Published:Updated:

“பாரதியைப் பரப்புவோம்!”

பாரதி
பிரீமியம் ஸ்டோரி
பாரதி

பாரதி நினைவின் நூற்றாண்டு

“பாரதியைப் பரப்புவோம்!”

பாரதி நினைவின் நூற்றாண்டு

Published:Updated:
பாரதி
பிரீமியம் ஸ்டோரி
பாரதி

ஓவியம்: ரவி

‘தமிழ், பாரதியால் தகுதிபெற்றது’ எனப் பாவேந்தர் பாரதிதாசன் புகழ்ந்த மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நிறைவு இது. பாரதி குறித்த தங்கள் ஆர்வம், ஆய்வுகள், பாரதியைப் பரப்புவதற்குச் செய்யவேண்டியவை குறித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள், பாரதி ஆய்வாளர்கள் மூவர்.

சீனி விசுவநாதன், `கால­வ­ரி­சைப்­ப­டுத்­தப்­பட்ட பாரதி படைப்­புகள்’ (12 பெரிய தொகு­தி­கள் - 1998–2010); `கால­வ­ரி­சையில் கண்­ட­றிய வேண்­டிய பாரதி படைப்­புகள்’ (2015)

“1962-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் பாரதியின் 81-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டபோது பாரதியார் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட வேண்டும் என்று விரும்பினேன். ராஜாஜி, பாரதிதாசன், வெ.சாமிநாத சர்மா, ப.ஜீவானந்தம், பாலதண்டாயுதம், சுத்தானந்த பாரதி ஆகியோரை நேரில் சந்தித்து, தொகுப்பு நூலுக்காக அவர் களுடைய கட்டுரைகளைச் சேர்த்துக்கொள்ள அனுமதி பெற்றேன். ‘தமிழகம் தந்த மகாகவி’ என்ற அந்த நூல் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

60 ஆண்டுக்காலப் பாரதி தேடலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியோ, பதிப்பித்தோ இருந்தபோதிலும், என் தலையான பணியாகக் கருதுவது `கால­ வ­ரி­சைப்ப­டுத்­தப்­பட்ட பாரதி படைப்­புகள்’ என்ற 12 தொகுதிகளை வெளியிட்டதைத்தான். இந்தக் காலவரிசையில் நூல் தொகுதிகளில் சேராமல் விடுபட்டனவற்றைத் தேடிக் கண்டறிந்து இந்த நூல் தொகுதியை நிறைவு செய்ய வேண்டும் என்று உணர்கிறேன்.

“பாரதியைப் பரப்புவோம்!”

இன்னமும் பாரதியைக் கவிஞர் என்ற நிலையிலேயே பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். பாரதி பத்திரிகையாளராகப் பணிபுரிந்துள்ளார்; மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்திருக்கிறார்; தமிழில் புலமை பெற்றது போலவே, ஆங்கிலத்திலும் திறம்பெற்றவராகக் காட்சிதருகிறார். தம் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். The Fox with Golden Tail என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார். இப்படிப் பல்வேறு கோணங்களில் வைத்து மதிப்பிடப்பட வேண்டியவர் பாரதி.”

பேராசிரியர் சா. பாலுசாமி, `தம்பி, நான் ஏது செய்வேனடா?’ (2002)

“பாரதி எழுதிய கதைகள், கட்டுரைகள், பத்திரிகைச் செயல்பாடுகள், அரசியல் தொடர்புகள் ஆகியவை விரிவான ஆய்வுத் தளத்துக்குக் கொண்டு வரவேண்டும். ஒப்பியல், உளவியல், இந்திய சமய, ஞானம் உள்ளிட்ட பல்வேறு நோக்குகளில் அவை ஆய்வு செய்யப்பட வேண்டும். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், உளவியல், பின்நவீனத்துவம் எனக் கோட்பாட்டு ரீதியிலும் ஆழமான பாரதி ஆய்வுகள் நடந்திருக்கின்றன; நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

பாரதி குறித்துப் பல்வேறு தரப்பினரிடமிருந்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, கேள்வி - பதில் வடிவில் பாரதியை அறிமுகப்படுத்தும் நோக்கில், பா.இரவிக்குமார் – இரா.பச்சியப்பன் ஆகியோரின் கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் `தம்பி, நான் ஏது செய்வேனடா?’ என்ற தலைப்பில் 2002-ல் நூலாக வெளிவந்தது. பள்ளிக்காலத்தில் தொடங்கிய பாரதி, அதற்கு முன்பும் பின்பும் பாரதி குறித்து நிறைய எழுதிவந்திருக்கிறேன். சிறு வயதிலிருந்தே பாரதிமீதான ஈர்ப்பு அதிகரித்துக்கொண்டே போனது. அதனால்தான் பாரதிபுத்திரன் என்ற பெயரில் கவிதைகளை எழுதுகிறேன்.”

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்,

‘பாரதி விஜயம் - மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள்’ பதிப்பாசிரியர்

“தமிழ்நாட்டில் நிலப்பிரபுத்துவ வாழ்க்கையை உடைத்து எறிந்துவிட்டு, ஒரு ஜனநாயக மரபை நோக்கி நகர்ந்த முதல் கவிஞன் பாரதிதான். தாய்மொழிக் கல்வி, பெண் விடுதலை, பத்திரிகைச் சுதந்திரம், அறிவியல் மனோபாவம், அயல்நாட்டு அரசியல் சார்ந்து அனைத்துக்கும் முன்னோடியாக தமிழில் பாரதி விளங்குகிறார். இந்தப் பின்னணியில், ஜனநாயக ரீதியில் அவருடைய படைப்புகள் எல்லோரையும் போய்ச் சேர்ந்திருக்கின்றனவா? மிகக்குறைந்த விலையில், பாரதியின் படைப்புகளுக்கு அரசாங்கப் பதிப்பு இதுவரை இல்லை. இந்த நினைவு நூற்றாண்டின்போது எளிய பதிப்புகளை அரசாங்கமே வெளியிடலாம்.

சீனி விசுவநாதன், பேராசிரியர் சா. பாலுசாமி, கடற்கரய்
சீனி விசுவநாதன், பேராசிரியர் சா. பாலுசாமி, கடற்கரய்

பாரதியைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர் வாழ்ந்த இல்லத்துக்குப் போனால், அவரைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல அங்கு எந்த ஏற்பாடும் இல்லை. பாரதிக்கென்று தமிழ்நாட்டில் தனி ஆய்வு நூலகம் கிடையாது. பாரதி ஆய்வுகளில் போதாமையும் நிலவுகின்ற சூழலில், இவைபோன்ற அடிப்படை விஷயங்களும் கவனிப்பின்றிக் கிடக்கின்றன. பாதித் தரவுகள் ஏற்கெனவே அழிந்துவிட்டன; மீதித் தரவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த பாரதியின் இந்த நினைவு நூற்றாண்டில் பாரதியியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் நோக்கிலான அறிவிப்புகள், நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்!”