ஆன்மிகமும் அரசியலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்க முடியுமா? தீவிர எழுத்தும் நகைச்சுவைப் படைப்பும் ஒரே எழுதுகோலிலிருந்து உருவாகுமா? நாடக ஆர்வமும் பத்திரிகைக் காதலும் ஒரே மனசுக்குள் ஊற்றெடுக்குமா?

‘முடியாது; அது அவ்வளவு சாத்தியமில்லை’ என்று எண்ணிக்கொண்டிருந்தால், உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். மேலே சொன்ன அத்தனையையும் சாத்தியப்படுத்தியவர் ஒருவர் உண்டு. அவர் பெயர் டி.எஸ்.ஸ்ரீதரன்.

ஒருவர் பன்முகத் திறமையோடு இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை. பலர் அதனை நிகழ்த்திக் காட்டியும் இருக்கிறார்கள். சிறந்த எழுத்தாளராக இருப்பவர் சிறந்த சொற்பொழிவாளராகவும் ஜொலித்திருக்கிறார்; சிறந்த நடிகராக இருப்பவர் சிறந்த இயக்குநராகவும் மிளிர்ந்திருக்கிறார். ஆனாலும், அந்த இரண்டில் ஏதோ ஒன்றுதான் அவரை உச்சத்தில் ஏற்றிவைத்திருக்கும்; ஏதோ ஒன்றுதான் அவரைச் சட்டென்று நம் மனத்திரையில் காட்சிப்படுத்தும்.

ஆனால், மேலே சொன்ன அத்தனை துறைகளிலும் தம் முத்திரையைப் பதித்து, வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டவர் ஸ்ரீதரன். பத்திரிகை நுணுக்கங்களை விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்களிடம் நேரடியாகப் பயின்று, ஆனந்த விகடனின் இணையாசிரியர் பதவிக்கு உயர்ந்து, தரமான பல படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் அதில் இடம்கொடுத்து, அதை ஓர் உன்னத நிலைக்கு உயர்த்தி, வாசனிடமே ‘ஷொட்டு’ பெற்றவர் ஸ்ரீதரன்.

‘ஸ்ரீதர்’ என்னும் பெயரில் அவர் வரைந்த அரசியல் கார்ட்டூன்கள், அரசியல்வாதிகளைத் தோலுரித்தன.

ஆனந்த விகடனில் ‘கஸ்தூரி திலகம்’ என்னும் தலைப்பில் ஸ்ரீதரன் எழுதிய தொடர் கட்டுரை தான், காந்திஜியின் மனைவியார் அன்னை கஸ்தூரிபாவின் வாழ்க்கையில் புதைந்துகிடந்த பல அபூர்வ தகவல்களைச் சொன்னது. இது பின்னர் விகடன் பிரசுர புத்தகமாகவும் வெளியாகி பல பதிப்புகள் கண்டது. சில மாதங்களுக்கு முன்பும் இந்நூல், கஸ்தூரிபாவின் 150-வது ஆண்டினை முன்னிட்டுப் புத்தகமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

‘மெரீனா’ என்னும் புனைபெயரில் ஸ்ரீதரன் எழுதிய ‘தனிக்குடித்தனம்’, ‘ஊர் வம்பு’, ‘மாப்பிள்ளை முறுக்கு’, ‘சாமியாரின் மாமியார்’ எனப் பல நகைச்சுவை நாடகங்கள் விகடன் வாசகர்களை மகிழ்வித்ததோடு, பின்னர் மேடை நாடகங்களாகவும் நடத்தப்பட்டு, நேயர்களைக் குதூகலப்படுத்தின. ‘ரசிக ரங்கா’ என்னும் நாடகக் குழுவை தமது முதுமைப் பிராயத்திலும் திறம்பட நடத்தி, மறைவதற்குச் சில காலம் முன்பு வரை தனது நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தார் ஸ்ரீதர்.

தமது முத்திரை பதித்த எழுத்துகளால், ‘நகைச் சுவையும் ஆன்மிகமும் ஆனந்த விகடனின் இரு கண்கள்’ என வாசகர்களின் மனத்தில் ஆழப் பதியவைத்தவர் ஸ்ரீதரன். ‘பரணீதரன்’ என்னும் புனைபெயரில் ஸ்ரீதரன் ஆற்றியிருக்கும் ஆன்மிக எழுத்துச் சேவை அளப்பரியது.

‘மகா பெரியவா’ என ஆன்மிக அன்பர்களால் பெரிதும் போற்றி வணங்கப்படும் காஞ்சி மாமுனி ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமிகளிடம் அதீத அபிமானமும் பக்தியும் கொண்டிருந்தவர் ‘பரணீதரன்’. 1957-ம் ஆண்டு, காஞ்சிப் பெரியவா சென்னைக்கு விஜயம் செய்து, மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில் முகாமிட்டிருந்தார். அப்போது ஒவ்வொரு நாள் மாலையிலும் அவர் உபன்யாசம் செய்வது வழக்கம். பரணீதரன் தவறாமல் அங்கு ஆஜராகி, ஒரு மூலையில் அமர்ந்து, பெரியவாளின் பிரவசனத்தை கவனமாகக் கேட்பார். அறிவுபூர்வமான, ஆராய்ச்சிபூர்வமான, ஆதாரபூர்வமான அந்த ஆன்மிகப் பேருரைகள் பரணீதரனுக்குள் ஒரு பிரமிப்பையும் சிலிர்ப்பையும் உண்டாக்கின.

இதுபற்றி ஒருநாள் எஸ்.எஸ்.வாசனிடம் அவர் சிலாகித்துச் சொல்ல, “இதை விகடனில் தொடர்ந்து நீயே கட்டுரையாக எழுதேன்” என்று உத்தரவிட்டார் வாசன். ‘பெரியவாளின் உபன்யாசத்தை அதன் மேன்மை குறையாமல் தன்னால் எழுத்தில் வெளிப்படுத்த முடியுமா’ என்று பரணீதரனுக்குத் தயக்கம். இருந்தாலும் ‘பாஸ்’ உத்தரவிட்டுவிட்டாரே, மறுக்க முடியுமா? பெரியவாளின்மீதே பாரத்தைப் போட்டுவிட்டு, ‘சென்னையில் பொன்மாரி’ என்னும் தலைப்பில் ஐந்தாறு வாரங்கள் எழுதினார்.

அப்போது விகடனில் உதவி ஆசிரியராக இருந்த கோபு, அதுவரை சுவாமிகளை பரணீதரன் நேரில் சந்தித்ததில்லை என்பதை அறிந்துகொண்டு, “நாளை நான் ஸ்ரீமடத்துக்குப் போகிறேன். வாருங்கள், பெரியவாளை அருகில் தரிசனம் செய்வித்து, உங்களை அவருக்கு அறிமுகம் செய்கிறேன்” என்று அழைத்தார். அவ்வளவுதான், பதறிவிட்டார் பரணீதரன். சுவாமிகள் பத்திரிகை படிக்கும் பழக்கம் உள்ளவர், குறிப்பாக ஆனந்த விகடன் படிப்பார் என்பது தெரியும். எனவே, தாம் எழுதிய ‘பொன்மாரி’ கட்டுரைகளையும் அவர் படித்திருந்து, அதில் தாம் ஏதாவது அபத்தமாக எழுதியிருந்தால், அதுகுறித்து அவர் ஏதேனும் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற பயம்தான்.

அதன்பின், கோபாலபுரத்தில் முகாமிட்டிருந்தார் பெரியவா. விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு, ‘விஸ்வரூப’ தரிசனத்துக் காக, நண்பர் ‘சாவி’யுடன் ஸ்ரீமடத்துக்குச் சென்றார் பரணீதரன். அங்கே பந்தலில் ஓர் ஓரமாக இருவரும் நின்றிருந்தார்கள். சற்று நேரத்தில் ‘மேனா’வில் (சிறு பல்லக்கு) அந்தப் பக்கம் விஜயம் செய்தார் பெரியவா. சற்றுத் தள்ளி ‘மேனா’ நிற்க, திரை விலகியது. உள்ளிருந்து எட்டிப் பார்த்த பெரியவர், ‘சாவி’யை அருகில் வரும்படி கையசைத்து அழைத்து, “உன் பக்கத்திலே நிக்கறது யாரு?” என்று கேட்டார்.

“ஆனந்த விகடன்லே என்னோடு வொர்க் பண்றார். கார்ட்டூனிஸ்ட். ஸ்ரீதர்னு பேரு” என்று சாவி சொல்லவும், “ஓ… பரணீதரனா?” என்றார் பெரியவா.

அவ்வளவுதான்… அந்த மகான் தன்னை நினைவுவைத்திருந்து கேட்டதில் நெக்குருகிப் போய்விட்டார் பரணீதரன்.

அதன்பின், காஞ்சிப் பெரியவாளின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமாகி, அவர் குறித்து ஏராளமான கட்டுரைகளை ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் சில கட்டுரை களை, அச்சில் ஏறும் முன் அந்த மகானிடமே படிக்கக் கொடுத்து, திருத்தங்கள் செய்தும் வாங்கியிருக்கிறார். இந்த பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்!

1967-ல் ‘ஸ்ரீசைலத்தில் ஸ்ரீ சங்கரர்’ என்னும் தலைப்பில், காஞ்சிப் பெரியவரின் திக்விஜயம் குறித்து பரணீதரன் எழுதிய கட்டுரைத் தொடர் பரவசமூட்டக்கூடியது.

காஞ்சி முனிவரின் தரிசன அனுபவங்கள் குறித்து 1993-ம் ஆண்டு, ‘அன்பே… அருளே…’ என்னும் தலைப்பில் எழுதத் தொடங்கிய பரணீதரன், முதல் அத்தியாயம் வெளியான ஆனந்த விகடன் இதழை எடுத்துச்சென்று பெரியவாளிடம் சமர்ப்பித்து, ‘நான் எழுதும் இந்தத் தொடரில் பிழை எதுவும் நேராமல், முக்கியமான தகவல் எதுவும் விட்டுப்போகாமல், சிறப்பாக அமைந்திட பெரியவாதான் எனக்கு அருள வேண்டும்’ எனப் பிரார்த்தித்துக் கொண்டார்.

பெரியவாளிடம் பிரார்த்தித்துக்கொண்டது பலிக்காமல் போகுமா! தொடர் மிகச் சிறப்பாகவே வெளியாகி, வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொடர் வெளியாகிக்கொண்டிருக்கும்போதே, தமது பூதவுடலைத் துறந்து ஈஸ்வரனிடம் ஐக்கியமாகி விட்டார் மகாபெரியவா. அதுகுறித்தும் ‘அன்பே… அருளே…’ தொடரில் பரணீதரன் எழுதியிருக்கும் வரிகள் படிப்போரின் கண்களைக் கசியச் செய்யும்.

இமயம் முதல் குமரி வரை இந்தப் பாரதத் திருநாட்டில் பரணீதரன் போகாத க்ஷேத்திரங்களே இல்லையெனலாம். அந்த அனுபவங்களோடு இறையருளையும் மகான்களின் அன்பையும் தன் எழுத்துகளில் பொதிந்து... ஆலய தரிசனம், புனிதப் பயணம், புண்ணிய பாரதம், திருத்தலப் பெருமை, பத்ரி கேதார் யாத்திரை, அருணாசல மகிமை, கேரள விஜயம், கவி சொல்லும் கதைகள்… என இன்னும் பலப்பல தலைப்புகளில் தொடர் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார். அவற்றைப் படித்த ஆன்மிக அன்பர்கள் ஒவ்வொருவரும் தானே நேரில் அத்தனை தலங்களுக்கும் சென்று தரிசித்துவிட்டு வந்த உணர்வினை அடைந்தார்கள்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன், புதுமை எழுத்தாளர் சுஜாதா என இன்னும் எத்தனையோ ஜாம்பவான்களை அலங்கரிக்கக் கொடுத்து வைக்காத விருதுகளின் பட்டியலைத் தமிழ்கூறு நல்லுலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில், பரணீதரனை கௌரவிக்கும் பாக்கியமும், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது ஒன்றைத் தவிர, வேறு எதற்கும் கிட்டவில்லை.

அதனால் என்ன, ஆலய தரிசன அனுபவங்களை நமக்கெல்லாம் அமுதமென அள்ளி அள்ளி வழங்கிவிட்டு, காஞ்சி மாமுனி சித்தியடைந்த அதே மார்கழியில் அவரைத் தரிசிக்க விண்ணுலகு சென்றிருக்கும் ‘பரணீதரன்’, இனிவரும் காலமெல்லாம் ஆன்மிக நெஞ்சங்களில் கம்பீரமாய் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார்.