Published:Updated:

“தவணைகட்ட முடியல... தற்கொலைக்கு தள்ளப்பட்டோம்!” - ஊரடங்கு துயரங்கள்!

முடிதிருத்தும் தொழிலாளர்
பிரீமியம் ஸ்டோரி
முடிதிருத்தும் தொழிலாளர்

- முடிவுக்கு வருமா முடிதிருத்தும் தொழிலாளர்களின் துயரம்?

“தவணைகட்ட முடியல... தற்கொலைக்கு தள்ளப்பட்டோம்!” - ஊரடங்கு துயரங்கள்!

- முடிவுக்கு வருமா முடிதிருத்தும் தொழிலாளர்களின் துயரம்?

Published:Updated:
முடிதிருத்தும் தொழிலாளர்
பிரீமியம் ஸ்டோரி
முடிதிருத்தும் தொழிலாளர்

சில தலைமுறைகள் அறியாத பெரும்துயரத்தைத் தந்து இம்சித்துக்கொண்டிருக்கிறது கொரோனா. ஒவ்வொரு நாளும் வரும் வேலையிழப்புகள், உயிரிழப்புகள் தொடர்பான செய்திகள் நெஞ்சை அறுக்கின்றன. அதிலும் எந்தத் தொழில் பாதுகாப்பும் உத்தரவாதமும் இல்லாத மரபுசாரா தொழிலாளர்களான அன்றாடங்காய்ச்சிகளின் துன்பங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. அறியப்பட்ட கொரோனா மரணங்களைவிட, வெளிச்சத்துக்கே வராத வறுமையின் மரணங்கள் இருள் சூழ்ந்தவை. சாலையோரத்தில் சிறு கடைகளை வைத்திருப்பவர்கள், செருப்பு தைப்பவர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், சமையல் கலைஞர்கள்... என ஊரடங்குக் காலங்களில் வாழ்வாதாரம் இழந்தவர்களின் பட்டியல் நீளமானது. இவர்கள் சந்தித்த பாதிப்புகள் என்னென்ன, அரசு இவர்களுக்குச் செய்தது என்ன, இவர்களின் கோரிக்கைகள் என்ன? சாமானியர்களைத் தேடிப் புறப்பட்டது ஜூ.வி.

 “தவணைகட்ட முடியல... தற்கொலைக்கு தள்ளப்பட்டோம்!” - ஊரடங்கு துயரங்கள்!

“ஊரடங்கு முடிஞ்சு எங்களைத் தேடி முடி வெட்டிக்க வர்றாங்களோ இல்லையோ... முதல் ஆளா கடன் கொடுத்தவங்க வந்து நிக்குறாங்க... தவணைத் தொகை கட்ட முடியலை. அவமானமா இருக்கு!” - நாம் சந்தித்த முடிதிருத்தும் தொழிலாளிகள் பலரது வேதனைக் குரல் இது. 2020-ம் ஆண்டு மூன்று மாதங்களும், 2021-ம் ஆண்டு ஒன்றரை மாதங்களும் கொரோனா ஊரடங்கில் தமிழ்நாடு முழுவதும் சலூன்கள் மூடப்பட்டிருந்தன. தொழில் இழப்பால் வறுமையைச் சமாளிக்க முடியாமல் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சிலர் தற்கொலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை தரமணியில் சலூன் நடத்திவந்தவர் 35 வயதான பரணி. கடந்த ஆண்டு ஊரடங்கில் வருமானம் சுத்தமாக நின்றுபோக... அவரின் குடும்பம் வறுமையில் வாடியது. ஒருநாள் காலை பால் பாக்கெட் வாங்கி வருகிறேன் என்று கிளம்பியவர், அதற்குக்கூடக் கையில் காசில்லாமல் இருப்பதைத் தாங்க முடியாமல் சலூனைத் திறந்து மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்!

திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் 65 வயதான தர்மராஜ் சலூன் கடை நடத்திவந்தார். சுமார் 45 ஆண்டுகள் கத்தியைப் பிடித்தே பழகிய கரங்களுக்கு வேறு வேலை எதுவும் தெரியவில்லை. வறுமையில் தவித்தவர், தன் மனைவி காளியம்மாளுடன் விஷம் குடித்து, தற்கொலை செய்துகொண்டார். நமக்குத் தெரிந்த துயரங்கள் இவை... கண்ணீர்க் கதைகளோ இன்னும் ஏராளம்!

“ஊரடங்காலதான் எங்க வாழ்வாதாரம் போச்சுன்னு சொல்றாங்க. அது ஒரு வகையில உண்மைதான். ஆனா, கொரோனா தொடங்குனதுல இருந்தே எங்க வருமானம் பாதியா குறைஞ்சுருச்சு. ஊரடங்குல மொத்தமா அது முடிஞ்சுபோச்சு. கட்டிங், ஷேவிங் எதுன்னாலும் நாங்க கஸ்டமரைத் தொட்டுத்தான் செய்யணும்... அதனால, கஸ்டமர்களுக்கு எங்கக்கிட்ட வர பயம். எங்களுக்கும் கஸ்டமரைத் தொட பயம். இளவட்டப் பசங்க பாதிப் பேரு தொழிலைவிட்டுட்டுப் போயிட்டாங்க. ஆனா, இருபது வருஷத்துக்கும் மேல இதே தொழில்ல சவரக்கத்தியைப் பிடிச்சுப் பழகிட்ட எங்களுக்கு வேற தொழில் எதுவும் தெரியாது. எங்கள்ல பலரும் கடனை வாங்கித்தான் கடைகளை ஆரம்பிச்சிருப்பாங்க. ஒரு கடனை முடிக்க அப்படியே அடுத்தடுத்த கடனை வாங்கிடுவோம். அதனால, ஊரடங்கு முடிஞ்சு கடையைத் தொறந்தா, கஸ்டமருங்க வர்றாங்களோ இல்லையோ... கடன் கொடுத்தவங்க வந்து நிக்குறாங்க. வருமானமும் இல்லை... அவமானமா இருக்கு!” என்று விரக்தியுடன் தங்கள் நிலையை விவரித்தார் மதுரை மாவட்டம் மேலூரில் சலூன் கடை நடத்தும் முருகன்!

“எங்களை மாதிரி தொழிலாளர்கள் கிட்டல்லாம் சேமிப்பு இருக்காது... அன்னன்னைக்கு வர்றது குழந்தைங்க படிப்புக்கும், அன்னாட பொழப்புக்குமே சரியா இருக்கும். எங்க தொழிலாளர்கள் சிலர் இப்படி வறுமையைச் சமாளிக்க முடியாம தற்கொலை செஞ்சுக்கிட்டிருக்கறது ரொம்ப வேதனையா இருக்கு...” என்றார் உறங்கான்பட்டியைச் சேர்ந்த தாஸ்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஒரு முடிதிருத்தும் தொழிலாளியோ... “பேரெல்லாம் வேணாங்க... அசிங்கமா இருக்கு. ஸ்கூலுக்குப் போகுற வயசுல மூணு குழந்தைகளை வெச்சுக்கிட்டு வயித்துக்கு வழியில்லாம அலையிறேங்க... தினமும் அதிகாலை நாலு மணிக்கு எந்திரிச்சு இடியாப்பம் சுட்டு தெருத் தெருவா வித்தேன். நமக்கு இடியாப்பம் கைப்பக்குவம் வரலை... ஒரு வாரம் தொடர்ந்து போராடியும் நாலாயிரம் ரூபா நஷ்டமானதுதான் மிச்சம். போன ஊரடங்குல பொண்டாட்டி போட்டிருந்த அரை பவுன் தோட்டை வாங்கி அடகுவெச்சு சமாளிச்சேன். இந்த ஊரடங்குல அதுக்கும் வழி இல்லாமப் போச்சு...” என்றபோது அவரது குரல் விம்முகிறது!

 “தவணைகட்ட முடியல... தற்கொலைக்கு தள்ளப்பட்டோம்!” - ஊரடங்கு துயரங்கள்!

தமிழ்நாடு மருத்துவர் சவரத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநிலத் தலைவரான செல்வராஜ், “தமிழ்நாட்டில் சுமார் மூன்றரை லட்சம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு அரசின் முடிதிருத்தும் தொழிலாளர் நல வாரியத்தில் 14,000 பேர் மட்டுமே பதிவுசெய்திருக்கிறார்கள். அதனால் பலருக்கும் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 2,000 ரூபாய் நிவாரணம் கிடைக்கவில்லை. அதனால், 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அமைச்சர்களை சந்தித்து முறையிட்டிருக்கிறோம். இப்போது பெரும் முதலீட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்பா போன்ற சலூன்களை ஆரம்பிக்கின்றன. ஒரு கார்ப்பரேட் கடை திறக்கப்பட்டால், அந்த பகுதியில் எங்களுடைய பத்து கடைகள் மூடப்படுகின்றன. நாங்கள் சொந்தக் கடைகளை மூடிவிட்டு அவர்களிடம் கூலி வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்க வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஆனால், எங்களுக்குத் தருவதில்லை. எனவே, கூட்டுறவு வங்கிகளில் எங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தர வேண்டும். நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்தாலும், எங்களுக்கும் ஐந்து சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது எங்களின் நீண்டகால கோரிக்கை” என்றார்.

முடிதிருத்துவோரின் வாழ்க்கைத் துயரங்களைக் களைந்து, அவர்களின் நல்வாழ்வுக்கு தமிழக அரசு உடனடியாக உதவ வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism