Published:Updated:

``மோடி எங்கள் பெயர்களைக் குறிப்பிடாததில் வருத்தமில்லை'' - வில்லிசைக் கலைஞர் பாரதி திருமகன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்பா `கலைமாமணி' சுப்பு ஆறுமுகத்துடன் பாரதி திருமகன்
அப்பா `கலைமாமணி' சுப்பு ஆறுமுகத்துடன் பாரதி திருமகன்

``பகவத் கீதை என்று யாராவது சொன்னால், எப்படி இந்தியா பெருமைப்படுமோ, அதே மாதிரி வில்லுப்பாட்டு என்று சொன்னாலே நாங்கள் சந்தோஷப்படுவோம்.''

வில்லுப்பாட்டு என்றாலே, 70 வருடங்களாக இந்தத் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கிற கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகமும் அவரின் மகள் கலைமாமணி பாரதி திருமகனும்தான் நம் நினைவுக்கு வருவார்கள். சென்ற, `மன் கி பாத்'தில் பிரதமர் மோடி வில்லுப்பாட்டு பற்றியும், கதை சொல்வதன் முக்கியத்துவம் பற்றியும் பேசியிருந்ததையொட்டி, பாரதியிடம் பேசினோம்.

`கலைமாமணி' பாரதி திருமகன்
`கலைமாமணி' பாரதி திருமகன்

``எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு வேண்டியது பாராட்டுதான். அப்படிப்பட்ட பாராட்டு `மன் கி பாத்'தில் நம் பிரதமர் வாய் வழியாக, எங்கள் வில்லுப்பாட்டு கலைக்குக் கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. வில்லுப்பாட்டு, சமுதாயத்துக்குச் செய்கிற சேவையைப் பற்றியெல்லாம் சொன்னதைக் கேட்டு, வில்லுப்பாட்டில் தமிழகத்தின் தலைசிறந்த கலைஞரான என் அப்பாவுக்கும் அவ்வளவு ஆனந்தம்.

``ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையது எங்கள் கலை. கதைசொல்லும் கலைகளுக்கெல்லாம் தாய் வில்லுப்பாட்டுதான். `உரையிடை இட்ட பாட்டுடை செய்யுள்' என்ற தொல்காப்பிய வரிகளே இதற்குச் சாட்சி.

இந்தக்கலை கேரளாவிலும் தமிழகத்திலும்தான் இருக்கிறது. கேரளத்தில் இதற்குப் பெயர் வில்லடிப்பாட்டு. தமிழகத்தில் வில்லுப்பாட்டு. பிரதமர் அழகாக `வில்லுப்பாட்' என்று நம் தமிழகத்தின் வில்லுப்பாட்டைத்தான் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு, சில கதைசொல்லிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார். மிக்க மகிழ்ச்சி.

கணவர் மற்றும் மகனுடன்...
கணவர் மற்றும் மகனுடன்...
Vikatan

பிரதமர், கதை சொல்லும் கலையை வளருங்கள் என்று `மன் கி பாத்'தில் பேசியிருந்தார். அந்தக் கடமை நம் வீட்டுப் பெண்களையே சேரும் என்பது என் கருத்து. பெண்களே, அதாவது அம்மாக்களே உலகின் ஆகச்சிறந்த கதைசொல்லிகள். பிள்ளைகளுக்கு சரித்திரங்களைக் கதைகளாகக் கடத்த முடிந்தவர்கள் அவர்கள்தாம். அம்மாவிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள் இங்கே சரித்திரமாகியிருக்கிறார்கள். இதற்கு உலகம் அறிந்த உதாரணம் நம் தேசப்பிதா காந்தி. தன் அம்மா சொன்ன அரிச்சந்திரன் கதைதான், தன்னை உண்மையின் பாதையில் நடத்தியது என்பதை, அவருடைய சத்திய சோதனையில் அவரே பதிவு செய்திருக்கிறார். பிரதமர் சொன்னதுபோல, இன்றைய அம்மாக்கள் கதை சொல்லும் கலையை வளர்த்துக்கொள்ளுங்கள். ஊடகங்களும் கதை சொல்லும் கலையை வளர்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். காந்திஜி பிறந்த நாளில் அதிரடி திரைப்படம் போடுவதற்குப் பதில், நம் கலைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால், இளைய தலைமுறையினர் மண்ணின் கலைகள் பற்றித் தெரிந்துகொள்வார்களே'' என்று வேண்டுகோள் வைக்கிற பாரதி திருமகன் கொஞ்சம் பர்சனலும் பகிர்ந்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``6 வயதில் பாட்டுக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். என்னுடைய 7-வது வயதில் அப்பாவுடன் இணைந்து வில்லுப்பாட்டிசைக்க ஆரம்பித்தேன். திருமணம் என்று வந்தபோதும், என் உயிரான வில்லுப்பாட்டை மட்டும் எக்காரணம் கொண்டும் விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால், என்னைப் பெண் பார்க்க வந்தவரை ஒரு பாட்டுப் பாடச் சொன்னேன். அவர் தியாகராஜ கீர்த்தனையை `ராமா' என்று ஆரம்பிக்க இவருக்கு என் அப்பாதான் மாமா என்று முடிவெடுத்தேன் என்று சிரிப்பவரிடம், வில்லுப்பாட்டில் மூத்த கலைஞரான அப்பாவின் பெயரை மோடி குறிப்பிடப்படாததில் உங்களுக்கு வருத்தமா என்றோம்.

``உண்மையாகவே எங்களுக்கு அதில் வருத்தமில்லை. ஏனென்றால், வில்லுப்பாட்டுக்குள் நாங்கள் இருக்கிறோம். அதுதான் சந்தோஷம். பகவத் கீதை என்று யாராவது சொன்னால், எப்படி இந்தியா பெருமைப்படுமோ, அதே மாதிரி வில்லுப்பாட்டு என்று சொன்னாலே நாங்கள் சந்தோஷப்படுவோம். வில்லுப்பாட்டின் பெயரால் யாரைக் குறிப்பிட்டாலும், அந்த மகிழ்ச்சியில் எங்களுக்கும் பங்கிருக்கிறது'' என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

எம்.முரளி
எம்.முரளி
`ரசிக்கவைக்கும் வில்லுப்பாட்டு; கதைசொல்லி வித்யா!' - `மன்-கி-பாத்' உரையில் பிரதமர் மோடி

வில்லுப்பாட்டு கலையையும் வில்லுப்பாட்டு கலைஞர்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிற `கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' முரளியிடம் இதுகுறித்துப் பேசும்போது, ``வில்லுப்பாட்டு உலகம் முழுக்க அறிந்த கலை. அதை நம் பிரதமர் `மன் கி பாத்'தில் குறிப்பிட்டுப் பேசியிருப்பது கூடுதல் பெருமை என்றுதான் சொல்வேன். பிரதமரின் பேச்சால் அந்தக் கலையின் பூக்கள் இப்போதுதான் தெரிய ஆரம்பித்திருக்கிறது. கூடிய விரைவில் இந்தக் கலையின் வேர்களும் தெரிய ஆரம்பிக்கும். அப்போது இந்தக் கலைக்குச் சொந்தக்காரர்களாக அத்தனை தமிழர்களும் பெருமைப்படுவோம்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு