Published:Updated:

அணையாத அறிவுச்சுடர் ஆனைமுத்து!

ஆனைமுத்து
பிரீமியம் ஸ்டோரி
ஆனைமுத்து

விடுதலை இராசேந்திரன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது

அணையாத அறிவுச்சுடர் ஆனைமுத்து!

விடுதலை இராசேந்திரன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது

Published:Updated:
ஆனைமுத்து
பிரீமியம் ஸ்டோரி
ஆனைமுத்து
‘தோழர்’ என்று தன்னை அழைப்பதையே விரும்பினார் 96 வயது வரை வாழ்ந்து விடைபெற்ற தோழர் ஆனைமுத்து. கறுப்புச் சட்டையுடன் கண்ணாடிக் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த அவரின் விரல்கள், ‘பேனா’வைப் பிடித்திருந்தது, பெரியாரிய வரலாற்றாளர் என்ற அடையாளத்தைப் பறைசாற்றிக்கொண்டிருந்தது.

70 ஆண்டுக்காலம் பெரியார் கொள்கைப் பாதையில் அவர் பயணித்திருக்கிறார். 20 வயதில் 1945-ல் திராவிடர் கழகத்தில் இணைந்து, ‘குறள் மலர்’, ‘குறள் முரசு’ வார ஏடுகளை நடத்தி, வள்ளலார் சன்மார்க்கக் கொள்கையில் உடன்பட்டு, பிறகு கடவுள், ஜாதி, மத மறுப்பாளராகி, தனது 32-வது வயதிலேயே பெரியார் அறிவித்த அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று ஒன்றரையாண்டு சிறைத்தண்டனையும் ஏற்றவர்.

பெரியார் இறப்புக்குப் பிறகு திராவிடர் கழகச் செயல்பாடுகளில் அவருக்கு எழுந்த முரண்பாடு காரணமாக கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். தன் தோழர்களுடன் ‘பெரியார் சம உரிமைக் கழக’த்தைத் (1976) தொடங்கினார். பிறகு மார்க்சியத்தைக் கட்சியின் பெயரில் இணைத்து, ‘மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை’க் கட்சியாக (1984) மாற்றினார்.

ஆனாலும், அவரது முனைப்பான செயல்பாடுகள் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவதை நோக்கியே நகர்ந்தன. அதற்கான நியாயங்களையும் தரவுகளையும் ஆங்கிலம், இந்தி மொழிகளில் நூல்களாக்கி, உ.பி., பீகார், பஞ்சாப், டெல்லி, அரியானா போன்ற மாநிலங்களுக்குச் சென்று ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அரசியல் தலைவர்களிடம் விளக்கினார். நாடாளுமன்றத்தில் பேச வைத்தார். ஜனதா ஆட்சிக் காலத்தில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயை நேரில் சந்தித்தார். அதற்குப் பிறகே மண்டல் ஆணையத்தை நியமித்தார் மொரார்ஜி தேசாய். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் உயர்த்தி அறிவித்ததிலும் இவருக்கு மிகப் பெரும் பங்கு இருந்ததை அவரது வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

அணையாத அறிவுச்சுடர் ஆனைமுத்து!

‘பெரியார் சிந்தனை’களைத் தொகுப்புகளாக முதன்முதலாக வெளியிட்டது, அவரது மிகப் பெரும் சாதனை. குடி அரசு, திராவிடன், பகுத்தறிவு, விடுதலை உள்ளிட்ட இதழ்களைத் தேடி, தலைப்பு வாரியாகக் கருத்துகளைத் தொகுக்கும் கடுமையான பணி அது. பெரியார் இருந்த காலத்திலேயே அவரது பார்வைக்கு அந்தத் தொகுப்புகளைக் கொண்டு சென்று, பெரியாரின் ஒப்புதலைக் கையொப்பமாகப் பெற்று 1974-ல் வெளியிடப்பட்டவைதான் அந்த மூன்று தொகுப்புகள். அவற்றை மேலும் விரிவாக்கி விடுபட்டவற்றைத் தேடிப் பிடித்து 2010-ல் 20 தொகுதிகளாக வெளியிட்டார்.

வகுப்புவாரி உரிமை தொடர்பான ஆணைகள், வழக்குகள், தரவுகள், தலைவர்களுடன் சந்திப்புகள், போராட்டங்கள் அனைத்தையும் ஆண்டு, மாதம், தேதியோடு இணைத்தே எப்போதும் பேசுவார். அபார நினைவுத் திறன்.

1997-ம் ஆண்டில் அவர் தொகுத்து வெளியிட்ட `பெரியாரின் அயல்நாட்டுப் பயணக் குறிப்பு’ - குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு வரலாற்றுப் பதிவு. 1931 டிசம்பர் 13 முதல் 1932 நவம்பர் 7 வரை பெரியார், பல நாடுகளுக்கு 331 நாள்கள் பயணம் செய்தார். வெளிநாட்டுப் பயணங்கள் முழுமையாக மறுக்கப்பட்ட நெருக்கடியான காலம் அது. முழுதும் கப்பல் பயணம். ராமநாதன், ராமு என்ற இரு தோழர்கள் பெரியாருடன் சென்றனர். பிரெஞ்சு நாட்டு சரக்குக் கப்பலில் பயணத்தைத் தொடங்கிய பெரியார், தனது பயணத் திட்டத்தை ரகசியமாகவே வைத்திருந்தார். பயண அனுபவங்களைப் பெரியாரே தனது கையெழுத்துகளில் நாட் குறிப்புகளாக எழுதியிருக்கிறார் என்பதே வியப்புக்குரிய செய்தி. அவற்றில் 78 நாள்களுக்கான பயணக் குறிப்புகள் தோழர் ஆனைமுத்துவிடம் எதிர்பாராமல் கிடைத்தன. ஈரோட்டில் பெரியாரின் மூத்த சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகனும், ஈ.வெ.கி. சம்பத் தம்பியுமான செல்வராஜ் வீட்டில் ஒரு பெட்டிக்குள் அந்த ‘டயரி’ இருந்தது. அந்தக் குறிப்புகளை ஆனைமுத்துவிடம் நம்பிக்கையோடு செல்வராஜ் கையளித்தார். 1988-ல் கிடைத்த இந்தக் கருவூலத்தை எப்படியாவது வெளியிட்டு விடத் துடித்தார். ஆனால் 1997-ல்தான் வெளியிட முடிந்தது. நூலைப் பதிப்பிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் தனி நபர் கடனாக ஒரு லட்சம் ரூபாயைக் கேட்டபோது, வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது. ஏழாண்டுகள் காத்திருந்து நிதியைத் திரட்டி வெளியிட்டார். நூலின் முன்னுரையில் இதை அவர் பதிவு செய்திருக்கிறார்.

இதேபோன்று, பாரத ஸ்டேட் வங்கியிடம் கடன் பெற்று அவர் வெளியிட்ட 5 நூல் தொகுப்புகளில் ஒன்று இந்திய அரசியல் சட்டத்தை விமர்சனத்துக்குள்ளாக்கியிருந்த காரணத்தால், கடன் வழங்கிய வங்கி அதிகாரி மீது வங்கி உயர்மட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது என்பதும் தனிக்கதை. ‘பெரியாரியல்’ குறித்து அவர் எழுதிய இரண்டு தொகுப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மேற்பட்டப் படிப்புக்கான விருப்பப் பாடமாகத் தேர்வு செய்யப்பட்டு, பிறகு, இரண்டே ஆண்டுகளில் அந்த நூல் நீக்கம் செய்யப்பட்டது.

திருச்சியிலே தனிப் பயிற்சிக் கல்லூரி - அச்சகம் நடத்திவந்தார் தோழர் ஆனைமுத்து. அதனால் திருச்சியைத் தனது வாழ்விடமாக்கிக் கொண்டிருந்த பெரியாருடன் நெருக்கத்தையும், தொடர்ந்த உரையாடல்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ள முடிந்தது.

சமூக அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களுக்கிடையே அவர் பயணித்திருக்கிறார். காலனிய ஆட்சி; உலகப் போர்கள்; இந்தியாவில் ஆட்சி மாற்றம்; மொழி வழி மாநிலப் பிரிவினை என்ற காலங்களைக் கடந்து வந்திருக்கிறார். 90களில் பெரும் பாய்ச்சலை உருவாக்கிய ‘உலக மயமாக்கல்’ நடந்த காலத்திலும் பயணித்திருக்கிறார்.

‘மானுடப் பிறவியின் மகத்தான அடையாளம் பொதுத்தொண்டு ஒன்று மட்டுமே’ என்ற பெரியாரின் கோட்பாட்டை உறுதியாகப் பற்றிக் கொண்டவர்கள் வாழ்க்கையின் இலக்கையும் அதற்கான அடையாளத்தையும் எட்டி விடுகிறார்கள். தோழர் ஆனைமுத்து 45 ஆண்டுகளாக சக தோழர்கள் ஆதரவுடன் நடத்திவந்த ‘சிந்தனையாளன்’ மாத இதழுக்கு ஒவ்வொரு ஜனவரியிலும் ஆண்டு மலரை வெளியிடுவார். அதற்குக் கட்டுரை கேட்டுக் கடிதங்கள் எழுதுவார். தொடர்ந்து எனக்கு எழுதிய கடிதங்களில் கட்டுரைத் தலைப்பை அவரே கைப்பட எழுதிக் கையெழுத்திடுவார். ஆனால் நான் எழுதிய இந்தக் கட்டுரைக்கு அவரே தலைப்பாக மாறி நிற்பதுதான் - பெரும் துயரம். வாழ்க ஆனைமுத்து!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism