடியவை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழகத்தில் வரும் ஜூன் 3-ம் தேதி வாக்கில்தான் தென்மேற்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். தென்மேற்குத் திசைக்காற்று வலுப்பெற்று, கேரளாவில் பரவலாக மழை பெய்தால் அதன் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளும் பயன்பெறும். அதையொட்டிய சில வானிலை காரணிகள் வாயிலாகவே சில தினங்களுக்குப் பிறகு தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதை உறுதிசெய்ய முடியும்.
லைலா, ரோனோ உள்ளிட்ட சில புயல்களால் தமிழகத்தில் கோடைக்காலத்திலும் சராசரி அளவைவிட அதிக மழை பெய்திருக்கிறது.
இருப்பினும், தென்மேற்குப் பருவமழையால் கேரளாவில் பெய்யும் மழை அளவைத் தமிழகத்தில் எதிர்பார்க்கமுடியாது. செப்டம்பர் மாதம்வரை நீடிக்கும் இந்தப் பருவமழையால் தமிழகத்துக்கு 32 செ.மீ மழைதான் கிடைக்கும். ஆனாலும், இந்த மழை அளவும் தமிழகத்துக்கு முக்கியமானதுதான். இந்தப் பருவத்தில் தமிழகத்தில் சராசரி அளவில் மழையை எதிர்பார்க்கலாம்.
மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், இந்தப் பருவ மழையால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழைதான் முக்கியமானது. அக்டோபர் மாதம் தொடங்கும் அந்தப் பருவமழையால் தமிழகத்துக்கு 44 செ.மீ மழை கிடைக்கும்” என்றார்.

`சென்னையில் வெப்பநிலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் வெப்பநிலை குறைந்து, சென்னையில் மழை பெய்யும் சூழல் இருக்கிறதா?’ என்று கேட்டதற்குப் பதிலளித்தார் பாலச்சந்திரன்.
``தரைக் காற்றும், கடல் காற்றும்தான் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலையைத் தீர்மானிக்கின்றன. கடந்த மாதம் உருவான அம்பன் புயலால் மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களில் பலத்த சேதம் ஏற்பட்டாலும் அங்கு நல்ல மழை பெய்திருக்கிறது. ஆனால், அந்தப் புயலால் சென்னையை ஒட்டிய கடலோர மாவட்டங்களில் உள்ள ஈரப்பதம் திசைமாற்றிச் சென்றன. அதனால் வழக்கமாக காலை 10.30 மணிக்கு வீசத்தொடங்கும் கடல் காற்று சென்னையில் மிகத் தாமதமாக வீசியது.
தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்துக்கு 32 செ.மீ மழைதான் கிடைக்கும். அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்துக்கு 44 செ.மீ மழை கிடைக்கும்.பாலச்சந்திரன்
குறைவாக வீச வேண்டிய தரைக்காற்று, வடமேற்குத் திசைநோக்கி அதிகம் வீசியது. எனவே, சென்னையில் சில தினங்கள் அனல் காற்று அதிகம் வீசியது. மேலும், வெப்பநிலையும் 40 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. குறிப்பாக மதியம் ஒருமணிக்குமேல்தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். ஆனால், சென்னையில் காலை வேளையிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. தரைக்காற்று மற்றும் கடற்காற்று வீசுவது மாறுபட்டது உட்பட சில வானிலை மாற்றங்களால், வெப்பநிலை அதிகமானதுடன் கடந்த மே மாதத்தில் சென்னையில் கோடை மழை பெய்யாததும் அதிக வெப்பநிலைக்கு முக்கியக்காரணம் ஆகும்.
அதேவேளையில், வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் சில பகுதிகளில் ஓரளவுக்குக் கோடை மழை நன்றாகவே பெய்திருக்கிறது. இருப்பினும் இந்த மழை அளவும் குறைவானதுதான். கடந்த மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 12 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 8 செ.மீ மழைதான் பெய்திருக்கிறது.

இந்த மூன்று மாதங்களில் சென்னையில் மட்டும் 4 செ.மீ மழைதான் கிடைக்கும். ஆனால், சென்னையில் 5 செ.மீ மழை பெய்திருக்கிறது. `சென்னையில் ஏப்ரல் மாதத்தில் ஒருநாள்தானே மழை பெய்தது?’ என நீங்கள் கேட்கலாம். அந்த ஒருநாளில் இயல்பான அளவைவிட நல்ல மழை பெய்துள்ளது. அன்று பெய்த ஒருநாள் மழை, சென்னையின் குடிநீர் தேவைக்கும் ஓரளவுக்குக் கைகொடுத்திருக்கிறது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெப்பநிலை சற்று அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. திருத்தணி, கரூர் போன்ற பகுதிகளில் மிக அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. அதேபோல பெரம்பலூர், கோயம்புத்தூர், சிவகங்கை மாவட்டங்களில் மட்டுமே கோடை மழை கூடுதலாக பெய்திருக்கிறது. மற்ற அனைத்துப் பகுதிகளிலும் கோடை மழை குறைவுதான்.
தற்போதைய சூழலில் சென்னையில் 40 டிகிரிக்கும் குறைவாகவே வெப்பநிலை இருக்கும். கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் சென்னையிலும் வெளிப்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் அடுத்த ஓரிரு தினங்களுக்கு சென்னையில் லேசானது முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
தற்போதைய ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்துக்கு வெறும் 4 செ.மீ மழைதான் கிடைக்கும். இருப்பினும் தமிழகத்தில் படிப்படியாய் வெயிலின் தாக்கம் குறைந்து, நிச்சயமாக மழையை எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்.