Published:Updated:

கொரோனா அச்சம் - தனி விமானத்தில் வெளிநாடு பறக்கும் தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள்!

தனி விமானம்
தனி விமானம்

நடிகர்கள் ஒருபுறம் பயணமாவதைப் போலவே குஜராத், மும்பை, டெல்லி போன்ற இடங்களிலுள்ள சில முக்கியத் தொழில் அதிபர்களும் தனியார் விமான நிறுவனங்களிடம் சிறிய ரக விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருப்பதால், தங்கள் உயிரைப் பணயம்வைக்க விரும்பாதவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக பணவசதி படைத்த பலரும் தனி விமானங்களை இதற்காகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

கொரோனா நோயாளிகள்
கொரோனா நோயாளிகள்
Representational Image

இந்தியாவில் கடந்த இருபது நாள்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக வட இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் காரணமாக மருத்துவமனைகளெல்லாம் நிரம்பியுள்ளன. மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் உயிர்விடும் பரிதாபங்கள் தினமும் நடந்துவருகின்றன. குறிப்பாக மும்பை, டெல்லி, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிக வசதிபடைத்த மருத்துவமனைகளில்கூட கொரோனா நோயாளிகளுக்கு இடம் கிடைக்காத நிலையும் உள்ளது.

ஒருவேளை, மருத்துவமனையில் இடம் கிடைத்தாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை பெரும்பாலான மருத்துவமனைகளில் இருப்பதால், கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது. டெல்லியிலுள்ள முக்கிய வி.ஐ.பி-க்களின் குடும்பத்தினருக்கே, மருத்துமவனைகளில் இடம் கிடைக்காமல் திண்டாடியிருக்கிறார்கள்.

அதேபோல்,தொழிலதிபர்களை அதிகம்கொண்ட குஜராத் மாநிலத்திலுள்ள பல கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத நிலை எனச் சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. இந்தச் சுகாதாரப் பேரிடரில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க வசதி படைத்த பலரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவருவதாக, பிரபல பொருளாதார பத்திரிக்கை சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம்
கொரோனா வைரஸ் தாக்கம்
vikatan

குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் பலரும் தற்போதுள்ள நிலையில் இந்தியாவில் இருப்பது தங்களுக்குச் சிக்கலாகிவிடும் என்பதால், தனியார் விமான நிறுவனங்களை அணுகி மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணமாகிவருகிறார்களாம். இதற்காக, பிரபல டிராவல்ஸ் ஏஜென்ட்கள் மூலம் புக் செய்துவருகிறார்கள். நடிகர்கள் ஒருபுறம் பயணமாவதைப்போலவே குஜராத், மும்பை, டெல்லி போன்ற இடங்களிலுள்ள சில முக்கியத் தொழில் அதிபர்களும், தனியார் விமான நிறுவனங்களிடம் சிறிய ரக விமானங்களை வாடைக்கு எடுத்திருக்கின்றனர். இந்தியாவில் பொதுப்பயன்பாட்டு விமானங்களுக்குப் பல நாடுகள் தற்போது தடைவிதித்துவருகின்றன. தனி விமானத்தைப் பயன்படுத்தும்போது, இது போன்ற சிக்கல்கள் குறைவு என்பதால், தனியாக விமானங்களை வாடைக்கு எடுக்க விரும்புகின்றனர்.

தொழிலதிபர்கள் பலர் துபாய், லண்டன், ஹாங்காங், உள்ளிட்ட நாடுகளைத் தேர்ந்தெடுத்து அங்கு பயணமாகிவருகிறார்கள். இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தனி விமானங்களை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு தொடர் புக்கிங்குகள் வந்துள்ளன. துபாய் நாட்டுக்குத் தனி விமானத்தில் பயணம் மேற்கொள்ள பத்து லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சில விமானங்களில் இந்தத் தொகை கூடுதலாகவும் இருக்கிறது.

விமானம்
விமானம்

அதேநேரம் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டுமானால், சாதாரண விமானங்களுக்குச் செலுத்தப்படும் கட்டணத்தைப் போன்று பத்து மடங்கு கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஆனால்,பண வசதி படைத்த பலரும் இந்தத் தொகையை ஒரு பொருட்டாகக் கருதாமல் வெளிநாடுகளுக்குப் பறந்துவருகிறார்கள்!

அடுத்த கட்டுரைக்கு