Published:Updated:

மதங்களைக் கடந்தது பரதம்!

ஜாகிர் உசேன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜாகிர் உசேன்

இருபத்தெட்டு ஆண்டுகளாக நடனம் ஆடுகிறேன். எனக்கு ஆண்டாளைப் பிடிக்கும். எப்பொழுது ஆடினாலும் ஆண்டாளின் பாசுரங்களுக்கு அடிபணிந்தே ஆடுகிறேன்

இன்றைக்கும் ஜாகிர் உசேன் பரதத்தில் டாப் ஸ்டார். பரதக் கலைக்கு அதிகம் சம்பந்தமில்லாத பின்னணியில் இருந்து அவர் வந்திருப்பது பேராச்சரியம். சித்ரா விஸ்வேஸ்வரனின் மாணவராக இருந்து முன்னணி நடனக் கலைஞராக மாறியிருக்கிறார்.

“எங்க பெரியப்பா மத மறுப்பாளர்; மதமறுப்புத் திருமணமும் செய்து கொண்டார். எங்க பெரியம்மா அலர்மேல்மங்கையிடம்தான் நான் வளர்ந்தேன். பெரியப்பா பெரியார் பற்றிப் பேசுவார். பெரியம்மாவோ தீவிர வைணவர். அவரிடமிருந்து தான் எனக்கு பரதம் பற்றிய முதல் அறிமுகம் கிடைத்தது. பரதத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாக, பரதம் கற்பதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டு சென்னை வந்துவிட்டேன். நான் வானொலி இசைத்தட்டில் அறிந்திருந்த பாடகர்கள் மற்றும் நடனமேதைகளை ரத்தமும் சதையுமாக நாலடி தூரத்தில் பாடிப்பார்த்தும், ஆடிப்பார்த்தும் கண்டேன். அதிலிருந்து உற்சாகத்துடன் என் பரதம் தொடங்கியது.”

மதங்களைக் கடந்தது பரதம்!

“எப்படி உங்களை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்?”

“இருபத்தெட்டு ஆண்டுகளாக நடனம் ஆடுகிறேன். எனக்கு ஆண்டாளைப் பிடிக்கும். எப்பொழுது ஆடினாலும் ஆண்டாளின் பாசுரங்களுக்கு அடிபணிந்தே ஆடுகிறேன். சித்ரா விஸ்வேஸ்வரன்தான் எனக்கு பரதத்தின் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்தார். அவரைத் தாயாகவே நினைத்து வந்திருக்கிறேன். நூறு சதவிகிதம் வைணவ சம்பிரதாயத்தின்படிதான் நான் ஆடுகிறேன். ஆண்டாள் பாசுரங்களைக் கைக்கொண்டு ஆடுவதால் எந்த இந்துவும் என்னிடம் வருத்தப் பட்டதில்லை. மாறாக கைகளில் என்னை ஏந்திக் கொள்கிறார்கள். முஸ்லிம் என்பதற்காக நான் நாலைந்து மேடைகளில்தான் ஆடியிருக்க முடியும். ஆனால் இத்தனை வருடங்களாக அத்தனை பண்டிகைக் காலங்களிலும், டிசம்பர் சீசனிலும் ஆடிக் கொண்டிருக்கிறேன்.”

மதங்களைக் கடந்தது பரதம்!
மதங்களைக் கடந்தது பரதம்!

“இவ்வளவு காலமாகியும், பரதம் இன்றும் ஏன் மக்களுக்கு நெருக்கமான கலையாக இல்லை?”

“பரதக்கலை பழந்தமிழர் கலை. மரபு வழி வந்தது. இலக்கணத்திற்கு உட்பட்டது. நாம் நினைச்சிட்டா அதில் எதையும் புதுசா செய்திட முடியாது. எதுவும் புரியாது என்று இல்லை. நீங்களும் கொஞ்சம் மனசு வைக்கணும். நம்ம மக்கள் நல்ல விஷயம் கொடுத்தா கண்டிப்பா ஏத்துக்குவாங்க. நாம் என்னவோ மக்களுக்குப் பிடிக்காது, புரியாதுன்னு நினைச்சிக்கிட்டு கலைகளைத் தூக்கிட்டு வந்திடக்கூடாது. தியாகராஜ ஸ்வாமி உஞ்சவிருத்தி செய்யும்போது பக்தி பிரவாகத்தில் பாடிக்கிட்டுப் போனதைக் கச்சேரி பண்ணலாம்னு பின்னாடி வந்த நாம் நினைக்கிறோமே தவிர, அவர் கச்சேரிக்காகப் பாடவே இல்லை என்பதை மறந்துவிடுகிறோம். எல்லோருக்கும் புரிவது மாதிரி கலையை செய்வதற்கு கலைஞர்களுக்கு ஒரு கடமையும் இருக்கு. ஆக, ஒரு கலைஞனோட கடமை எங்கே நல்லது இருந்தாலும் அதை எடுத்துக்கணும்.”

“இசை, பரதம் எல்லாம் குறிப்பிட்ட சமூகம் வசம் இருக்கு என்ற குற்றச்சாட்டு பற்றி...?”

“அவங்கதான் தொடக்கத்திலேயிருந்தே கலையை வளர்த்து எடுத்திட்டு வந்திருக்காங்க. அப்போ அதற்கான உரிமை அவர்களுக்குக் கூடுதலாக இருக்கணும்னு விரும்புறாங்க. ஆனால் இப்போ பரதத்தில் எல்லாப் பிரிவு மக்களும் வந்தாச்சு. பாட்டு, இசையில் அவங்கதான் அதிகம் இருக்காங்க. யார் வந்தாலும் இங்கே நல்ல பெயர் எடுப்பது கஷ்டம். திறமை இருந்தாதான் நிக்க முடியும்.”

மதங்களைக் கடந்தது பரதம்!
மதங்களைக் கடந்தது பரதம்!

“பரதத்தில் இருக்கும் வாழ்க்கை திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்குதா?”

“நான் எனக்கான அங்கீகாரம்னு பெருசா எதையும் நினைக்கவே மாட்டேன். ஆனால் என் மனசுக்கும், என் நடனத்தை உட்கார்ந்து பார்க்கிறவங்க மனசுக்கும் ஒரு பரிவர்த்தனை நடக்கிறது இல்லையா... அதைத்தான் அங்கீகாரம்னு நினைச்சுப்பேன். நான் எப்பவும் கலையை வைத்து அரசியல் பண்ணக் கூடாதுன்னு சொல்வேன். அப்படி இருந்தால்தான் மேலான நிலைக்கு எழும்பிப் போக முடியும்.”