வழக்கமாக ஒருவர் தன்னிடமிருக்கும் பணத்தைப் பிறருக்கு வாரிவழங்குவது, அள்ளி வீசுவது போன்ற காட்சிகளைத் திரைப்படங்களில்தான் பார்த்திருப்போம். ஆனால், பெங்களூரில் ஒருவர் மேம்பாலத்திலிருந்து ரூபாய் நோட்டுகளைக் கீழே வீசி, கூட்ட நெரிசலை ஏற்படுத்தி போலீஸுக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

பெங்களூரில் கே.ஆர் மார்க்கெட்டிலுள்ள மேம்பாலத்தில் நடந்த இந்த சுவாரஸ்ய சம்பவத்தில், கழுத்தில் ஒரு பெரிய சுவர்க்கடிகாரத்தை மாட்டிக்கொண்டு கோட்-சூட் அணிந்துவந்த ஒருவர், கீழிருக்கும் மக்களை நோக்கி தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுகளை வீசுகிறார்.
மக்களும் அந்தப் பணத்தை எடுக்க அவசர அவசரமாக அங்குமிங்கும் ஓட, கூட்ட நெரிசலால் அந்த இடமே பரபரப்பானது. அதிலும் அந்த நபர் வீசியது 10 ரூபாய் நோட்டுகள்தான்.
அவர் வீசிய நோட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் 3,000 ரூபாய் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. அதேசமயம் அந்த நபர் எதற்காகப் பணத்தை வீசினார் என்பதும் தெரியவில்லை. விஷயமறிந்து போலீஸ் அங்கு வருவதற்குள்ளே அந்த நபர் தப்பித்துவிட்டார். இருப்பினும் அந்த நபர் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதாக, வழக்கு பதிவுசெய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.