Election bannerElection banner
Published:Updated:

ஆலங்குளம்: ஹரிநாடார் பெற்ற 37,724 வாக்குகள்! - பூங்கோதையின் ‘ஹாட்ரிக்’ வெற்றி தகர்ந்த பின்னணி!

ஹரிநாடார்
ஹரிநாடார்

ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரிநாடார் பெற்ற கணிசமான வாக்குகளின் காரணமாக, தி.மு.க-வின் பூங்கோதை தோல்வியைச் சந்திக்கும் சூழல் உருவாகிவிட்டது.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தபோது ராக்கெட் ராஜாவின் தலைமையிலான பனங்காட்டுப் படை கட்சியின் சார்பாக ஹரிநாடார் முதன்முதலாக தேர்தல் களத்தில் இறங்கினார். அந்தத் தேர்தலில் பனங்காட்டுப் படை கட்சி 4,243 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

வாக்குச் சேகரிப்பு
வாக்குச் சேகரிப்பு

இந்தநிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவருவதற்கு வெகுநாள்களுக்கு முன்பாகவே பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில் ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதனால் ஆலங்குளம் தொகுதியில் முகாமிட்ட ஹரிநாடார், தினமும் ஒவ்வொரு கிராமமாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கழுத்தில் தங்க நகைகளை அணிந்து நகைக்கடைபோலவே நடமாடிய ஹரிநாடாரை பொதுமக்கள் ஆரம்பத்தில் வேடிக்கையாகவே பார்க்கத் தொடங்கினார்கள். ஆனால், அவரது நடவடிக்கை மற்றும் வாக்குறுதிகளால் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதலில் கவரப்பட்டார்கள். அதனால் அவருடன் எப்போதும் இளைஞர்கள் கூட்டம் செல்லத் தொடங்கியது.

ஹரி நாடார் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு - என்ன நடந்தது?

பின்னர், பெண்களின் கவனமும் அவரது பக்கம் திரும்பியது. ஹரிநாடார் அணிந்திருக்கும் நகைகளைப் பார்ப்பதற்காகக் கூடிய பெண்கள் கூட்டமும் அவரது ஆதரவாளர்களாக மாறத் தொடங்கியதை எதிரணி வேட்பாளர்கள் கணிக்கவில்லை. வீடு விடாகச் சென்று அவர்களோடு பேசி வாக்குச் சேகரித்த ஹரிநாடாருக்கு இளைஞர்கள் மட்டுமல்லாமல் முதியவர்கள்கூட ஆதரவாளர்களாக மாறினார்கள்.

பனங்காட்டுப்படை கட்சியின் தலைவரான ராக்கெட் ராஜா, ஹெலிகாப்டரில் வந்து ஹரிநாடாருக்காக ஆலங்குளம் தொகுதிக்குள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனால் தொகுதிக்குள் அவருக்கான செல்வாக்கைக் கூட்டியது. ஆரம்பத்திலிருந்தே ஹரிநாடாரை கவனத்தில் கொள்ளாமலும், அவரைப் போட்டியாளராகவே கருதாமலும் இருந்த தி.மு.க-வின் பூங்கோதையும், அ.தி.மு.க-வின் மனோஜ் பாண்டியனும் சுதாரித்துச் செயல்படுவதற்கு முன்பாகத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

தோல்வியடைந்த பூங்கோதை
தோல்வியடைந்த பூங்கோதை

இந்தத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடார் 37,724 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வின் வாக்குகளைப் பாரபட்சமின்றி அவர் பிரித்தபோதிலும், தி.மு.க செல்வாக்கு மிகுந்ததாகக் கருதப்படும் பல கிராமங்களில் ஹரிநாடாருக்குக் கூடுதல் வாக்குகள் கிடைத்தன. அது ஆலங்குளம் தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்த பூங்கோதையின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது.

பனங்காட்டுப் படை கட்சியின் சார்பாக ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிட்டு ஹரிநாடார் பெற்றுள்ள வாக்குகள் காரணமாக தி.மு.க வேட்பாளர் பூங்கோதை 3,539 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பது தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சிடைய வைத்துள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு