Published:Updated:

வெளியேறிய லட்சுமணன்.. என்ட்ரி கொடுத்த நயினார்! - நெல்லை சட்டப்பேரவைத் தொகுதி நிலவரம்

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து ஏ.எல்.எஸ்.லட்சுமணன் வெளியேறிய நிலையில் பா.ஜ.க-வின் நயினார் நாகேந்திரன் மையத்துக்குள் வந்தார்.

நெல்லை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் ஏ.எல்.எஸ்.லட்சுமணனை எதிர்த்து பா.ஜ.க துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் களமிறங்கினார். ஏற்கெனவே அ.தி.மு.க-வில் இருந்த நயினார் நாகேந்திரன் 2001 மற்றும் 2011 ஆகிய இரு தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடம்
வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடம்

அ.தி.மு.க-வில் அமைச்சராகவும் இருந்த நயினார் நாகேந்திரன், நெல்லை சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். ஏற்கெனவே இந்தத் தொகுதி மக்களுடன் நன்கு அறிமுகமானவராக இருந்த அவருக்கு இந்தத் தேர்தல் சாதகமானதாக மாறியிருந்தது. ஆனாலும் அவர் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் வாக்குகள் எண்ணும் மையத்துக்கு வரவில்லை.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலாகவே பா.ஜ.க-வின் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெற்றிருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த தி.மு.க வேட்பாளரான ஏ.எல்.எஸ்.லட்சுமணன் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார்.

வாக்கு எண்ணும் மையத்தில் நயினார் நாகேந்திரன்
வாக்கு எண்ணும் மையத்தில் நயினார் நாகேந்திரன்

முன்னிலை தொடர்வதைக் கேள்விப்பட்ட நயினார் நாகேந்திரன் சில சுற்று எண்ணிக்கை முடிவுகள் தெரியவந்ததும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்தார். அவரைப் பாரத்ததும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த அ.தி.மு.க மற்றும் பா.ஜக-வினர் உற்சாகம் அடைந்தனர்.

இதனிடையே, 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தபோது முகவர்களின் கையில் இருக்கும் 17-சி ஃபார்மில் உள்ள விவி பேடில் உள்ள எண்ணுக்கும் வித்தியாசம் இருந்தது. அதை தி.மு.க முகவர்கள் சுட்டிக் காட்டியதுடன், அந்த மெஷினில் ஏற்பட்ட குழறுபடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நயினார் நாகேந்திரன்: பா.ஜ.க பட்டியல் அறிவிப்புக்கு முன்பே வேட்புமனுத் தாக்கல்! - என்ன காரணம்?

ஆனால், வாக்குப் பதிவின்போது அதிகாரிகள் தவறாக எழுதிவிட்டதாக அதிகாரிகள் சமரசப்படுத்த முயன்றனர். தி.மு.க-வினர் அந்த சமாதானத்தை ஏற்காததால் சில நிமிடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

அடுத்த கட்டுரைக்கு