சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

ஆக்ரோஷமான கரடி: மூன்று விவசாயிகளின் முகத்தை சிதைத்த கொடூரம்!

கரடி
பிரீமியம் ஸ்டோரி
News
கரடி

இந்தப் பகுதியில் மசாலா விற்பனை செய்யும் வைகுண்டமணி என்பவர் 6-ம் தேதி சாலையில் பைக்கில் வந்தபோது கரடி வழிமறித்து காட்டுக்குள் இழுத்துச் சென்று தாக்கியிருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் கிராமத்தில் கரடியால் தாக்கப்பட்ட விவசாயிகளின் முகங்களைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ‘சிங்கம், புலிகூட இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ளாது’ என்று அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் மக்கள்!

தென்காசி மாவட்டம், கடையம் அருகே இருக்கும் கிராமம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு. விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்துக்குள் சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் அடிக்கடி புகுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி ஊருக்குள் புகுந்த முரட்டுக் கரடி ஒன்று வைகுண்டமணி, சைலப்பன், நாகேந்திரன் ஆகிய மூவரைத் தாக்கியதில் மூவரின் முகங்களும் சிதைந்ததுடன், இருவருக்குக் கண்பார்வையும் பறிபோயிருக்கிறது.

ஆக்ரோஷமான கரடி: மூன்று விவசாயிகளின் முகத்தை சிதைத்த கொடூரம்!

இந்தச் சம்பவத்தில் இரு கண்களும் பாதிக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விவசாயி நாகேந்திரன் என்பவரின் மகன் சங்கரநாராயணனிடம் பேசினோம். “வனவிலங்குகளால் எங்களுக்கு அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. சிறுத்தை ஊருக்குள் வந்து நாய், ஆடுகளைத் தூக்கிக்கொண்டு போய்விடும். வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க, இந்தப் பகுதியில் மலையடிவாரத்தில் முழுமையாக அகழி அமைக்கவும், சோலார் மின்வேலி அமைக்கவும் பலமுறை கோரிக்கை வைத்தும் வனத்துறை கண்டுகொள்ளவில்லை. அதனாலேயே இப்போது மூன்று பேரைக் கரடி தாக்கிவிட்டது” என்றவர் நடந்த சம்பவத்தை விளக்கினார்.

“இந்தப் பகுதியில் மசாலா விற்பனை செய்யும் வைகுண்டமணி என்பவர் 6-ம் தேதி சாலையில் பைக்கில் வந்தபோது கரடி வழிமறித்து காட்டுக்குள் இழுத்துச் சென்று தாக்கியிருக்கிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்றவர், ஊருக்குள் வந்து தகவல் சொல்லியிருக்கிறார். உடனே அங்கிருந்த என் அப்பா, சித்தப்பா உள்ளிட்ட சிலர் சம்பவ இடத்துக்குப் போயிருக்கிறார்கள். அப்போது எங்கள் சித்தப்பா சைலப்பனை கரடி தாக்கி இழுத்துச் சென்றிருக்கிறது.

ஆக்ரோஷமான கரடி: மூன்று விவசாயிகளின் முகத்தை சிதைத்த கொடூரம்!

தம்பியைக் கரடியிடமிருந்து காப்பாற்ற எங்கள் அப்பா பதற்றத்தோடு அருகில் போயிருக்கிறார். உடனே அவரை விட்டுவிட்டு, அப்பாவைப் பிடித்த கரடி நகத்தால் முகத்தில் பிராண்டியிருக்கிறது. அதில் அவருக்கு ரெண்டு கண்கள், மூக்கு, வாய் என முகமே சிதைந்துவிட்டது. எங்கள் சித்தப்பா சைலப்பனுக்கு ஒரு கண்ணும் மூக்கும் சிதைந்துவிட்டன. அவர்களின் முகத்தை மருத்துவர்களாலேயே பார்க்க முடியவில்லை... அவ்வளவு கோரமாக முகத்தை ஆக்கிவிட்டது கரடி” என்றார் கண்ணீருடன்.

இந்த கோரச் சம்பவம் குறித்த தகவல் பரவியதும் அந்த ஊரில் மக்கள் கூடினர். கரடியைச் சுட்டுப் பிடிக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான பி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் சாலைமறியல் போராட்டமும் நடந்தது. நான்கு மணி நேரம் நடந்த இந்தப் போராட்டம் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கைவிடப்பட்டது. அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்த பின்னரே மக்களிடம் நிம்மதி ஏற்பட்டிருக்கிறது.

நாகேந்திரன், சைலப்பன், செண்பக பிரியா
நாகேந்திரன், சைலப்பன், செண்பக பிரியா

இந்தச் சம்பவம் குறித்து முண்டந்துறை வனச்சரக துணை இயக்குநரான செண்பக பிரியாவிடம் கேட்டதற்கு, “பொதுவாக ஆட்களைப் பார்த்ததும் கரடி ஓடிமறைந்துவிடும். ஆனால், காலை நேரத்தில் கரையான் புற்றைத் தேடிவந்த கரடி எதற்காக வியாபாரியைத் தாக்கியது என்பது புரியவில்லை. அதே சமயத்தில் கரடி மிகவும் ஆபத்தானது... அதன் கால் நகங்கள் கூர்மையாக இருப்பதால், மனிதர்களின் தலைமீது காலைத் தூக்கிப்போட்டு, லேசாக இழுத்தாலே முகம் முழுவதும் சிதைந்துவிடும்.

அதனால் இது போன்ற ஆபத்தான விலங்குகள் வந்தால் அதைச் சத்தமிட்டு விரட்ட வேண்டுமே தவிர கம்புகளுடன் அருகில் செல்லக் கூடாது. பெத்தான்பிள்ளை குடியிருப்புப் பகுதியில் மொத்தமுள்ள 18 கி.மீ தூரத்தில் 15 கி.மீ தூரத்துக்கு சோலார் மின்வேலி அமைத்திருக்கிறோம். தேவையான இடங்களில் அகழியும் அமைத்திருக்கிறோம்” என்று முடித்துக்கொண்டார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, “கரடி கூச்ச சுபாவமுள்ள விலங்கு. அது இப்படி வெறிபிடித்ததுபோல நடந்துகொள்ளாது. விவசாயிகள் அதைத் தாக்க முயன்றதாலேயே அது இவ்வாறு நடந்துகொண்டிருக்கும். விலங்குகள் ஊருக்குள் புகுவதைத் தடுப்பது மட்டுமின்றி, அவ்வாறு வருகிற விலங்குகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வையும் விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும்” என்கிறார்கள்.

கரடி தாக்குதலில் தப்பிப்பிழைத்த விவசாயியான சங்கரபாண்டி, “மசாலா வியாபாரியைக் காப்பாற்ற நாங்க ஓடோடிப் போனோம். அப்போது கரடி எங்களையும் விரட்டியதால் வேகமாக ஓடினோம். அங்கிருந்த வாய்க்காலில் விழுந்துவிட்டஎன்னைக் கவனிக்காத கரடி, ரோட்டில் ஓடிய சைலப்பனைப் பிடித்தது. அவரைக் காப்பற்றப் போன நாகேந்திரனையும் தாக்கியது. ஏற்கெனவே பலமுறை எங்கள் ஊருக்குள் சிறுத்தை, யானை, கரடி வந்திருக்கின்றன. ஆனால், இப்போது நடந்ததுபோல துயரமான சம்பவத்தை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை” என்றார் விலகாத அச்சத்துடன்.

ஆக்ரோஷமான கரடி: மூன்று விவசாயிகளின் முகத்தை சிதைத்த கொடூரம்!

இதனிடையே புதிய தமிழகம் கட்சித் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி, ‘‘அந்த கிராமத்தில் சோலார் மின்வேலியை முழுமையாக அமைப்பதுடன் அதன் உயரத்தையும் ஐந்து அடியாக அதிகரிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், சிகிச்சை பெற்று வீடு திரும்பியவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிநவீன பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் கண்கள், வாய், மூக்கு உள்ளிட்டவற்றை சீரமைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

விலங்கு - மனிதர் எதிர்கொள்ளலில், கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது நாம்தான்!