Published:Updated:

`உங்கள் பெயர் இல்லை; பணம் தர இயலாது!'- அரசின் திட்டத்தில் வீடு கட்டியவர்களைப் பதறவைத்த அதிகாரிகள்

வீடுகள் கட்டிக்கொண்டிருக்கும்போதே திட்டம் காலாவதி ஆகிவிட்டதாக அதிகாரிகள் கைவிரித்ததால், நூற்றுக்கணக்கான பயனாளிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

house
house ( prasasnna venkatesh )

மத்திய அரசின் திட்டங்களுள் ஒன்றான பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் முன்பணம் பெற்று வீடுகள் கட்டிக்கொண்டிருக்கும்போதே திட்டம் காலாவதி ஆகிவிட்டதாக அதிகாரிகள் கைவிரித்ததால், நூற்றுக்கணக்கான பயனாளிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

pandiyan
pandiyan
prasanna

நாகை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 2016-17-ம் ஆண்டு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கான நிதியும் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு 104 மூட்டை சிமென்ட் மற்றும் 300 கிலோ கம்பியும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமே வழங்கிவிட்டு அதற்கான தொகையைக் கழித்துக்கொண்டு மீதித் தொகையை வீடுகட்டும் நிலைக்கேற்ப வழங்கப்படுவது வழக்கம்.

முத்ரா லோன் பயன்பாட்டில் தமிழகம் முதலிடம்!

அதன்படி கடந்த ஜனவரி மாதம் ஒரு பகுதி சிமென்ட் மற்றும் கம்பி வழங்கப்பட்டுள்ளது. அவற்றைக் கொண்டு வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட பயனாளிகள் லிண்டல் மட்டம் வரை வேலையை முடித்துள்ளனர். மேற்கொண்டு வீட்டைக் கட்டி முடிக்க தொடர்புடைய அதிகாரிகளிடம் மீதித் தொகையைக் கேட்டபோது, "இத்திட்டத்தில் உங்கள் பெயர் விடுபட்டுவிட்டது. இனி பணம் ஏதும் தர இயலாது" என்று கைவிரித்துள்ளனர்.

government office
government office
prasanna venkatesh

இதுகுறித்து ஆறுபாதி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை சந்தித்தோம். "இத்திட்டத்தில் நாங்கள் வீடு கட்டிக் தருகிறோம் என்று அதிகாரிகளுக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர் கேட்டார். அது தரமாக இருக்காது என்பதால் நானே கட்டிக்கொள்வதாகக் கூறிவிட்டேன். அதனால் எனக்கு முதல்கட்டமாக 30 மூட்டை அம்மா சிமென்ட், 120 கிலோ கம்பி, ரூ.26,000 ரொக்கமும் கொடுத்தார்கள். கடந்த ஜனவரி மாதம் அதை வாங்கி வீட்டை கான்கிரீட் மட்டம் வரை கட்டி முடிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டேன். மீதித் தொகையைக் கேட்டபோது 'இத்திட்டத்தில் உங்கள் பெயர் விடுபட்டுவிட்டது. இனி நாங்கள் எதுவும் செய்ய இயலாது' என்றுக் கூறிவிட்டார்கள். இதற்கு மேல் என்னால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படி நடக்குமென தெரிந்திருந்தால் குடிசை வீட்டிலேயே வாழ்ந்திருப்பேன். நல்ல வீட்டுக்கு ஆசைப்பட்டு நடுத்தெருவில் நிற்கிறேன். என்னைப்போலவே நூற்றுக்கணக்கான ஏழைகள் அரைகுறையாய் வீட்டைக் கட்டிவிட்டு அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாமல் தவிக்கிறார்கள்" என்றார்.

இதுகுறித்து செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அருணிடம் விளக்கம் கேட்டோம். "மத்திய அரசின் திட்டமான பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பாண்டியன் மட்டுமல்ல. இந்த ஒன்றியத்தில் 264 பயனாளிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளது. காரணம் அவர்கள் உரிய நேரத்தில் வீடுகளைக் கட்டி முடிக்காததுதான். அவர்களுக்கு மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்துக் கொடுத்தும் உரிய நேரத்தில் கட்டி முடிக்கவில்லை.

house
house
prasanna venkatesh

காலக்கெடு முடிந்ததால் அவர்கள் பெயர் தானாகவே ஆன்லைனில் விடுபட்டுவிட்டது. இது மத்திய அரசின் திட்டம். இனி நாங்கள் விடுபட்ட ஒவ்வொருவரிடமும் மனுக்கள் பெற்று, அதை, சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அங்கிருந்து டெல்லிக்கு அனுப்பி மீண்டும் அனுமதி பெற்று திட்டத்தைத் தொடர வைக்க வேண்டும். அப்பணியைத் தற்போது செய்துகொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம் பயனாளிகள்தானே ஒழிய நாங்கள் அல்ல. மீண்டும் அவர்களுக்குரிய பணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்" என்று முடித்தார்.