Published:Updated:

உயிருக்குப் போராடும் மகள்; கிட்னி தர மறுக்கும் பெற்றோர் - அதிர்ச்சிப் பின்னணி

சத்யா கோபாலன்

'இதை இறப்பு என்று சொல்வதைவிட, கொலை என்றுதான் சொல்ல வேண்டும்' என அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

கிட்னி தானம்
கிட்னி தானம்

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் 2019-ம் ஆண்டில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகின்றனர். பெண் குழந்தை பிறப்பதைப் பெருமையாக நினைக்கும் பெற்றோர்கள் இருக்கும் இதே நாட்டில், பெண் குழந்தைகளைப் பாரமாக நினைக்கும் பெற்றோர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி
பாதிக்கப்பட்ட சிறுமி
The statesman

பீகார் மாநிலம் ஷேய்க்புரா மாவட்டத்தில் உள்ள அவ்ஜிலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கஞ்சன் குமாரி என்ற 16 வயது சிறுமி. அரசுப் பள்ளியில் படிக்கும் இந்தச் சிறுமி, மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிப்பதற்காக சமீபத்தில் தேர்வு எழுதி முதல் இடம் பெற்றுள்ளார். ஆனால், வெற்றிபெற்ற மகிழ்ச்சி நீண்ட நாள்களுக்கு நீடிக்கவில்லை. கஞ்சன் குமாரி உடல்நலம் பாதிக்கப்பட்டு, தன் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவருக்கான பாதிப்புகளை சரியாகக் கண்டறிய முடியாததால், பீகார் இந்திரா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், கஞ்சன் குமாரிக்கு இரு கிட்னிகளும் செயலிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு கிட்னி மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இது, சோகமான செய்தி இல்லை. இதன் பிறகு நடந்த சம்பவங்கள்தான் மிகவும் அதிர்ச்சியானவை.

கஞ்சன் குமாரியின் பெற்றோர், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிறுமிக்கு அறுவைசிகிச்சை செய்யப் போதுமான பணம் தங்களிடம் இல்லை எனக் கூறி, அவரை மீண்டும் தங்கள் கிராமத்தில் உள்ள சிறிய மருத்துவமனைக்கே அழைத்து வந்துள்ளனர். ‘வெளியிலிருந்து கிட்னி பெற நிறைய பணம் தேவைப்படும். பெற்றோரின் ரத்தமும் சிறுமியின் ரத்தமும் ஒன்றாக உள்ளது. எனவே, பெற்றோர் இருவரில் ஒருவர் சிறுமிக்கு கிட்னி அளித்தால் அவர் உயிர் பிழைத்துக்கொள்வார்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பெற்றோர், சிறுமிக்கு கிட்னி தர மறுத்துள்ளனர்.

`அவள் ஒரு பெண், அவளுக்கு யார் கிட்னி தருவார்கள்’ எனச் சிறுமியின் தந்தை ராமாஷ்ரே யாதவ் தெரிவித்துள்ளார். கஞ்சன் குமாரியின் தாயும் தன் மகளின் உயிரைக் காப்பாற்ற எந்த ஆர்வமும் காட்டவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அரசிடம் நிதியுதவி பெற்று, வெளியிலிருந்து கிட்னி வாங்கி அறுவைசிகிச்சை செய்ய முடியும். சிறுமியின் பெற்றோர் அதைச் செய்யக்கூட தயாராக இல்லை என்றும், பெண் என்ற ஒரே காரணத்துக்காக அவளின் இறப்புக்காகப் பெற்றோர் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கிட்னி
கிட்னி

கஞ்சன் குமாரியின் சோகமான நிலை வெளியான பிறகு, சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் ரத்த வகையைக் கூறி, ‘ என் ரத்தம் சிறுமியின் ரத்தத்துடன் ஒன்றாக இருந்தால், என் கிட்னியை எடுத்துக்கொள்ளுங்கள். நான் சிறுமிக்கு கிட்னி அளிக்க விரும்புகிறேன்” என்று கருத்து பதிவிட்டுவருகின்றனர்.