Published:Updated:

`நீங்க ஏன் ஹெல்மெட் போடல?'- அபராதம் விதித்த போலீஸை குறிவைத்துப் பிடித்த இளைஞர்

ராம் பிரசாத்

பீகாரில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய போலீஸாரின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

Bihar police
Bihar police

சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என இந்திய அரசியலமைப்பு கூறுகிறது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. சாலை விதிகளை மீறுபவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில், இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பயணித்த மதன் என்பவருக்கு 23,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. `நான் ஓட்டிவந்த ஸ்கூட்டியின் விலையே 15,000 தான். அபராதமாக 23,000 கேட்கிறார்கள்' எனப் பொங்கினார். ` ஹெல்மெட் போடாமல் வந்தேன். 1000 ரூபாய் வாங்குவார்கள் என நினைத்தேன். இப்படி 23,000 வாங்கிவிட்டார்கள்' எனவும் நொந்துகொண்டார்.

Bihar police
Bihar police

ஒடிசாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு 47,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, லைசென்ஸ் இல்லை, ஆவணங்கள் இல்லை எனக் கூறி இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்தனர். `நீங்கள் கேட்கும் ஆவணங்கள் வீட்டில் இருக்கு. இவ்வளவு பெரிய தொகையை என்னால் கட்ட முடியாது. ஜெயிலுக்கு அனுப்புங்க, என்னால் அபராதம் கட்ட முடியாது' என போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தார் அந்த ஓட்டுநர். புதிய வாகனச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர், கடந்த 8 நாள்களில் பல லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகாரில் ஹெல்மெட் அணியாமல் வந்த காவலருக்கும் இளைஞருக்கும் இடையே நடந்த மோதல், சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

` 5 காரணங்கள்...ரூ.86,500 அபராதம்..!' - லாரி ஓட்டுநருக்கு அதிர்ச்சி கொடுத்த டிராஃபிக் போலீஸார்

பீகார் மாநிலம் புக்ஸர் பகுதியைச் சேர்ந்தவர், கமல் குமார். புதிய வாகனச் சட்டத்தின்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு கமல் குமாருக்கு ரூ.11,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ரோஷன் குமார் என்ற காவலர்தான் இவருக்கு அபராதம் விதித்துள்ளார். வழக்கமாக இவரது குடியிருப்பைக் கடந்து செல்வதுதான் ரோஷன் குமாரின் வழக்கம். மறுநாள், ரோஷன் குமார் வருகைக்காக கமல் காத்திருந்தார். ஹெல்மெட் அணியாமல் வந்த காவலர் ரோஷனை தடுத்துநிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடக்க, அதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

கமல்குமாரின் சட்டையைப்பிடித்து அந்தக் காவலர் இழுத்துச் செல்வதோடு, கடுமையான சொற்களால் வசைபாடியுள்ளார். இந்த வீடியோ வைரலானதையடுத்து, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஒட்டிய காவலர் ரோஷன் குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு வீடியோவில், சாலையில் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கிய போலீஸார் ஒருவரைப் பார்த்து,` சகோதரா... ஹெல்மெட் எங்கே?' எனக் கேட்க, அந்த காவலரோ வண்டியை திருப்பிக்கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.