அரசியல்
Published:Updated:

சர்ச்சை நாயகனுக்கு சவால் பதவி!

பீலா ராஜேஷ் - ராஜேஷ் தாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பீலா ராஜேஷ் - ராஜேஷ் தாஸ்

தமிழக காவல் துறையில் டி.ஜி.பி சட்டம்-ஒழுங்கு பதவிக்கு அடுத்து, கூடுதல் டி.ஜி.பி சட்டம்-ஒழுங்கு பதவிக்குக் கடும் போட்டி நிலவுகிறது.

“அணியிலேயே இடம்பெறாதவர், கடைசி நேரத்தில் கேப்டனாகக் களமிறங்கினால் அந்த அணியினரின் மனநிலை எப்படியிருக்கும்... அப்படியொரு நிலைதான் தமிழக சட்டம்-ஒழுங்கு காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது.” - தமிழக காவல்துறையின் இன்றைய ஹாட் டாபிக் இதுதான். காரணம், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டிருக்கும் ராஜேஷ் தாஸ்!

தமிழக காவல் துறையில் டி.ஜி.பி சட்டம்-ஒழுங்கு பதவிக்கு அடுத்து, கூடுதல் டி.ஜி.பி சட்டம்-ஒழுங்கு பதவிக்குக் கடும் போட்டி நிலவுகிறது. அதிகாரம்மிக்க பதவி அது. ஓராண்டாக அந்தப் பதவியிலிருந்த ஜெயந்த் முரளி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாறுதல் செய்யப்பட்ட பிறகு, மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்த ராஜேஷ் தாஸ், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷின் கணவர் என்பது கூடுதல் தகவல்.

இந்த நியமனம் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள் சிலர், “தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்பு டி.ஜி.பி-யாக இருந்த விஜயகுமார், கடந்த வாரம் ஓய்வுபெற்ற பிறகு அந்த இடத்துக்கு யாரை நியமிக்கலாம் என்று முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நியமிக்கப்படும் அதிகாரிமீது சர்ச்சைகள் இருக்கக் கூடாது என்பதால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்த ஜெயந்த் முரளியை அந்தப் பதவிக்கு கொண்டுவர முடிவானது. தொடர்ந்து, காலியான அந்தப் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்று முடிவெடுக்க கமிட்டி அமைக்கப்பட்டது.

சர்ச்சை நாயகனுக்கு சவால் பதவி!

அந்த கமிட்டி நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, மூன்று பேர் பட்டியலைக் கொடுத்தது. அதில் ஆபாஷ்குமார், அபய்குமார் சிங், மஞ்சுநாதா ஆகியோர் பெயர்கள் அடுத்தடுத்து இருந்தன. இதையடுத்து, ஆபாஷ்குமாரை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக நியமிக்க முடிவானது. இந்தநிலையில் திடீரென கொங்கு அமைச்சர் ஒருவர் தரப்பிலிருந்து அந்தப் பதவிக்கு ராஜேஷ் தாஸை பரிந்துரைத்திருக் கிறார்கள். இதற்கு முதல்வர் தரப்பில் தயக்கம் காட்டியபோது, மற்றொரு கொங்கு அமைச்சர் ஒருவரும், தென் மாவட்ட அமைச்சர் ஒருவரும் சொல்லிவைத்தாற்போல ராஜேஷ் தாஸை பரிந்துரைத்திருக்கிறார்கள்.

அவர்கள் முதல்வர் தரப்பில், ‘சட்டமன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.பி-க்களை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் ராஜேஷ் தாஸ்தான் சரியானவர். வேறு அதிகாரிகள் சரிப்பட்டு வர மாட்டார்கள்’ என்றதுடன், கூடுதலாக சில விஷயங்களையும் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்தே அந்தப் பதவிக்கு ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டார்” என்றார்கள்.

அதேசமயம், “கடந்த காலங்களில் நிறைய சர்ச்சைகளில் சிக்கியவர் ராஜேஷ் தாஸ். ‘தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சரியில்லை’ என்று எதிர்க்கட்சிகள் பிரச்னை கிளப்பிவரும் நிலையில், அந்தப் பதவிக்கு சர்ச்சைக்குரிய ஒருவரை நியமிக்கலாமா?” என்று காவல்துறைக்குள்ளேயே முணுமுணுப்பு எழுந்திருக்கிறது. இது குறித்தும் மூத்த காவல்துறை அதிகாரிகள் சிலர் நம்மிடம் பேசினார்கள்.

“1989-ம் ஆண்டு ஐ.பி.எஸ் பேட்ஜ் அதிகாரியான ராஜேஷ் தாஸ், ஒடிசாவைச் சேர்ந்தவர். சென்னையில் இவர் இணை ஆணையராகப் பணியாற்றியபோது சினிமாதுறையைச் சேர்ந்த ஒருவருக்கு சிவில் விஷயத்தில் உதவி செய்தார் என்று சர்ச்சை எழுந்தது. சென்னையில் கூடுதல் கமிஷனராகப் பணியாற்றியபோது பத்திரிகையாளர்களுடன் மோதல் குற்றச்சாட்டில் சிக்கி, இடமாற்றம் செய்யப்பட்டார்.

சர்ச்சை நாயகனுக்கு சவால் பதவி!

தென்மண்டல ஐ.ஜி-யாக இவர் பணியாற்றியபோது, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தை சுமுகமாகக் கையாளாமல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மிரட்டியதாகப் புகார் எழுந்தது. கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையிலும் தடியடி, நூற்றுக்கணக்கானோர்மீது வழக்கு என அதை பூதாகரமாக்கினார். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜையின்போது துப்பாக்கிச்சூடு நடந்து, உயிரிழப்பு ஏற்பட்டபோதும் அங்கு பணியிலிருந்தவர் ராஜேஷ் தாஸ்தான்.

மற்றொருபுறம் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவாக இருப்பதாக இவர்மீதான புகார்கள் கோட்டைக்குச் சென்றன. மேலும், சிவில் வழக்குகளில் இவர் தலையிடுவதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. அதைத் தொடர்ந்துதான் தென்மண்டல ஐ.ஜி பொறுப்பிலிருந்து அவர் மாற்றப்பட்டார். இப்படி, சர்ச்சை மனிதராக வலம்வந்த ராஜேஷ் தாஸ், கடைசியாக மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி-யாக பணியாற்றினார். அங்கும் இவர் பெயர் ரிப்பேர்தான்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, அத்தியாவசியப் பொருள் களுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், தமிழகம் முழுவதும் மதுபானங்கள் பிளாக்கில் சர்வ சாதாரணமாக விற்கப்பட்டன. தமிழகம் முழுவதும் ஏராளமான டாஸ்மாக் கடைகளிலிருந்த மொத்த மதுபானங்களும் இரவோடு இரவாக, கட்சியினர் உள்ளிட்ட தனியாருக்கு கைமாற்றிவிடப்பட்டு, ஆறு மடங்கு அதிகம் விலைவைத்து விற்கப்பட்டன. இதில் பல நூறு கோடி ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய மதுவிலக்குத்துறை, பெயருக்கு சில வழக்குகளைப் போட்டு ஒதுங்கிக்கொண்டது. ‘குற்றங்களைத் தடுக்கத் தவறிவிட்டார்’ என்று இதன் பின்னணியிலும் ராஜேஷ் தாஸ் பெயர் அடிபட்டது. இப்போது சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி பதவியில் என்னவெல்லாம் செய்யப்போகிறாரோ என்று தெரியவில்லை” என்றார்கள்.

கடந்த காலங்கள் ‘கடந்த’ காலங்களாகவே போகட்டும். சட்டம்-ஒழுங்கு என்பது மக்களின் பாதுகாப்புடன் தொடர்புடைய அதி முக்கியத்துறை. இந்தப் பதவியிலாவது ராஜேஷ் தாஸ் ‘முத்திரை’ பதிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!