Published:Updated:

அதிரவைக்கும் புதுச்சேரி அரசின் மதுக்கொள்(ளை)கை!

புதுச்சேரி பார்
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி பார்

முறைகேடாக விற்கப்படும் பார் லைசென்ஸ்கள்... தனியாரிடம் செல்லும் ரூ.1,700 கோடி...

அதிரவைக்கும் புதுச்சேரி அரசின் மதுக்கொள்(ளை)கை!

முறைகேடாக விற்கப்படும் பார் லைசென்ஸ்கள்... தனியாரிடம் செல்லும் ரூ.1,700 கோடி...

Published:Updated:
புதுச்சேரி பார்
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி பார்

‘சாராயக் கடைகளை ஏலம்விட்டு வருமானம் ஈட்டுகிற புதுச்சேரி அரசு, மதுபானக் கடைகளின் உரிமையை மட்டும் தனியாருக்கே தாரை வார்த்துவிட்டது ஏன்?’ என்ற நீண்டகாலக் கேள்வி, புதுச்சேரி அரசியலில் மறுபடியும் மையம்கொண்டிருக்கிறது!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 103 சாராயக் கடைகள், 93 கள்ளுக்கடைகள் இருக்கின்றன. அதேபோல FL2 எனப்படும் 231 சில்லறை மதுபானக் கடைகளும், FL1 எனப்படும் 80 மொத்த விற்பனைக் கடைகளும் இருக்கின்றன. இவை தவிர, 150 உணவகங்களுக்கும் சுற்றுலா பார் உரிமங்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. இதில், சாராயம் மற்றும் கள்ளுக்கடை உரிமங்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம்விடும் கலால்துறை, மதுபானக்கடை உரிமங்களை மட்டும் ஒவ்வோர் ஆண்டும் புதுப்பித்துவருகிறது. தற்போது சாராயம் மற்றும் கள்ளுக்கடை உரிமங்களுக்கு ஏலம் நடைபெற்றுவரும் நிலையில், சாராயக் கடைகளைப்போல மதுபானக் கடைகளையும் ஏலம்விட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைய ஆரம்பித்திருக்கிறது.

அதிரவைக்கும் புதுச்சேரி அரசின் மதுக்கொள்(ளை)கை!

இது குறித்துப் பேசுகிற புதுச்சேரி அ.தி.மு.க-வின் கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன், ‘‘புதுச்சேரியில் ஆறு மதுபானத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவை தவிர, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 850-க்கும் மேற்பட்ட மது வகைகள் புதுச்சேரிக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை மொத்த விற்பனைக் கடைகள் வாங்கி, சில்லறைக் கடைகளுக்கு விற்கின்றன. இதன் மூலம் அந்த மது வகைகளின் விலை நிர்ணய உரிமை, தனியாரிடம் மட்டுமே இருக்கிறது. சில்லறை மதுபானக் கடைகள் தனியாரிடமே இருக்கட்டும். ஆனால் மதுபானங்களுக்கென்று அரசு ஒரு கார்ப்பரேஷனை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் அரசே மதுபானங்களைக் கொள்முதல் செய்து, விலை நிர்ணயம் செய்து, சில்லறைக் கடைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இப்போதிருக்கும் சுமார் 350 மதுக்கடை லைசென்ஸ்களும் 1989-ல் வழங்கப்பட்டவை. அதன் பிறகு புதிதாக லைசென்ஸுகள் கொடுக்கப்படவில்லை. இவை அனைத்துமே தற்போது வெறும் 25 அரசியல்வாதிகளின் கைகளில்தான் இருக்கின்றன. அதனால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சியாளர்களை கவனித்துவிட்டு, மதுபான சாம்ராஜ்ஜியத்தில் குறுநில மன்னர்களாக வலம்வருகிறார்கள். லைசென்ஸ் என்பது அரசின் சொத்து. அதை அப்படியே விற்க முடியாது என்பதால், 90% பார்ட்னர்ஷிப் என்ற பெயரில் ஒருவரை இணைத்து சுமார் 5 கோடி ரூபாய்க்கு முறைகேடாக விற்றுவிடுகிறார்கள்.

அதிரவைக்கும் புதுச்சேரி அரசின் மதுக்கொள்(ளை)கை!

தற்போது காலாப்பட்டிலுள்ள ஒரு சாராயக்கடைக்குச் சுமார் 39 லட்சம் ரூபாயை ஏலத்தொகையாக நிர்ணயித்திருக்கிறது அரசு. அந்த வகையில், அந்த ஒரு கடை மட்டுமே வருடத்துக்கு சுமார் 4 கோடியே 67 லட்சம் ரூபாயை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும். அப்படியானால், மீதமிருக்கும் 102 கடைகளின் வரித்தொகையை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இது தவிர ரூ.46,00,000/- முன்வைப்புத் தொகை, ஏலத் தொகையில் 12 மடங்கு மதிப்பில், சுமார் 5 கோடி ரூபாய்க்கு சொத்துப் பத்திரத்தையும் கலால்துறையிடம் சமர்ப்பித்தால்தான் ஏலத்தில் கலந்துகொள்ளவே முடியும். ‘சாராயக்கடை ஏலத்தின் மூலம் அரசுக்கு (ஆண்டுக்கு) ரூ.1,000/- கோடி வருவாய் கிடைக்கும்’ என்று தெரிவித்திருக்கிறார் கலால்துறை ஆணையர். ஒரு சாதாரண சாராயக்கடை, வருடத்துக்கு சுமார் 5 கோடி ரூபாய் அரசுக்கு வரி செலுத்துகிறது. ஆனால், 1,000 வகையான மதுபானங்களை விற்கும் மதுக்கடைகள் மாதத்துக்கு 80,000 ரூபாய் வீதம் வருடத்துக்கு வெறும் 10 லட்சம் ரூபாயை மட்டுமே விற்பனை வரியாகக் கட்டி, ஏலம் எதுவுமின்றி லைசென்ஸைப் புதுப்பித்துக்கொள்கின்றன. இதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய சுமார் 1,700/- கோடி ரூபாய் தனியாருக்குச் செல்கிறது. அதனால்தான் மதுபானக் கடைகளையும் ஏலம் விட வேண்டும் என்று கேட்கிறோம்” என்றார்.

ரங்கசாமி
ரங்கசாமி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெருமாள் நம்மிடம் பேசியபோது, ‘‘30 வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட மதுபானக்கடை உரிமங்களை, பரம்பரைச் சொத்தைப்போல அவர்கள் குடும்பத்தினரே வைத்திருக்கிறார்கள். அது சமூகத்தில் அசமத்துவத்தையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது. குறிப்பிட்ட சிலரே கோடிக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டு, அதைக் காப்பாற்றிக்கொள்ள சமூக விரோதிகளைக் கைக்குள் வைத்துக்கொள்கிறார்கள். அதனால், வருடத்துக்கு ஒரு முறை மதுக்கடை உரிமங்கள் ஏலம்விடப்பட வேண்டும். ‘அரசே ஒரு கார்ப்பரேஷனை ஆரம்பித்து மொத்த விற்பனைக் கடைகள் மூலம் மதுபானங்களைக் கொள்முதல் செய்து, சில்லறைக் கடைகளுக்கு விநியோகம் செய்தால், அரசுக்குப் பெரிய அளவில் வருவாய் கிடைக்கும்’ என்று கடந்த 2016-ல் அப்போதைய முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டப்பட்ட திட்டக்குழு கூட்டத்திலேயே வலியுறுத்தினோம். இப்போதும் எங்கள் நிலைப்பாடு அதுதான்” என்றார்.

அன்பழகன், பெருமாள், சுதாகர்
அன்பழகன், பெருமாள், சுதாகர்

இது குறித்து விளக்கம் கேட்க, கலால்துறை ஆணையர் சுதாகரைத் தொடர்புகொண்டோம். “மதுபானக் கடைகளை ஏலம்விடுவதும், ஏற்று நடத்துவதும் அரசின் கொள்கை முடிவு. அது குறித்து நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது” என்று முடித்துக்கொண்டார்.

கலால்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ரங்கசாமி இதில் கவனம் செலுத்துவாரா?