Published:Updated:

’எனக்கு எந்த நோயும் இல்லை; நான் நல்லா இருக்கேன்!” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா

அமித் ஷா
அமித் ஷா

எனது உடல்நலம் குறித்து வெளியாகும் தகவல்கள் வதந்தி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

அமித் ஷா பா.ஜ.கவின் கிங் மேக்கராக அறியப்படுபவர். தனது அதிரடியான வியூகத்தால் பல மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர். எப்போதும் கம்பீரமாக தோற்றமளிக்கும் அமித் ஷா கடந்த சில நாள்களாக உடல் எடை குறைந்து சோர்வாக காட்சியளிப்பதாக சமூகவலைத்தளத்தில் பேச்சுகள் எழுந்தது. உள்துறை அமைச்சர் என்ற முறையில் மாநில முதல்வர்கள் மற்றும் மருத்துவர்களுடன் பிரதமர் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ளும் போது அமித் ஷாவும் உடன் இருந்தார்.

அமித் ஷா
அமித் ஷா

இந்த புகைப்படங்களை பதிவிட்ட சிலர் அமித் ஷாவின் முகம் பொழிவு இழந்து காணப்படுகிறது. அமித் ஷாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அதனால் அவர் இப்படி காணப்படுகிறார் என சமூகவலைத்தளத்தில் ஒரு பேச்சு எழுந்தது. இந்நிலையில் தனக்கு எதுவும் இல்லை நான் நன்றாகத்தான் இருக்கிறேன். என்னுடைய வேலையில் கவனம் செலுத்த விடுங்கள் என அமித் ஷா தனது ட்விட்டர் பதிவு மூலம் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அமித் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். என்னுடைய பணிகளில் நான் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். எனது உடல்நலம் குறித்து வெளியாகும் வதந்திகள் குறித்து சமீபத்தில்தான் எனக்கு தெரியவந்தது. இதுபோன்ற சூழலில் வதந்திகள் குறித்து கவனம் செலுத்த விரும்பவில்லை. இந்த வதந்திகளால் மகிழ்ச்சியடையும் சிலர் அந்த கற்பனையில் இருந்துவிட்டு போகட்டும்.

அமித் ஷா
அமித் ஷா

இதில் கவனம் செலுத்தவோ விளக்கம் கொடுக்க தேவையில்லை என எண்ணினேன். ஆனால் லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களும் மற்றும் என் மீது அக்கறை கொண்ட தலைவர்களும் கவலை தெரிவித்தனர். அவர்களின் வருத்ததையடுத்து நான் இப்போது விளக்கமளிக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. நான் முழு உடல்நலத்தோடு இருக்கிறேன். இந்து மத நம்பிக்கையின்படி இதுபோன்ற வதந்திகள் மக்களை மிகவும் ஆரோக்கியமாக்குகின்றன. எனவே எனது உடல்நலம் குறித்த ஊகங்களை நிறுத்துவிட்டு நான் வேலையில் கவனம் செலுத்த அனுமதிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக" அந்த பதிவில் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு