Published:Updated:

கருத்துச் சுதந்திரம்... கழுத்தை நெரிக்கிறதா புது உத்தரவு?

கருத்துச் சுதந்திரம்
பிரீமியம் ஸ்டோரி
கருத்துச் சுதந்திரம்

பொதுவாக ஒரு குற்றம் நடந்து முடிந்த பிறகுதான் சட்டங்களின் வழியே தீர்வுகாண முடியும்.

கருத்துச் சுதந்திரம்... கழுத்தை நெரிக்கிறதா புது உத்தரவு?

பொதுவாக ஒரு குற்றம் நடந்து முடிந்த பிறகுதான் சட்டங்களின் வழியே தீர்வுகாண முடியும்.

Published:Updated:
கருத்துச் சுதந்திரம்
பிரீமியம் ஸ்டோரி
கருத்துச் சுதந்திரம்
கட்டுப்பாடு என்கிற பெயரில் புதுப்புது உத்தரவுகளைக்கொண்டுவரும் மத்திய பா.ஜ.க அரசின் அடுத்த மூவ், ‘இணையவழியிலான ஊடகம், இனி தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ்க் கொண்டுவரப்படும்’ என்ற அதிரடி உத்தரவு! ‘ஃபேஸ்புக், ட்விட்டரில் ஆரம்பித்து யூடியூப், ஓடிடி வரை டிஜிட்டல் ஊடகத் தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கு என அரசு அமைப்போ, தனிச் சட்டமோ இதுவரை இல்லை; உண்மைக்கு மாறான செய்திகளும், கலாசாரச் சீர்கேடுகளை உருவாக்கும் தகவல்களும் பரவிவருவதைத் தடுப்பதற்காகவே இப்படியோர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறோம்’ என்கிறது மத்திய பா.ஜ.க அரசுத் தரப்பு. ஆனால், ‘தனி மனிதர்களின் ஊடகச் சுதந்திரத்தை முடக்குவதும், அரசுக்கு எதிரான கருத்துகளைத் தடுப்பதுமே இந்த உத்தரவின் நோக்கம்’ என்று கொந்தளிக்கிறார்கள் அறிவுதளத்தில் இயங்குவோர்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து நம்மிடம் பேசினார் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இயங்கிவரும், எழுத்தாளரான ஆதிமூலகிருஷ்ணன். ‘‘தனி மனிதர்களின் ஊடகமாக வளர்ந்து நிற்கும் சமூக வலைதளங்களில் மாற்றுக் கருத்துடன் செயல்படுவோரின் கழுத்தை நெரிப்பதுதான் இந்தத் தணிக்கை நடவடிக்கையின் நோக்கமாகத் தெரிகிறது. அதுபோலவே, ஓடிடி தளங்களுக்கான கட்டுப்பாடு என்பதும், படைப்புச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தலாகவே தோன்றுகிறது. சாதாரண மனிதனின் சிந்திக்கும் திறனையும், அரசியல் விழிப்புணர் வையும் தடுப்பதுதான் இதன் விளைவுகளாக இருக்கும். பொய்ச் செய்திகளை, வதந்திகளைப் பரப்புவோரை இது கண்டிக்கும், கட்டுப்படுத்தும் என்றால் வரவேற்கலாம். ஆனால், கருத்துச் சுதந்திரத்தை நெரிக்கும் என்றால், அறிவுதளத்தில் இயங்குவோர் இதை நிச்சயம் எதிர்க்கவே செய்வார்கள்’’ என்றார்.

ஆதிமூலகிருஷ்ணன் - கார்த்திகேயன் - மாணிக் தாகூர் - வானதி சீனிவாசன்
ஆதிமூலகிருஷ்ணன் - கார்த்திகேயன் - மாணிக் தாகூர் - வானதி சீனிவாசன்

மத்திய அரசின் உத்தரவை வரவேற்றுப் பேசுகிறார் ‘சைபர் க்ரைம்’ வழக்கறிஞர் கார்த்திகேயன். ‘‘பொதுவாக ஒரு குற்றம் நடந்து முடிந்த பிறகுதான் சட்டங்களின் வழியே தீர்வுகாண முடியும். மாறாக, குற்றம் நடப்பதற்கு முன்பே தடுத்து நிறுத்துவதற்கு அரசின் இது போன்ற செயல்பாடுகள் அவசியம். எனவே, மத்திய அரசின் இந்த உத்தரவை வரவேற்கிறேன். ஏனெனில், அங்கீகாரம் பெற்ற ஊடகத்துறையினர் மட்டுமே தாங்கள் ஆரம்பித்திருக்கும் யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதள செய்திப் பக்கங்களில் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் பொறுப்புடன் நடந்துகொள்கின்றனர். ஆனால், தனிப்பட்ட நபர்கள் நடத்திவரும் இணையதளச் செய்திப் பக்கங்களில் எந்தவிதக் கட்டுப்பாடு களோ, விதிமுறை களோ பின்பற்றப்படுவதில்லை. தங்களுக்கு நிறைய லைக்ஸ், ஃபாலோயர்ஸ் வர வேண்டும் என்பதற்காகவே உறுதி செய்யப் படாத, அதிகாரபூர்வமற்ற தகவல்களை யெல்லாம் பதிவேற்றிவிடுகிறார்கள்’’ என்று சொல்பவர், ‘‘இந்திய அரசே தணிக்கைக் கட்டுப்பாடுகளை நேரடியாகக் கண்காணித்துவந்தால், அது வரவேற்கத்தக்கது. மாறாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் இந்தத் தணிக்கை விவகாரங்கள் வந்து விட்டால், அது மிகவும் ஆபத்தானது!’’ என்று எச்சரிக்கவும் செய்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர், ‘‘ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் இன்றைக்கு மத்திய அரசை ஆட்டுவிக்கிறது. அவர்கள் எந்தவொரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும், நல்லது செய்வதுபோல் மேலோட்டமாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால், பின்னணியில் அவர்களுக்கான உள்நோக்கமே பிரதானமாக இருக்கும். மத்திய ஆட்சியாளர்கள் ஏற்கெனவே தேசிய அளவிலான பெரிய ஊடக நிறுவனங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டார்கள். எனவே, அரசுக்கு எதிரான உண்மைச் செய்திகளை வெளியிட முடியாத செய்தியாளர்கள், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியே தங்கள் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இந்தநிலையில், இதையும் தணிக்கை என்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கிறது என்றால், இதன் பின்னணியிலுள்ள நோக்கம் என்ன?

திரைப்பட தணிக்கை விஷயங்களில் என்னென்ன முறைகேடுகள் நடக்கின்றன என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். இணையவழிச் செய்திப் பக்கங்களில் தவறுகள் நடப்பதாக அரசு உணர்ந்தால், அதற்குரிய சைபர் க்ரைம் சட்டங்களைத் தானே வலுப்படுத்த வேண்டும்... அதைவிடுத்து, தணிக்கை என்ற பெயரில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?’’ என்று கேள்வியெழுப்பினார்.

கருத்துச் சுதந்திரம்... கழுத்தை நெரிக்கிறதா புது உத்தரவு?

இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசுமீது முன்வைக்கப்படும் சந்தேகங் களுக்கு விளக்கம் கேட்டு அகில இந்திய பா.ஜ.க மகளிரணித் தலைவரும், வழக் கறிஞருமான வானதி சீனிவாசனிடம் பேசினோம். ‘‘நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களோ அல்லது சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விஷயங்களோ இணையத்தில் விரைவாகப் பரவிவிடுகின்றன. எனவே, மாறிவரும் இன்றைய சூழலுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அவசியம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கான அடிப்படை உரிமைகளைக் கொடுத்திருக்கிறது; அதைப் பாதுகாப்பதற்கு நீதிமன்றங்களும் இருக்கின்றன. எனவே, தணிக்கை நடவடிக்கை மக்களின் தனிப்பட்ட கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகச் சந்தேகம் எழுப்புபவர்களுக்கு, ‘தேவையில்லாத அச்சம் வேண்டாம்’ என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்!’’ என்றார் தெளிவாக.