பிரீமியம் ஸ்டோரி

தமிழக மக்களுக்கு கடற்கரை என்றாலே அது சென்னை மெரினா பீச்தான். சென்னைக்கு வரும் பிற மாவட்ட மக்கள் மெரினா செல்வதைத் தங்கள் விருப்பமாக வைத்திருக்கிறார்கள். சென்னை மக்களுக்கும் எத்தனை முறை சென்றாலும் சலிக்காததாக மெரினா பீச் இருக்கிறது. மெரினாவுக்கு நிகராக இயற்கையும் அழகும் கொட்டிக்கிடக்கும் கடற்கரைகள், தமிழகக் கடலோர மாவட்டங்களில் இருப்பது பலருக்கும் தெரியாது. தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களில், அதிகம் பீச்கள் இருப்பது ராமநாதபுரம் மாவட்டத்தில்தான். அவற்றில் சிறந்த பீச்களைப் பார்ப்போம்.

அரியமான் கடற்கரை

மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், ராமநாதபுரத்தைத் தாண்டியதும் 25 கி.மீ தூரத்தில் சுந்தரமுடையான் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது, அரியமான் பீச். நெடுஞ்சாலையிலிருந்து தென்னந்தோப்புகள் வழியே பிரியும் கிளைச்சாலையில் ஜிலுஜிலு வங்கக் கடல் காற்றை அனுபவித்தபடி மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்து சவுக்குத் தோப்புக்குள் சென்றவுடன், அடர்வனத்துக்கு அப்பால் அரியமான் பீ்ச் காட்சி தரும். வெண்ணெயைக் கொட்டி வைத்தது போன்ற பரந்த மணல் பரப்பைக் கடந்து 100 மீட்டர் தூரத்தில், வெள்ளை நிற அலைகள் மிதமாக அலைந்தபடி அற்புதமாகத் தெரிகிறது நீலக்கடல்.

அரியமான் கடற்கரை
அரியமான் கடற்கரை

இருபுறமும் நீளும் கடலோரத்தில் இரண்டு கி.மீ தூரத்துக்குத் தென்னையும் சவுக்கும் நடுவில் வெள்ளை மணலுமாக அழகாகக் காட்சி தருகிறது. இக்கடற்கரையின் அழகும் அருமையும் சமீப காலமாகத்தான் வெளியுலகுக்குத் தெரியவந்தது. வெளியூரிலிருந்து வருபவர்கள் சவுக்குத் தோப்பில் அமர்ந்து உணவு அருந்திவிட்டு, அப்படியே வெள்ளை மணலில் கால் பதிய நடக்கலாம். கிளிஞ்சல்கள் ஒதுங்கிக்கிடக்கும் கடற்கரையில் கால் நனைத்து ரசிக்கலாம். கரையில் பெயர் எழுதி அலை வந்து அடித்துச் செல்வதைப் பார்த்துக் குதூகலிக்கலாம். குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் பயப்படாமல் குளிக்கலாம்.

கடற்கரைக்குச் செல்லும்போதே சவுக்குத்தோப்பில் கடை வைத்திருப்பவர்களிடம் ஆர்டர் செய்துவிட்டுப் போனால், கடலில் மூழ்கிவிட்டு கரையில் ஓய்வெடுக்கும் நேரத்தில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, மீன் வறுவல் நம்மைத் தேடி வரும். ருசித்துவிட்டு மீண்டும் கடலில் இறங்கலாம், மணலில் புரளலாம்.

மெரினாவுக்கு சவால்விடும் அழகிய கடற்கரைகள்!

முழு நிலா இரவுகளில் கடற்கரை அழகை ரசிப்பது, மனதுக்கு இன்னும் மகிழ்ச்சி தரும். அரியமான் கடற்கரை அருகே தனியார் ரிசார்ட்கள் உள்ளன. அங்கு தீம் பார்க்குகளும், செயற்கை நீரூற்றுகளும் உண்டு.

அரியமான் கடற்கரையைப் போலவே அதன் எதிர்த்திசையில் 10 கி.மீ தூரத்தில், அமைந்துள்ள சீனியப்பா தர்கா கடற்கரையும் அழகானது. அரியமான் கடற்கரை அளவுக்கு நீண்ட சவுக்குத் தோப்பு அமைந்த கடல்பரப்பு இல்லாவிட்டாலும், இங்கேயும் கடல் அழகு.

ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பல அரசுப் பேருந்துகள் சுந்தரமுடையானில் நின்று செல்லும். அங்கிருந்து ஆட்டோ மூலம் அரியமான் போகலாம்.

மெரினாவுக்கு சவால்விடும் அழகிய கடற்கரைகள்!

மண்டபம் தோணித்துறை கடற்கரை

மண்டபம் தோணித்துறை பீச் பார்க், பாம்பன் தீவுக்குச் செல்லும் ரயில் மற்றும் சாலைப் பாலம் தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. அந்தக் காலத்தில் வெளிநாடுகளுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் பெரிய தோணிகள் நிற்கும் இடமாக இருந்ததால், தோணித்துறை என்று பெயர் வந்தது.

அமைதியான இந்தக் கடற்கரையிலிருந்து பார்த்தால், தூரத்தில் பாம்பன் தீவும், தென்னைமரங்களுடன் தெரியும் ஆளில்லாத குருசடைத் தீவும் தெரியும். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பீச் பார்க், மண்டபம் பேரூராட்சி நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டது. அழகிய பூங்காக்கள், நீரூற்றுகள் உண்டு. மாலை நேரத்தில் இதமாக வீசும் காற்றுடன் மனதுக்கு இனிமையாக இருக்கும்.

அலையில்லாத கடற்கரையில் மணலுடன் பாறைகளும் இருக்கும். இங்கிருந்தபடி, 2.5 கி.மீ நீளமுள்ள பாம்பன் பாலத்தில் ரயில் செல்லும் காட்சியையும், 100 அடி உயரமான பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதையும் பார்ப்பது பிரமிப்பூட்டும். இந்தக் கடற்கரைப் பூங்காவிலிருந்து சாலை வழியே வந்தால், பாம்பன் சாலை பாலத்தின் முழு அழகையும் ரசிக்கலாம்.

மெரினாவுக்கு சவால்விடும் அழகிய கடற்கரைகள்!

காரங்காடு அலையாத்தி கடற்கரை

தொண்டி அருகே அமைந்துள்ள காரங்காடு அலையாத்திக்காடு கடற்கரை மிஸ் பண்ண முடியாத இடம். ராமநாதபுரத்திலிருந்து சென்னை செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தால், 45 நிமிடங்களில் வந்தடையலாம்.

மணக்குடியிலிருந்து கிழக்கே செல்லும் கிளைச்சாலையில் காரங்காட்டுக்குப் பயணிக்கும் போதே கடல் காற்று நம்மைப் புத்துணர்ச்சியாக்கும். ஆச்சர்யப்படுத்தும் வகையில் கடலுக்குள் வளர்ந்து நிற்கின்றன அலையாத்திக் காடுகள். இந்த அழகிய கடல் வனத்தின் அழகை ரசிக்க 3 கி.மீ தூரம் படகில் பயணம் செய்ய வேண்டும்.

இங்குள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்றே செல்ல முடியும். சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக வனத்துறையினரும் காரங்காட்டு கிராம மக்களும் இணைந்து குழு அமைத்துள்ளனர். படகுச் சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்புப் படகுச் சவாரி, ஸ்நார்கிங் எனப்படும் கடலுக்குள் அடியில் சென்று இயற்கையின் அதிசயங்களைக் காணும் வசதி ஆகியவை உள்ளன.

கடலில் பயணித்து அலையாத்திக் காடுகளுக்கு இடையே இரை தேடிச் செல்லும் பறவைகளைக் காணலாம். அங்கு உள்ள உயரமான கோபுரத்தில் ஏறி, அலையாத்திக் காடுகளின் அழகை முழுமையாக ரசிக்கலாம். கடலுக்கடியில் வளரும் கடல் தாவரங்களையும் வகை வகையான மீன் இனங்களையும் காணலாம்.

மெரினாவுக்கு சவால்விடும் அழகிய கடற்கரைகள்!

குந்துகால் கடற்கரை

பாம்பனுக்கருகில் அமைந்துள்ளது, குந்துகால் பீச். ராமாயணத்துடன் தொடர்புள்ள கடற்கரை இது. பிரிட்டிஷ் ஆட்சியுடன் தொடர்புடையதும்கூட. மன்னார் வளைகுடாவில் அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. கடல் வளத்தைக் காக்கும் பவளப்பாறைகள் நிறைந்த பாதுகாக்கப்பட்ட கடற்கரை இது.

பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில், அக்காள் மடத்திலிருந்து வலதுபுறமாகப் பிரியும் சாலையில் 2 கி.மீ பயணித்தால், மிதமான அலையடிக்கும் விரிந்த கடல் நம்மை வரவேற்கும். தென்னை மரம் சாய்ந்து நிற்க, வெள்ளை வெளேர் மணல் வளைந்து செல்ல, அழகாகக் காட்சியளிக்கும் குந்துகால் பீச்.

பிரிட்டிஷ் காலத்தில் பாம்பனிலிருந்து குந்துகால் வழியாகத்தான் தனுஷ்கோடிக்கு ரயில் சென்றது. அக்காலத்தில் கட்டிய ரயில்வே லோகோ ஷெட் இப்போதும் நினைவுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது.

குந்துகாலிருந்து பார்த்தால் குருசடைத்தீவு நெருக்கமாகத் தெரிகிறது. முன்பு மக்கள் படகில் அங்கு சென்றுவந்த நிலையில், பாதுகாக்கப்பட்ட தீவாக அறிவிக்கப்பட்டதால், வனத்துறை அனுமதியில்லாமல் தற்போது அங்கு செல்ல முடியாது.

குந்துகால் கடற்கரையில் அமர்ந்து கரையோர மீன் பிடிப்பவர்களைக் காணலாம். இக்கடலில் உணவு மற்றும் மருந்து தயாரிக்கும் கடல்பாசிகள் அதிகம் உற்பத்தியாகின்றன. கடலில் இந்தப் பாசிகளை எடுக்கச் செல்லும் பெண்களைக் காணலாம். அமெரிக்கா சென்றுவிட்டு, இலங்கை வழியாக கப்பல் மூலம் சுவாமி விவேகானந்தர் வந்து இறங்கிய இடம் இது என்பதால், அந்த நினைவாக விவேகானந்தர் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

குந்துகால் பீச்சுக்கு வருகிறவர்கள், ராமகிருஷ்ண மடத்தினரால் நிர்வகிக்கப்படும் இம்மண்டபத்தைப் பார்வையிடலாம். இங்கு விவேகானந்தரின் வெண்கலச்சிலை, அவர் பயன்படுத்திய பொருள்கள், அரிய புகைப்படங்கள், புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தியானம் செய்ய விரும்புகிறவர்களுக்காக தியான மண்டபம் அமைந்துள்ளது.

மெரினாவுக்கு சவால்விடும் அழகிய கடற்கரைகள்!

ஓலைக்குடா கடற்கரை

ராமேஸ்வரத்திலுள்ள இயற்கையான பீச்களில் முக்கியமானது, ஓலைக்குடா. ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராடும் அக்னி தீர்த்தம் அமைந்துள்ள கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் உள்ளது ஓலைக்குடா. பாரம்பரிய மீனவர்கள் நிரம்பிய இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கடலழகை அமைதியாக ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனருகில் பல ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் அமைந்துள்ளன.

ராமேஸ்வரத்தில் தங்கியிருப்பவர்கள் காலையும் மாலையும் நடைப்பயிற்சி செய்ய கடற்கரையை ஒட்டி பூங்காவுடன் கூடிய அழகான நடைபாதை அமைத்துள்ளார்கள். அமைதியாகக் கடல் காற்று தழுவ நடைப்பயிற்சி செல்வது மறக்க முடியாதது.

இங்குள்ள மீனவ மக்களிடம் ஆர்டர் செய்தால், கடல் உணவுகளுடன் அருமையான சாப்பாடு கிடைக்கும். ஓலைக்குடாவிலிருந்து சிறிது தூரம் சென்றால், தமிழ்நாடு ஹோட்டல் அருகே படகுச் சவாரி மையம் உள்ளது. கட்டணம் செலுத்தி படகில் அமர்ந்து ராமேஸ்வரம் கடற்கரையை ஒரு ரவுண்ட் அடிக்கலாம். கடலிலிருந்தபடி ராமேஸ்வரம் நகரின் அழகைப் பருகலாம்.

மெரினாவுக்கு சவால்விடும் அழகிய கடற்கரைகள்!

தனுஷ்கோடி கடற்கரை

புயலால் நகரம் அழிந்தாலும் அதன் மிச்சங்களுடன் உயிர்ப்புடன் உள்ளது தனுஷ்கோடி பீச். ராமேஸ்வரத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் தனுஷ்கோடி, ஓர் அதிசய நகரம். குட்டித்தீவில் ஒரு வால் போல் நீண்டு செல்லும் தனுஷ்கோடியின் நிலப்பரப்பின் இரண்டு பக்கமும் கடல் உள்ளது. ஒரு பக்கம் அமைதியாகவும், இன்னொரு பக்கம் ஆக்ரோஷமாகவும் அலையடிக்கும் கடலை ரசித்தபடி சென்றால், அரிச்சல்முனை வரும். காற்று நம்மைத் தள்ளும். மணல் நம் முகத்தில் குத்தும். ஆனாலும் தனுஷ்கோடியின் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி என்பதால், சுற்றுலாப் பயணிகளுக்கு இங்கு பகலில் மட்டும்தான் அனுமதி. ஆண் கடல், பெண் கடல் என இரண்டு கடல்கள் சங்கமிப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமும் பிரமிப்பும் ஏற்படும். இலங்கைக்கு 18 கடல் மைல் தொலைவில் இருக்கிறோம் என்பதை நினைக்கும்போது ஒரு த்ரில்லிங் ஏற்படும்.

மீனவர்களின் குடிசைகளைக் கடந்தால், இரண்டு பக்கக் கடலும் பரவசப்படுத்தும். இங்கு குளிப்பது ஆபத்தானது என்பதால், கடலில் கால் மட்டும் நனைப்பது நல்லது. தனுஷ்கோடி ரவுண்டானாவில் நின்றபடி சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் கடலைப் பார்ப்பது பேரின்பம்.

புயலால் அழிந்த நகரின் சாட்சியாக இன்றும் காட்சி தந்துகொண்டிருக்கிறது உருக்குலைந்த நிலையில் தேவாலயம். தங்கும் விடுதியோ, பெரிய உணவகங்களோ கிடையாது. சிறு உணவகங்கள் உண்டு. சங்கு, சிப்பிகளால் ஆன கைவினைப்பொருள்கள் கிடைக்கும். எல்லாவற்றையும்விட தனுஷ்கோடிக் கடற்கரையின் அழகு நம்மை வசீகரிக்கும்.

ராமநாதபுரம் மாவட்டம் செல்பவர்கள் இந்த 6 பீச்களுக்கும் போக மறக்காதீர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு